மகளிர் தினம்

வெளிர்ந்து போன
உச்சி நேரம்
மீண்டும்... மீண்டும்
ஏதோ ஒரு எண்ணாக
ஆறாகவோ..
ஜந்தாகவோ...
தாயமகாவோ..
உருட்டப்படும் தாயக்கட்டை

என்றோ மரப்பலகையில்
வரைந்த கட்டங்கள்
இன்றும் ஆணிச் சுவட்டினை
வெளிக்காட்டியபடி...

கூட்டலும்...
கழித்தலும்...
வகுத்தலும்..
சாதாரணமாக

பக்கத்து வீட்டு
பாமரன் முதல்
மச்சுவீடு
மைனர் வரை
அலசப்படுகிறார்கள்...

தாயம் விழுந்தபோது
தண்ணீர் கதைகளும்
கண்ணீர் கதைகளும்
அவர்கள் உலகமாக
அந்த அந்திசாயும் நேரத்தில்
ஆதவனின் ஓய்வு நேரத்தில்
அவர்களின் அடுப்படி வேலைகள்
ஆரம்பமாகின்றன...

அவர்களின் உலகம்
அடுப்படி மட்டுமேயாகிட
எந்த தினம்
எந்த நிறம் பூசிக் கொண்டு
எந்த பெயரை வைத்துக் கொண்டு
வந்தால் என்ன...

தாயத்தினை யார் உருட்டுவது
அவர்களின் உலகம்
அடுப்படி தாண்டிட...?

எழுதியவர் : சா.மனுவேந்தன் (7-Mar-19, 8:41 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : makalir thinam
பார்வை : 9755

மேலே