மைக்ரேன்
ஒரு குண்டூசி விழுகிறது இடி முழக்கமாய் என் மூளையினுள்
எங்கோ ஆணொருவன் புளிக்குழம்பைச்
சுண்ட வைக்கிறான்
தீயும் வரை சுட விட்டிருக்கிறான் அவன்
ஆணாய் தானிருப்பான்
வீட்டின் அழகிற்காய் நான் தொங்கவிட்ட
தொடர் மின்விளக்குகள் என் இடக்கண்ணை
நோண்டிக் கொண்டிருக்கின்றன கூரிய நுனிகளால்
ஆசை ஆசையாய் நான் வெட்டி ஒட்டிய
என் கைப்பேசியின் அழைப்பினொலியை
இம்முறை கொலைவெறியுடன்
காண்கிறேன்
என் விருப்பமான காதல் பாடலில்
இத்தனை மேளங்களை ஏன் அடித்திருக்கிறானென்று
எரிச்சல் அடைகிறேன்
என் மகள் அப்பா என்று காதினுள்
கிசுகிசுக்கிறாள் அது இருநூறு டெசிபல்
அளவைக் கடக்கிறது என் செவித்திரையில்
இறுதியின் நான் அடைந்துவிட்டேன்
இந்த வாரத்திற்கான மைக்ரேனை