ஒரு பேருந்து பேசுகிறது

வெயிலென்றும்
மழையென்றும்
நான் பார்த்ததில்லை ...
வியர்த்தாலும்
நனைந்தாலும்
நான் ஓய்ந்ததில்லை ..

என் பாரம்
எனக்கிருக்க..
எவ்வளவு பாரம்
வந்தாலும் நான்
பயந்ததில்லை
ஓடியதும் இல்லை ...

நீண்ட நாட்களுக்கு பின்
சந்திக்கப்போகும் நண்பர்கள் ...

நிறைய ஊடலுக்குப் பின்
கூடப்போகும் காதலர்கள் ...

பல ஆண்டு காத்திருப்புக்குப் பின்
நேர்காணல் செல்லும் நேர்மையாளர்கள் ...

தன் குடும்ப சுமை தாங்க
சுமைதாங்கியான பல ஆண்கள் ...

தன் கவுரவம் காக்க
தானே முயன்றிடும் பல பெண்கள் ...

பல தடை தாண்டியும்
திருமணபந்தம் தேடியே சிலர் ...

கடவுளின் பிள்ளைகளை
கருவில் சுமந்தபடியே ஒரு சிலர் ...

வாழ்க்கையை தேடியே
வழுக்கை விழுந்த பலர் ...

வழுக்கை விழுந்தும்
தன் வழக்கு முடியாத சிலர் ...

திருடிப் பொருள் சேர்க்கும் சிலர் ...
திருந்தி வாழத் தொடங்கும் பலர் ...

மனிதரில் தான்
எத்தனை வண்ணங்கள்...
எத்தனை மர்மங்கள்...

ஒவ்வொருவரும்
தன் சுயநலம் கருதி
எண்ணில் பயணிக்கிறார் ...
நானோ
எல்லோரையும் பத்திரப்படுத்தி
அவரவர் பாதைகளில் கொண்டு சேர்க்கிறேன் ...

என்னுடைய சுயநலம்
பொதுநலமே...

நிறம் பார்க்காமல்
குணம் பார்க்காமல்
பணம் பார்க்காமல்
பகைமை பார்க்காமல்
அவர்கள் நலம் மட்டும்
பார்க்கும் நானொரு
பொதுநலவாதியே ...

நான் சாதி பார்ப்பதில்லை
என்னையோ சாதிச்சண்டையில்
சமாதி ஆக்குகிறார்கள் ...?

நான் மதம் பார்ப்பதில்லை
என்னையோ மண்ணுக்குள்
புதைத்து விடுகிறார்கள் ...

நான் அரசியில் செய்வதில்லை
என்னையோ அரசியலுக்காக
அஸ்தி யாக்கி விடுகிறார்கள் ...

பொதுநலமொன்றே
என் சுயநலமென்ற
தத்துவம்
அவர்களுக்கு புரியவில்லையா ?
இல்லை புடிக்கவில்லையா ?

எழுதியவர் : வருண் மகிழன் (குணா ) (15-Mar-19, 3:09 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 199
மேலே