வேர்த்திரள்
அடர்வனத்தில் மரமானேன் அமைதியுடன் வாழ்ந்திருந்தேன்
கடவுளுக்கு நன்றிசொன்னேன் கானகத்தில் படைத்ததற்கு !
படர்ந்தவிந்த உலகினிலே பகுத்தறியும் மானுடரின்
இடர்களைய முடிவெடுத்தேன் இயன்றவரை இனத்துடனே !!
பல்லுயிர்க்கும் புகலிடமாய்ப் பயனளிக்கும் வனத்தினிலே
நல்லதொரு துணையெனவே நலமளித்துக் களித்திருந்தேன் !
இல்லையெணா(து) உயிர்வளியை ஈந்துதவி புரிந்திருந்தேன்
பொல்லாங்கு நினைப்போரைப் புன்னகையால் வென்றேனே !
நிலச்சரிவு நிகழாமல் நிமிர்ந்தபடி நிறுத்திவிட்டேன்
அலைக்கழிக்கும் மண்ணரிப்பை அடியோடு தடுத்துவிட்டேன்
சலனத்தால் மிகக்குளிர்ந்து தருவித்தேன் வான்மழையை
மலரனைய மென்மனத்தில் மௌனமொழி பகர்ந்தேனே !
விலங்குகளும் பறவைகளும் விளையாடும் களமானேன்
தலைமகளாய்க் கானகத்தில் தண்ணிழலில் அரவணைத்தேன்
நிலையில்லாப் பிறவியென நினைத்ததில்லை கனவினிலும்
வலைவீசிக் கொண்டுசெல வந்தானோ கூற்றுவனே !
வெண்சுருட்டை அணைக்காமல் வீசிவிட்டுச் சென்றவனால்
கண்பார்க்கும் நேரத்தில் கனல்பற்றி எரிந்ததம்மா !
விண்முட்ட உயர்ந்தவென்றன் வேர்த்திரளும் அழிந்ததம்மா !
புண்பட்டு மாய்ந்தேனே புகையோடு கரைந்தேனே !
பாவியரே உம்மாலே பயனற்றுப் போனேனே
ஆவியெலாம் துடிக்கிறதே அனைத்துயிரும் கருகினவே !
ஏவியவர் யார்யாரோ ? இறைவாநீ தானறிவாய்
தீவினையைச் செய்தவர்க்குத் தீர்ப்பளிக்க விரைவாயே !!
சியாமளா ராஜசேகர்