இந்து கடவுள் பசுங்கிளியும் முஸ்லிமின் பசுவும்

தென் மாவட்டங்களில் சாஸ்தா வழிபாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் அன்று சாஸ்தா கோவிலுக்கு சென்று வழிபடுவது தமிழக தெற்கு மாவட்ட மக்கள் தவறாது கடைபிடித்து வரும் நடை முறையாகும். இது வட தமிழ் மாவட்டங்களில் குலதெய்வ வழிபாடாக இருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட சாஸதாவை வழிபடுபவர்கள் பொதுவாக அந்த சாஸ்தா அமைந்து உள்ள ஊரிலிருந்து பிழைப்புக்காக வெளியூர் சென்றவர்களா இருப்பார்கள்.கணவன் குடும்பத்தாரின் சாஸ்தாவே பெண்களுக்கு திருமணத்துக்கு பின் சாஸ்தாவாகும் (ஆணாதிக்கம் கடவுள் வழிபாட்டில் கூட).

காலபோக்கில் பலதலைமுறையாக வெளி மாவட்டங்களில் வாழ்ந்த திருநெல்வேலி மாவட்ட மக்கள் தங்களது சாஸ்தா சாமி யார் என தெரியாமல் போனால் அவர்கள் பாபநாச மலையில் அமைந்துள்ள சொரி முத்து நாயனார் கோவிலுக்கு சென்று வழி படுவார்கள். பங்குனி உத்திரம் அன்று சொரி முத்து நாயனார்கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வழிபாடு செய்வார்கள். அன்றைக்கு அந்த பகுதியே மனிதர்களால் நிரம்பி இருக்கும் . கழிப்பறை வசதி யில்லாததால் பெரும் சுகாதார கேடாகவும் இருக்கும்.

சாஸ்தாவை அய்யப்பனி்ன் அவதாரமாக சொல்வாரும் உண்டு.

என்ககு சின்ன வயதிலிருந்து கடவுள் நம்பிக்கை இல்லாமல் போயிற்று . அதனால் எங்க சாஸ்தா கோவிலுக்கு சென்றது கிடையாது. ஒரு பங்குனி உத்திரம் அன்று எனது தந்தை எங்களது சாஸ்தா கோவிலுக்கு அழைத்து சென்றார். நாங்கள் பிரான்சேரியில் இறங்கி ஆற்றாங்கரையில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு சென்ற ஞாபகம். பின்னாளில் தான் அந்த சாஸதாவின் பெயர் பசுங்கிளி சாஸ்தா என தெரிந்தது. எங்க பெரியப்பாவின் பெயர் பசுங்கிளி என வைக்கப்பட்டதன் காரணம் தெரியவந்தது. எங்க ஒன்னுவிட்ட அக்காவின் பெயரும் பசுங்கிளிதான். நான் சென்னை வந்த பிறகு ஒவ்வொரு பங்குனி உத்திரம் வரும் போது சாஸ்தா கோவில் சென்று எனது உறவுகள் அனைவரையும் பார்கக வேண்டும் என தோன்றும் ஆனால் சோம்பேறிதனத்தாலும் கடவுள் நம்பிக்கை இன்மையாலும் போனாதில்லை.

இப்படியிருக்க கடந்த ஆண்டு என் மனைவி ஊருக்கு போகும் போது சாஸ்தா கோவிலுக்கு செல்ல வேண்டு மென வற்புறுத்தினார். சரி பார்க்கலாம் என்று ஒவ்வொரு முறை போகும் போது எதாவது தாக்காட்டி சாஸ்தா கோவிலுக்கு போகாமல் வந்து விடுவேன் ஏனென்றால் சின்ன வயதில் போனது வழி தெரியாவிட்டால் அசிங்கமாக போய்விடும் என்பதால் தவிர்த்து விடுவேன். சாஸ்தா கோவில் போக வேண்டுமென அழுத்தி என் மனைவி வற்புறத்த காரணம் என்ன என அவரிடம் கேட்க. பக்கத்து தெரு அய்யப்ப பூஜைக்கு சென்ற போது அங்கு குரு சாமி ஒரமாக நின்ற என் மனைவியை அழைத்து நீங்க உங்க குலதெய்வம் கோவிலு்ககு செல்லாமல் இருக்கிங்கு போய்வாஙக என சொல்லி இருக்கிறார் . அதை போல் அம்மன் கோயில் கூழ் ஊற்று விழாவில் சாமி ஆடியவர் எல்லாரையும் ஒன்றும் சொல்லாமல் கூட்டத்தின் கடைசியில் இருந்த என் மனைவியை அழைத்து சாஸ்தா கோவிலுக்கு போகாமல் இருக்கிங்க போய்வாங்க என சொல்லிருக்கிறார். அதை போல் .இன்னொரு கோவிலிலும் சொல்ல என் மனைவிக்கு கூட்டத்தில் தன்னை மட்டும் அழைத்து சொல்லுகிறார்களே என பயந்து என்னிடம் சாஸ்தா கோவிலுக்கு போக வேண்டுமென வற்புறுத்தியுள்ளார். நான் என் மனைவியை இது பற்றி கிண்டல் செய்த போதும் அவங்க உறுதியாக இருந்ததால் இந்த முறை ஊருக்கு சென்ற போது சாஸ்தா கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தேன்.

எங்க சொந்த காரர் ஒருவரிடம் சாஸ்தா கோவிலுக்கு போகிற வழி கேட்க அவர் பசுங்கிளி சாஸ்தா கோவில் கோபால சமுத்திரம் எனும் ஊரில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது என சொல்லி பூசாரியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார் . பூசாரிக்கு நாங்க வருவதை தெரிவித்து வி ட்டு நாங்கள் ஒரு வாடகை வண்டி பிடித்து கோபால சமுத்திரம் சென்றோம். பூசாரியிடம் பூஜைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வாருங்கள் நான் பணம் தந்த விடுகிறேன் என சொல்லி விட்டு அவர் சொன்ன வழியில் சென்றோம. கார் மட்டும் செல்லகூடிய அளவு உள்ள வழியில் சென்று கொண்டு இருந்த போது ஒரு பூசாரி செல்ல அவரை கோயில் எங்கிருக்கு என கேட்க அவர் நான் அந்த கோயில் பூசாரி தான் அங்குதான் செல்கிறேன் என சொல்ல, எனக்கு அப்ப நம்ம் போன் பண்ணியவர் வேறு சாஸ்தாவின் பூசாரியா என சந்தேகம் வந்து அவரிடம் கேட்க, ஆமாங்க தான் கமிட்டியிலிருந்து பணியமர்த்தப்பட்ட பூசரரி என்றும் , நான் தொலைபேசியில் பேசிய பூசாரி வழக்கமான பூசாரி என சொல்ல அவரையும் வண்டியில் ஏற்றி கொண்டு கோயிலை அடைந்தோம்.

கோயில் சுத்தமல்லி அணையிலிருந்து வரும் வாய்க்காலுக்கும் தாமிரபரணி ஆற்றுக்கும் நடுவே வயல்வெளியில் ஒரு சோலையில் அமைந்து இருந்தது.இப்பொழுது தான் பங்குனி உத்திரம் முடிந்து இருந்ததால் நன்றாக வெள்ளை அடித்து இருந்தது. புதிதாக தங்கும் அறைகள் இரண்டு கட்டப்பட்டு இருந்தது எனக்கு பெரிய ஆச்சிரியமாக இருந்தது. இங்கு வந்து யார் தங்க போகிறார்கள் என மனதில் ஒரு வினா. நாஙகள் வண்டியை விட்டு இறங்கி நிற்கும் பொழுது இன்னொரு பூசாரியும் வந்து விட்டார். அவர் ஆற்றில் சென்று குளித்து விட்டு பூஜை செய்ய ஆயத்தமாக நானும் என் மகளும் ஆற்றில் சென்று காலை நனைத்து விட்டு வந்தோம்.

நான் பசுங்கிளி சாமி கிளி தலையுடன் மனித உருவில் இருக்கும் என என்மனதில் ரொம்ப நாளாக உருவகபடுத்தி இருந்தேன் .மாறாக அருள்மிகு பசுங்கிளி சாஸ்தாவோ மனித உருவில் இருக்க எனக்கு பெரிய ஆச்சரியமாக போயிற்று. பூசாரி இருவரும் பூசெய் செய்து முடித்து திருநீறு கொடுத்து சிறப்பாக கவனி்த்தார்கள். அதே வளாகத்தில் இருந்த மாடன் மாடத்தி சாமிக்கும் பூசெய் செய்தார். மாடன் மாடத்தி மற்ற சுடலை மாடன் போல் இல்லாமல் மாடனும் மாடத்தியும் மாட்டின் தலையுடன் மனித உருவில் காட்சி அளித்தார்கள் இப்படியான சாமிசிலைகளை நான் பார்த்தில்லை. கொஞ்ச இளைப்பாறி போது சாஸ்தாவின் புராணத்தை கேட்க நான் எதிர்பாராத திசையில் கதை வந்தது.

முஸ்லிம் ஒருவரின் பசுமாடுகள் பயிர்களை மேய்ந்து விட கோபம் கொண்ட ஒருவர் பசுமாட்டை அரிவாளால் வெட்ட வர பசுங்கிளி சாஸ்தா தடுக்க சாஸ்தாவின் இரண்டு கைகளும் துண்டாகி விட்டன.அன்றிலிருந்து கோபால சமுத்திர மக்கள் தங்களது சாஸ்தாவாக அவரை வணங்கினார்கள் என சொன்னார். பசுங்கிளி சாஸ்தா என்கிற பெயருக்கு இந்த கதை பொருந்த வில்லையென நான் விழிப்பதை பார்தது விட்டவர் போல் பூசாரி பசுங்கிளி சாஸ்தாவிற்கு அணிவித்திருந்த மாலைகளை விலக்கி காட்ட சாஸ்தாவுக்கு இரண்டு கைகளும் வெட்டிவாறு சாஸ்தா சிலையிருக்க நான் உண்மையில் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. படையெடுப்புகளால் சிதிலமான சாமி சிலைகளை பார்தத எனக்கு சிலையே இப்படி வடிக்கப்பட்டு இருப்பது பெரிய விஷயமாக பட்டது. இன்னும் நம்ப வில்லையா என்பது போல் கருவறை அருகில் ஒரு மனித சிலையை காட்டி இந்த சிலை பசுமாட்டு சொந்தக்காரர் ஆன முஸ்லிம் சிலை என்றார். அந்த முஸ்லிம் சிலைக்கும் குங்குமம் வைத்து வழிபாடு மற்றும் பூசெய் செய்கிறார்கள். அதிர்ந்து போனேன். அவரிடம் இந்த கதை எந்த இஸ்லாமி மக்களுக்காவது தெரியுமா என கேட்க தெரியல என்றார். நான் எங்க சாதிக்கு மட்டும் சொந்தமான சாமியா என கேட்க அவர் இல்லை பல தரப்பட்ட சாதிகளுக்கும் சொந்தமானது என்றும் பாலமடையிலிருந்து பிராமணர்கள் பசுங்கிளி சாஸ்தாவை வழிபட வருவார்கள் என சொன்னார்.

மேலும் கேரளவிலிருந்துஒரு நம்பூதிரி வந்து பசுங்கிளி சாஸ்தா வை பார்த்து ரொம்ப விசேஷமான சாஸ்’தா. அய்யப்பனின் அவதாரம் என்றும் . நவகிரகங்களை நிர்மானிக்க வேண்டும் முருகர் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என்று சொல்லி விட்டு சென்றார் என்றும். கோவிலை பெரிதாக கட்டி கும்பாபிஷேகம் செய்ய கமிட்டி அமைத்த நன்கொடை வசூலிப்பதாக கூறினார். கமி்ட்டி தலைவரின் விசிட்டிங் கார்டையும் கொடுத்தார்

ஆனாலும் சாஸ்தாவின் பெயர் பசுங்கிளி என்பதற்கான காரணம் சரியாக இல்லை என கேட்க முதலில் சாஸ்தாவின் பெயர் கிளி என இருந்தாகவும் பசுவை காபாற்றியதால் பசுங்கிளி என அழைக்கப்படுவதாகவும் சொன்னார்.

சாஸ்தாவை வழிபட்ட திருப்தியில் என குடும்ப வர எனக்கு சாஸ்தாவின் பெயர் குழப்பம் தீர வில்லை. ஆனாலும் எங்க குடும்பம் வணங்கும் சாஸ்தா மத வேற்றுமைகளை தாண்டியவர் என்பதில் கடவுள் நம்பிக்கை இல்லை என்ற போதிலும் பெருமையாக இருந்தது.

எழுதியவர் : (20-Mar-19, 7:31 pm)
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே