எட்டயபுரத்து எரிமலையின் அக்கினிக்குஞ்சு தாராபாரதி

#எட்டயபுரத்து எரிமலையின் அக்கினிக்குஞ்சு
#தாராபாரதி

பத்து விரல்கள் மூலதனம்
பக்குவமாய் எடுத்துரைத்தாய்
சோம்பித் திரிந்தால் சுகமில்லை - தொழிற்
சாலைகள் ஆக்கிடு தோள் என்றாய்..
அமைத்தாய் அறிவுரை படிக்கட்டு
உயர்வோம் அதனைப் பிடித்திட்டு..!

கவரிமானாய் வாழ்ந்திடுவாய்
கௌரவம் அதுவே தான்என்றாய்
தவறினைப் புரியா வாழ்வெல்லாம்
தரணியில் காணும் ஏற்றமென்றாய்
கொன்றே போடவும் முயன்றாலும்
நின்றே வாழ்வோம் நேர்வழியில்..!

பொன்னும் பொருளும் கிட்டுதற்கு
பொய் உரைத்தல் இழிவென்றாய்
பின்வரும் விளைவிற்கு அஞ்சி நின்றால்
உண்மைகள் யாவும் மடியுமென்றாய்
கெஞ்சுதல் என்பதை விட்டொழித்தோம்
அஞ்சுதல் அதற்கு நெருப்பிட்டோம்..!

ஒருநாள் பிச்சைப் பணத்திற்காய்
உயர்வாய் எத்தனைப் புகழாதே
காசுக்கெனவே புகழ்க் கவிதை
புனைந்தால் ஏசும் புவியென்றாய்
நல்லோர்க்கெனவே எம் வாழ்த்து - தாரா
பாரதி ஏற்றோம் உம் கூற்று..!

சோற்றுக்கல்ல இவ்வுடம்பு
சோம்பலில் இருந்து நீவிலகு
தட்டியே மண்ணை சுட்டு வைத்தாய்
சட்டியும் வட்டிலும் இட்டு வைத்தாய்
புத்தியில் உம்மை பதிப்பித்தோம்
புத்துணர்வில் எங்களை புதுப்பித்தோம்..!

பாரதி கண்ட எரிமலையே
பாவலர் தாரா பாரதியே - உமைப்
பற்றிக்கொண்டோம் நெருப்பெனவே
பாரினில் கொடுமைகள் எரித்திடவே.
எழுதும் எம்கோல் நெருப்பூற்றி
எத்தரை அதிலே நீராக்கி..!

#சொ.சாந்தி

(16-03-2019 அன்று கவிஞாயிரு தாராபாரதி அவர்களின் பிறந்தநாள் விழாவில் வாசித்த கவிதை. வாய்ப்பளித்த பாரதி பாரதிதாசன் இலக்கிய மன்ற நிறுவனர் திரு திருவை பாபு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🙏

கவிஞர் தாராபாரதி அவர்களின் வரிகளைப் பற்றிகொண்டு நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் 45 நிமிடங்களில் எழுதிய கவிதை)

எழுதியவர் : சொ.சாந்தி (21-Mar-19, 7:02 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 444

மேலே