இன்னும் நான் கன்னி தான்...!
நான் சின்ன வயசுல
அம்மா அப்பா
விளையாட்டுல
கைதேர்ந்தவ...!
ஒவ்விரு முறை
விளையாடும் போதும்
அம்மாவாக நான்.
அம்மாவாக
நடிச்சதாலோ என்னவோ
அம்மாவாகும் கனவு
கனவாகவே...!
அப்பனில்லா வீட்டுல
அம்மாவுக்கே
தலைக்குமேல் வேலை.
எல்லாத்தையும் செஞ்சுட்டு
களையெடுக்க ஓடுனாத்தான்
கால்வயித்து கஞ்சிக்கு வழி…!
இந்த நிலையில
வரன்கள் வந்தாலும்
கேட்கிற தட்சணையோ
தங்க சுரங்க
முதலாளி போல....!
என் கண்முன்ன
பொறந்ததுக எல்லாம்
கண்ணாலம் கட்டிக்கிட்டு
புருசனோட வாழுதுக….!
என்னோட வயசுல
பாதி கூட தேறாத
பசங்க கூட
பசங்காத்து மேட்டுல
பல்லை இழிக்குதுக.....!
எத்தனையோ முறை
தலையணை நனஞ்சிருக்கு -
கண்டதை நினச்சு
கண்ணீர் விட்டதால.....!
“எவனாவது இழுத்துகிட்டு
ஓடிடலாமா”
கேட்டுகிட்டே இருக்கு
கேடுகெட்ட என் மனம்....!
அம்மாவை நினச்சாத்தான்
அழுகை அழுகையா
பொத்துகிட்டு வருது.....
களையெடுக்க
போனாக்கூட
கண்டதுக பார்க்குமுன்னு
வீட்டுலயே வெச்சிருக்கா
கூண்டுக்கிளியாட்டம்....!
காஞ்சிப்போய் கிடக்கிறது
எங்க ஊரு கிணறு மட்டுமல்ல
என் வாழ்க்கையும் தான்.....!