மாற்றங்கள்
#மாற்றங்கள்..!
பச்சை வண்ணத்தில் மட்டும்
காட்சியளித்த நிலமகள்
மிக உயர்ந்துவிட்டாள்
பல வண்ணங்களில்
பல அடுக்குகளாய்....!
ஏர் பூட்டி தேர் ஓட்டியவர்கள்
ஊர் கூட்டி சயனித்துவிட்டார்கள்
வெட்டியானுக்கு உணவளித்து
மயான மண் மெத்தைகளில்..!
பாலகர் கல்விச் சாலை கட்டணம்
விலையேறிவிட்டது
கல்லூரி கட்டணத்திற்கும் மேலாய்
சின்ன்ன.. படிப்பு... பெரிய்ய்ய்ய செலவு...!
அன்று நீதிக்காய் தேர்க்காலில்
மகனைக் கொன்றார்கள்
எல்லாவற்றையும் கொல்கிறது
பணத்தை விழுங்கி
நீதி கொல்லும் நீதி..!
அரசியல் சந்தையில்
போட்டா போட்டி விற்பனை
குதூகலிக்கிறது வாக்குகள்
ஒற்றைப் பொருள்
விற்பனை இரண்டிற்கும் மேலாய்..!
வாங்குவதும் குற்றமில்லை
விற்பதும் குற்றமில்லை..!
வன்கொடுமைகள்
இறக்கம் கண்டிருக்கிறது
பதினாறு வயதிலிருந்து
பத்து மாத மழலையாக
பிறப்பு வழி இனம் போதும்
பூப்பெய்திருத்தல் அவசியமில்லை..!
எவர் வேண்டுமானாலும் கடத்தலாம்
மீனவர்களை
துப்பாக்கி பசியாறிக்கொள்ளலாம்
கேட்க நாதியில்லை
இந்தியாவிலிருந்து
துண்டிக்கப்பட்டுவிட்டது தமிழ்நாடு..!
எந்த உரிமையும் தமிழருக்கில்லை
வாக்கு செலுத்துவதைத் தவிர
வாழ்ந்து கொண்டாடுகிறார்கள்
வக்கணையாக அரசியல்வாதிகள்
புரட்டுகளில் வெற்றி கொண்டு..!
போராட்ட வாயில்கள் எல்லாம்
அடைக்கப்படுகிறது
அதிகார கரங்களினால்
மெரினா போராட்ட
வெற்றியின் அச்சங்கள்..!
இப்படியான மாற்றங்களில்
இனி மாறிவிடக்கூடும்
நல்லவர்களும் கொலையாளிகளாய்
குற்றங்களை கொல்வதற்கு..!
என்னுள் கொதிக்கிறது எரிமலை
சமீப காலங்களாய்
கைகள் நடுங்குகிறது
இது எனது மாற்றத்திற்கானதாகவும்
இருக்கக்கூடும்..!
-சொ. சாந்தி-