உழைப்பே உயர்த்தும் உன்னை

#உழைப்பே உயர்த்தும் உன்னை..!

விதைக்காது முளைக்காது எதுவும்
உழைக்காது உயராது வாழ்வும்
சோம்பித் திரிதலை விலக்கு - வியர்வை சிந்திட வெளிச்சமே உனக்கு...!!

பிறரின் உயர்வினில் ஏன் பொறாமை
கால விரயந்தான் இதை கவனத்திலே வை
உழைப்பினிலே கொள் உன் எண்ணம்
கொண்டால் உயர்வாய் இது திண்ணம்..!

இளமையில் உழைப்பினை பழக்கு
அது முதுமைக்கும் ஏற்றிடும் விளக்கு .
எத்தொழில் செயினும் உயர்வுண்டு - உயர்வாய்
ஊரே வியந்திடும் உனைக் கண்டு..!

செய்யும் தொழிலே தெய்வம் - அந்த
திறமைதான் நமது செல்வம்
பட்டுக்கோட்டையின் பாட்டு
நித்தம் பாடுபட்டு பறைசாற்று..!!

வெற்றியின் திறவுகோல் உழைப்பு - அது
உன்னுள் இருந்திட ஏன் சலிப்பு
தொடர் உழைப்பினில் திறப்பாய் வெற்றி
இடர்வரின் எதிர்கொள் நம்பிக்கை பற்றி..!

வளர்ந்திடும்போதில் உனை ஒடிப்பார்
முருங்கையாய் இருந்திட துளிர்ப்பாய்
உழைப்பின் வழி செல்வம் நிலைக்கும்
ஊரை ஏய்த்தால் உலகமே பழிக்கும்..!

வளைந்திட வளைந்திட உயர்வாய்
உன் வளர்ச்சியில் விண்ணதும் தொடுவாய்
உழைப்பே உயர்த்திடும் உன்னை - உணர்ந்தால்
வெற்றிக்கு நீதான் தலைவன்..!

#சொ. சாந்தி

உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்களுடன்,

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (1-May-19, 10:10 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 652

மேலே