079 திருவாரூர் - பதிகத்தின் பாடல் 6

இரண்டாம் திருமுறையின் திருஞான சம்பந்தர் தேவாரத்தின் - 079 திருவாரூர் - பதிகத்தின் 11 பாடல்களை ஆராய்ந்த பொழுது பாடல் 6 ன் முதலடியின் 5, 6 வது சீர்கள் தவறாகப் பதிக்கப் பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

11 பாடல்களின் வாய்பாடை ஆராய்ந்தால் அவை:

விளம் விளம் விளம் விளம் மா தேமா என்ற அமைப்பில் உள்ளன.

(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)

செடிகொள்நோ யாக்கையைம் பாம்பின்வாய்த் தேரைவாய்ச்சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே. 6

பொழிப்புரை:

முடைநாற்றம் கொண்ட உடலகத்தே ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போல உலகியல் இன்பங்களை நுகரக் கருதுகின்றாய். தேவர்கள் முடிதாழ்த்திப் பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூர் முக்கண் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!

குறிப்புரை:

செடி - பாவம், துன்பம், தீ நாற்றமும் ஆம்.

`ஐம்பாம்பு` என்ற பாடமே மதுரை - ஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் பதிப்பிலுளது.

பாம்பின் வாயில் தேரை. தேரையின் வாயில் சிறுபறவை (வண்டு). அவ்வண்டின் வாயில் மலர்த்தேன் துளி. அதைச் சுவைத்துக் கொண்டிருக்கும் அச்சிறு பறவைக்கும், அதை உண்ணும் தேரைக்கும், அதை விழுங்கும் பாம்பிற்கும் அவ்வவ்வுணவால் எய்தும் இன்பத்தின் சிறுமையும் தாம் உற்ற துன்பத்தின் பெருமையும் உவமை.

உயிர்கள் விரும்பும் உலக இன்பத்தின் சிறுமையும் அதனை விழைந்து முயன்று தேடிப்பெறும் பொருட்டு உயர்ந்த பிறவியைப் பயன்படுத்தித் திருவருளிற் செலுத்தாமையால், அடையப் பெறாத உண்மையின்பத்தின் பெருமையும் உவமேயம்.

சிறு பறவை முதலிய மூன்றற்கும் உள்ளது போல்வதொரு பெருங்கேடு யாக்கையின் செடி கொள்நோய்.

நோய் பாம்பைக்கொல்லும், பாம்பு தேரையைக்கொல்லும், தேரை வண்டைக் கொல்லும்.

அந்நிலையில் பாம்பு முதலிய மூன்றும் தேரை, வண்டு தேன்றுளியால் முறையாகச் சிறிது இன்புறும் செயலால், பின் உள்ள பெருந்துயரை அறியாதுள்ளன.

இந்நிலைமையை நெஞ்சிற்கு அறிவுறுத்தி, நிலைத்த பொருளை நாடுவித்தலே இதன் உட்கோள்.

எனவே பாடல் கீழ்வரும்படி அமைந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் விளம் விளம் விளம் மா தேமா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)

செடிகொள்நோய் யாக்கையைம் பாம்பின்வாய்த் தேரைவாய்ச்
..சிறிய வண்டு
கடிகொள்பூந் தேன்சுவைத்(து) இன்புற லாமென்று
..கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா
..யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண்(டு)
..அஞ்சாய் நெஞ்சே. 6

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-May-19, 11:42 am)
பார்வை : 104

மேலே