மானவருள் வாய்ந்தமைந்த வானவர் - மேன்மை, தருமதீபிகை 291

நேரிசை வெண்பா

வீரனென, வள்ளலென, மெய்யொழுக்கம் மேவிநின்ற
நீரனென, நூல்பலவும் நேர்ந்துகற்றுச் - சாரமெலாம்
ஆய்ந்த புலவனென ஆனவரே மானவருள்
வாய்ந்தமைந்த வானவரா வார். 291

- மேன்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வீரன், வள்ளல், சீலன், கல்விமான் என்னும் இவரே மனிதருள் சிறந்த தேவராய் மருவி யுள்ளனர் என்கிறார் கவிராஜ பண்டிதர். உலகத் தோற்றத்தில் மனித சமுதாயம் உயர்ந்து நிலவுகின்றது; அந்த மக்கட் பரப்புள் தலைமையான நிலைமைகளை இப்பாடல் வகுத்துக் கூறுகின்றது.

வீரம் என்பது அஞ்சாமை, நேர்மை, ஆண்மை, ஆற்றல் முதலிய உயர் இயல்புகள் ஒருங்கு மருவி வியனிலையில் விளங்கி நிற்பது. உலகத்தைப் பரிபாலித்து நலம் பல விளைக்கவுரிய அரசர்க்குக் குலம்படு தனமாய்க் குலாவியுள்ளமையால் வீரம் அரச குணமாக வரிசை மிகப் பெற்றது.

விலங்கினங்களுள் சிங்கம் போல் மக்களுள் வீரன் மாண்புற்று நிற்கின்றான்.

உள்ளதை உவந்து கொடுப்பவன் வள்ளல் ஆவான்.

ஆசார சீலனை ஒழுக்கம் மேவி நின்ற நீரன் என்றது.

கல்வியறிவின் ஆழங்களையும் நீளங்களையும் பயன்களையும் நன்கு தெளிந்த மதிமானை ‘சாரமெலாம் ஆய்ந்த புலவன்’ என்றது.

பல்வேறு வகைப்பட்ட நூல்களையெல்லாம் கூர்ந்து கற்றுத் தேர்ந்த அறிவு பெற்று ஆர்ந்த கலைச் சுவையுடன் மனப் பண்பும் சேர்ந்த போதுதான் உண்மையான புலவனாய் ஒருவன் ஒளி மிகப் பெறுகின்றான், நெஞ்சம் திருந்தின் நிலை உயர்கின்றது.

மேலே குறித்த இவ்வுத்தமர்கள் உலகில் உயர்ந்த மேன்மையாளராய்ச் சிறந்து தலைமையுடன் திகழ்கின்றார்.

மனித கோடிகளுள் தனிமகிமை வாய்ந்து புனிதம் எய்தி நிற்றலால் ’மானவருள் வானவர்’ என இவர் வாழ்த்த வந்தார்.

அந்நிலைமைகளை யாவரும் அடைய வேண்டும் என்று கருதி கல்வி, வீரம், கொடை முதலிய உயர் தகைமைகள் உடையவரே உயர்ந்தவர் ஆகின்றார் எனப்பட்டது.

கல்வி தறுகண் இசைமை கொடைஎனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே. - தொல்காப்பியம்

மேலான நீர்மைகளை ஆசிரியர் தொல்காப்பியர் இங்ஙனம் வரைந்து காட்டியிருக்கிறார். பெருமிதம் என்றது இங்கே வீரத்தைக் குறித்துள்ளது. பேர் எல்லையாய் ஓங்கி நிற்பது பெருமிதம் என வந்தது.

சிறந்த வீரன், உயர்ந்த கொடையாளி, நல்ல ஒழுக்கமுள்ளவன், தேர்ந்த கல்விமான் என்னும் இந்நிலைகளுள் ஏதாவது ஒரு வகையிலாவது மனிதன் மருவியிருக்க வேண்டும்; இல்லையானால் அவன் பிறப்புப் புல்லிதாம்.

சடமொன்(று) எடுத்தால் புவிக்கு நல்லவன் என்று
தன்பேர் விளங்க வேண்டும்;
சதிருடன் இதல்லாது, மெய்ஞ்ஞானி என்றவ
தரிக்கவே வேண்டும்; அல்லால்

திடமினிய ரணசூர வீரனிவன் என்னவே
திசைமெச்ச வேண்டும்; அல்லால்
தேகியென வருபவர்க்(கு) இல்லை என்னாமலே
செம்பொன் கொடுக்க வேண்டும்;

அடைவுடன் பலகல்வி ஆராய்ந்து வித்துவான்
ஆகவே வேண்டும்; அல்லால்
அறிவான துரைமக்கள் ஆக வரவேண்டும்; இவர்
அதிக பூபாலர் ஆவார். - குருபாத தாசர்

மனிதப் பிறப்புள் மகிமைப் பிறப்புகளாக இதில் குறிக்கப்பட்டுள்ள ஆறு நிலைகளையும் கூர்ந்து நோக்கி அவற்றின் தரங்களை ஓர்ந்து கொள்க. நீர்மை யுடையன சீர்மை அடைகின்றன.

வீரம் முதலிய உயர் நீர்மையுடையவர் பாரெல்லாம் புகழ்ந்து போற்றச் சிறந்து விளங்குகின்றார்; அல்லாதவர் புல்லராய்ப் பொலிவிழந்து நிற்கின்றார். நிலைகள் எல்லாம் அவரவருடைய இயல்புகளைப் பொறுத்து எழுகின்றன.

பேடி, உலோபி, அயோக்கியன், மூடன் எனப் பாடழிந்து படாதே; அறிவு நூல்களைக் கற்று, நெறி முறையே ஒழுகி, உரிமையுடன் உதவி, அரிய ஆண்மை புரிந்து பெரிய மேன்மையாளனாய் உயர்ந்து இருமையும் அடைந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jun-19, 8:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 94

சிறந்த கட்டுரைகள்

மேலே