மதுவை ஒழிப்போம்

மதுவை ஒழிப்போம்

மதுபோல மதிமயக்க மதியிருக்க
நீ
மதியிழந்து மது நாடி மதிப்பிழக்கலாமா

விதியோடு விளையாடும் மது செய் சூதறியாமல்
உடல் வீழ்ந்திடும் முன்னுன் வாழ்வை வீணாக்கலாமா

ஆணென்பார் பெண்னென்பார்
அத்தனையும் மது அருந்தி விட்டால்
என்னென்பார் ஏதென்பார் எங்கே
என் உடையென்பார் உள்ளம் சோர்வார்

தொடக்கம் ஒன்றிருந்திட்டால் முடிவொன்று வேண்டும்
தொடங்கியவன் துணை வாரான்
தன்மானம் வேண்டும்

காயமே பொய்யென்று சித்தர் சொன்ன தேகத்துள்ளே
மாயம் செய் மதுவை ஊற்றி மான மிழப்பதேனோ

ஊண் கெடுத்து உயிர் கெடுத்து ஊர் பகைத்து வாழ
நீ போர் தொடுக்கப் போவதென்ன
நோயோடுதானோ

நடுத்தெரு ஆட்டம் போடாதே
நாயைக் கட்டி உறங்காதே
குட்டக் குட்டக் குனியாதே
குடும்பம் பார் சீரழியாதே

எத்தனையோ சாதிக்க
ஏராளம் தானிருக்க
சித்தமாய் இரு நீ
பித்தனாய் அல்ல

உன்னுள் உறங்கும்
உன்னைத் தேட
உன்னை எழுப்பும் குருவை நாடு

உன்னில் இறங்கி
உச்சம் தொட்டால்
ஊரே உன் பின் பாரு

இக்கணம் குடி விட
ஏற்பாய் சபதம்
இதமாய்ச் சொன்னேன் நண்பா

இரவு வந்ததும்
இளமைத் துள்ளலில்
மதுவைத் தொட்டால் அது பண்பா?


-ஹரிஹரன்

எழுதியவர் : ஹரிஹரன் (19-Jun-19, 7:57 pm)
சேர்த்தது : Hariharan
பார்வை : 341

மேலே