எரியும் கடிதம்
கட்டாந்தரையின் சூடு துரத்த
கடலில் குதித்ததாக நினைத்து
அமிலக் குட்டையில் நொதிந்துருகி
தொலைத்துக் கொள்ள முடியாது
வளியோடு கதைக்கின்ற வலிகள்!
உருவமற்று திரிவதால்
உடைவதற்கும் அழுவதற்கும்
சாட்சிகளில்லா வெறுமையை
நிறைத்துக் கொண்டிருப்பது
உதிரக் கதறலின் மௌனங்களே!
சுருட்டி மறைத்த
அச்சங்களும் ஆசைகளும்
முனகலோடு கருகுவதில்
மரித்துக் கொண்டிருப்பது
காகிதமும் பேனா மையுமே!
--இதயசகி