சில மின்மினிகள்
இதுவெல்லாம் மிக சாதாரணமாக நடக்கும் ஒன்று.
போன் ஒலிப்பது.
போன் ஒலித்த போது நடுஇரவு.
எதிர்பார்த்து காத்திருந்த அழைப்பு. இந்த அழைப்பு எல்லைப்பகுதியில் இருந்து வருகிறது. மாநில எல்லைப்பிரிவில் நான் பணியாற்றுகிறேன்.
அவனை இப்போது கைது செய்து விட்டு என்னை அழைத்தனர். இவன் வளர்ந்து வந்த ஒரு இயக்கத்தின் ஒரு வித்து.
கிளம்பி சென்றபோது குளிர் தீவிரமாக இருந்தது. சிறு ஓடையை தாண்டி சென்றேன். அந்த சிறிய குடியிருப்பில் அவனை ரகசியமாக வைத்து இருந்தனர்.
கொஞ்ச நேரம் விசாரித்து விட்டு அனுப்பி விடுவோம். அவன் அறியாமல் அவனை பின் தொடர சிலர் தயாராக இருப்பார்கள். உயர் அதிகாரி என்ற அடிப்படையில் அங்கு சென்றேன்.
அவனை ஒரு நாற்காலியில் அமர செய்து உணவும் வழங்கி இருந்தனர்.
உன் பெயர் என்ன?
ஆதித்யா கரந்த்
உண்மை பெயர் என்ன?
அதுதான் இந்த பெயர்.
மிக அழுத்தமாக மறைக்க வேண்டும் என்று அவன் இருப்பது போல் தெரியவில்லை. எதற்கும் பதில் கிடைக்கும் என்று தோன்றியது. நானும்
பேச ஆரம்பித்தேன்.
உங்கள் இயக்கம் பற்றி அதில் உள்ளவர் பற்றி கொஞ்சம் சொன்னாலும் போதும். நீ மறுவாழ்வு பெற உதவுகிறோம் இப்படி மாறி வந்தவர்கள் பலரும் உண்டு.
அவன் சிரித்தான்.
அங்கு உள்ளவர் பற்றி தெரியும். இன்னும் வந்து கொண்டே இருப்பவர் பற்றி தெரியாது.
அப்படியெனில்? உங்கள் திட்டம் என்ன?
எதை முன்னெடுத்து எந்த வித அழிவை உருவாக்க போகிறீர்கள்...
அது பற்றி தெரியாது.
தெளிவற்ற பதில்.
உண்மையும் அதுவே. தெரியாது.
இப்பொழுது நாட்டின் நிலை மாறி உள்ளது. தீவிரமான கண்காணிப்புகள்..
மக்கள் நிலை?
அரசுகள் உள்ளன. நீ எந்த மாநிலம்?
ஆந்திராவில் பிறந்து கர்நாடகாவில் கற்றேன். தமிழக எல்லைப்பிரிவில் என் பெற்றோர் உள்ளனர்.
மீண்டும் கேட்கிறேன். உங்கள் பின்புலம்?
இந்த கேள்விக்கு என்ன பதில் வரும். அதன் பின் என்ன கேள்விகள் கேட்டு அவனை அனுப்ப வேண்டும் என்பதை முன்னரே முடிவு செய்து விட்டதால் என் பணி இத்துடன் நிறைந்து விடும்.
அவன் பதில் அளிக்க மறுத்தான்.
பின்புலங்கள் எங்களுக்கு இல்லை. உங்கள் கற்பனை பின்புலத்தின் ஒரு சிறிய தொடர்ச்சி மட்டுமே நாங்கள்.
அப்படியெனில்...?
இந்தியாவின் எந்த வரலாற்றில் ஆரம்பிக்கலாம்..கனோஜி யா பாடலிபுத்திரமா?
ஏன்? இங்கேயே ஆரம்பிக்கலாம் என்றேன்.
தமிழகம்? அது எளிது. இன்னும் கல்லணை பற்றியே கதை அளக்கும் வறட்டு ஜம்பம் பேசும் மாநிலம்.
அதனால் என்ன? வரலாற்று சின்னம்.
இந்த வரலாற்று சின்னங்கள் உங்கள் சங்க காலம் முதல் பேசப்பட்டு வரையப்பட்டு வந்து விட்டது. இப்போது என்ன நிகழ்கிறது என்பதை நான் சொல்ல வேண்டுமோ?
சொல்ல வேண்டும்...
விடுதலைக்கு பின் கலைந்தும் கலைத்தும் ஒரு ஆட்சியை உருவாக்க முதலில் ஏந்தி பிடித்தது ஜாதியை மட்டுமே. ஜாதி ஒழிப்பில் ஆசை காட்டியவர்கள் மத ஒழிப்பில் மௌனம் காட்டினர். இரண்டும் இன்று வரை சாதிக்கப்படவில்லை.
மொத்தத்தில் எந்த ஜாதியை சேர்ந்தவனுக்கும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஒருவனை ஒருவன் மனதால் பகைத்து வெளியில் பல் காட்டி திரிகிறான். இனப்பெருமை சொல்லி கொடுக்க மாரடித்த கட்சிகள் காதல் ஜோடிகளை காப்பாற்றி வைக்க திறன் அற்றுபோனது.
நாங்கள் என்ன சாதித்து இருக்கிறோம் கல்வி வேலைவாய்ப்பில் என்பது எங்களுக்கு தெரியும்.
நீங்கள் எந்த ஜாதி மதமாக இருந்தாலும் உலகம் தொழில் புரட்சியில் தடம் மாறி கொண்டபின் இந்தியரான நமக்கும் கல்வியும் வேலையும் இயற்கையாகவே வந்து சேர வேண்டிய ஒன்றுதான். ஆனால் அதை உங்களுக்கு கிட்டாத லட்சியம் போல் திரித்து விட்டனர்.
யார்?
ஒருவன் கூலிப்படை தலைவர். மொழி மட்டுமே அவன் ஆயுதம். இன்னொருவன் திரைப்பட நாயகன். அப்பாவிகள் அவன் ஆயுதம். இரண்டு பேரும் காலி வயிற்றுடன் கிளம்பி வந்து வள்ளல் போல் மாறியவர்கள். மத்தியின் கைக்கூலி. அண்ணாயிசத்தின் ரௌடிகள். வட இந்தியாவில் நிறுவனங்கள் பெருத்து வளர்ந்த போது இங்கு முதலாளிகள் தூங்க வைக்கப்பட்டு விட்டது ஏன்?
தமிழன் உருக்குலைந்த கல்வியால் தட்டையாகி போய் கொண்டிருக்கும் போதே திரைப்படத்தால் மொண்ணை உணர்வுகளோடு மாறிப்போனான்.
இருவரும் தமிழனை சாராயத்தில் முக்கினர். இன்னும் வெளியேறவில்லை.
நீ சொல்வதில் மிக அரிய விஷங்களை மறுக்கிறாய் அல்லது மறைக்கிறாய்.
இரண்டும் இல்லை. நீங்கள் நேரே பார்க்கும் விஷயங்கள்..இன்று தமிழன் பாரம்பரியம் நாகரீகத்துக்கும் இடையில் கலப்பின ஜந்து. ஒரு காது குத்துக்கு மண்டபம் வைத்து கொண்டாடும் அளவில் களியாட்ட புத்தியில் சீரழியும் இனம்.
அவலத்தின் சின்னமான ரேஷன் கடையை நிறுவனம் ஆக்கியது எப்படி? தமிழன் இலவசத்தில் பேதலித்து போனவன். அவனுடைய ஒவ்வொரு நாளும் செக்ஸ் போல் நிகழ்ந்து பேதி போல் முடிவதை என் அன்றாடம் என்று மார் தட்டி கொள்ளும் சந்தை தமிழ்நாடு.
எத்தனையோ சாதனைகள் இங்கு நிகழ்ந்து உள்ளது. உங்களை போன்ற சிலர் மட்டுமே இப்படியெல்லாம் குழப்பி வருகின்றனர் என்றேன்.
அவன் அதை கேட்டுவிட்டு மௌனமாய் சிரித்த போது கொஞ்சம் அசிங்கமாக இருந்தது. இந்த வேலைக்கு நான் எப்படி வந்தேன் என்பது தெரியும்.
நீங்கள் உயர் அதிகாரி...இன்று இந்தியாவுக்குள் எந்த தமிழனாவது பெயர் சொல்லும்படி காட்டுங்கள். அது உங்களால் முடியும்.
அதே பெயரை ஒரு கிராமத்து பெண்ணிடம் கேளுங்கள். ஏன் அவளுக்கு சொல்ல தெரியவில்லை?
அவனையே பார்த்து கொண்டு இருந்தேன்.
அரிசிக்கு வக்கற்ற போன பின்னும் அணு குண்டு கண்டுபிடித்த ஒருவரை இரண்டாவது தேசத்தந்தை ஆக்கியவர் நாம். அணுகுண்டு வந்த பின்னும் அரிசி ஏன் வரவில்லை?
ஒருவன் பிறந்த பின் அரைகுறை கல்விக்கு பின் ஏதோ ஒரு போட்டி தேர்வில் கலந்து தோற்றபின் அவனிடம் வாக்குகள் மட்டும் பெற்றுக்கொண்டு இனி உனக்கு ஒன்றும் இல்லை ஒரு தேர்வில் தோற்று விட்டதால் என சொல்லும் ஒரு ஜனநாயகம் இருந்தால் என்ன எரிந்தால் என்ன? பிறப்பை காட்டி வாழ்வின் அடிப்படையை மறுக்கும்போது தடை செய்யும்போது வெடிக்க மட்டுமே செய்யும். இனியும் வெடிக்கும்.
ஆக... நீ அனைத்து தீவிரநிலைக்கும் செல்ல தயார் அப்படித்தானே?
இது தீவிரவாதம் அல்ல. கேள்விகள்.
காய்ந்து போன சிந்தனையுடன் காலத்தை தள்ளி கொண்டு போகும் தமிழகம் இனி என்ன ஆகும் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் சில விஷயத்தில் கூட உங்கள் இயக்கம் முழு பயத்தை சித்தரிப்பது மட்டுமே வேலையாக கொண்டு உள்ளது.
தேர்தலில் பணம் தெருதோறும் வழங்கப்படுவது? அங்கொன்றும் இங்கொன்றுமா..ஆசிரியர்கள் அலுவலர்கள் சிலர் வோட்டுக்கு பணம் வாங்கியது இல்லையா..?இந்த சிலர் உண்மையில் வெறும் சிலரா?
உங்கள் ஜனநாயகம் மானம் கெட்ட தோலில் கம்பளி பின்னி போட்டு கொண்டுள்ளது. மக்கள் கிடைத்ததை கொண்டு உல்லாசமாகவும் கற்றதை கொண்டு பெருமிதமாகவும் இருக்கின்றனர். அதற்கு இப்படித்தான் விலை கொடுக்க வேண்டும்.
நான் அவனையே பார்த்து கொண்டு இருந்தேன். அவன் பெரும் அச்சுறுத்தல் கொண்டவன் அல்ல. கொஞ்சம் கிறுக்கு என்பதுபோல் தெரிந்தது.
அவனே பேசினான்.
சொல்லுங்கள். மக்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி வைப்பீர்கள்?
நூறு கோடி மக்களை ஒரு பிரதமரும் முப்பது முதல் அமைச்சரும் ஒரே நாளில் மாற்றி விட முடியாது.
முடியும் என்றுதானே ஜனநாயகம் தேர்தல் தோறும் பேசி வருகிறது. பழைய இரண்டு திருடனும் பேசி வந்ததை மறக்க முடியுமா?
இப்போது வீதி தோறும் திருடர்கள்.
இதுவும் இல்லை என்றால் இந்த நாடு நாடாக இருக்காது.
இருக்கும். அந்த வழிகள் உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் பேச மறுப்பதுதான் இங்கு பிரச்சனை. நீங்கள்
மக்களை மயக்கத்தில் வைத்திருப்பது மட்டுமே கவலை தருகிறது.
பசி என்று வருபவன் இடத்தில் உழைக்க தயார் என்று சொல்பவன் இடத்தில் பழைய விதிகளை காட்டுவதும் மிரட்டுவது மட்டுமே உங்கள் வேலை. சம்பளம் வாங்கும் அதிகார பொறுக்கிகள் நீங்கள்.
மாறி மாறி கடித்து கொள்வதன் பெயர் குடியரசு அல்ல. நீங்கள் சொன்ன பெரும் அமைச்சர் முதல் கீழ்நிலை அதிகாரி வரையிலும் ஒன்றின் கீழ் ஒன்றாய் இணைந்து பணி புரியும் மாமாக்கள். இந்த மக்களை விட உங்களின் அதிகார வர்க்கமே எங்கள் வேலையை எளிதாக்கும். உங்களை போன்று தடுப்பவர் இடையேதான் ஆதரிக்கும் மாமாவும் உண்டு. பலமாய் சிரித்தான்.
இந்திய ஜனநாயகம் வெறும் பயத்தில் ஒட்டி கொண்டு ஓடுகிறது. நாம் நினைப்பது போல் இந்தியர் என்ற ஒற்றுமையில் எல்லாம் அல்ல.
வட இந்தியாவில் பாகிஸ்தான் அச்சுறுத்தல். தென் இந்தியாவில் இலங்கை வழியில் சீன அச்சுறுத்தல்.
இதை கொண்டே போர் தீவிரவாத பதற்றத்தில் எல்லா கட்சிகளும் நம்மை பிணைக்கின்றன. இந்த பயம் இல்லாத போது கட்சிகளின் நாய் ஊடல் துவங்கும்.
இந்தியன் வாய் பிளந்து ரசிப்பவன்.
எனில் உன்னிடம் தீர்வு இருக்கிறதா?
இருக்கிறது.
என்ன சொல் பார்ப்போம். ராணுவ ஆட்சியா? என்று சிரித்தேன்.
அவன் பேச ஆரம்பிக்கும் முன் நான் எழுந்து கொண்டேன்.
வாசல் வந்தபோது ஆய்வாளர் அங்கே நின்று கொண்டிருந்தார்.
தயாளன்...
அருகில் வந்தார்.
சார் டீம் ரெடியா இருக்குது. பையனை விடிகாலையில் அனுப்பிவிட்டு...
நான் அவரை ஆழமாய் உற்று நோக்கினேன். இந்த உற்று நோக்கலின் அர்த்தம் அவருக்கு தெரியும்.
அவர் முகம் ஒரு கண நேர யோசனைக்கு பின் தீவிரமாக மாறியது. அடுத்த முடிவுகள் குறித்து அவருக்கு யோசனைகள் படர ஆரம்பித்தபோது
நான் ஜீப்பில் அமர்ந்தேன்.
இதுவெல்லாம் மிக சாதாரணமாக நடக்கும் ஒன்று.
____________________________________