பிறந்தநாள் வாழ்த்து

கண்ணுக்குக் கண்ணாகக் காத்தி ருப்பேன்
கன்னத்தில் முத்தமிட்டுக் கவிவ டிப்பேன்!
எண்ணத்தில் முப்போதும் உன்னை வைப்பேன்!
இனியவனே உன்சிரிப்பில் இதயம் பூப்பேன்!
வெண்பஞ்சு முகிலெடுத்து மெத்தை யாக்கி
வில்வளைத்து விசிறியென வீசச் செய்வேன்!
தண்டமிழில் தாலாட்டு நித்தம் பாடித்
தனைமறந்து நீயுறங்கக் குளிர்வேன் நெஞ்சம்!

சேட்டைகள்நீ செய்தாலும் கோபம் கொள்ளேன்
சிறுவிரலால் அடித்தாலும் சிலிர்த்துக் கொள்வேன்!
பாட்டுக்குக் கருவாக்கி அழகாய் நெய்வேன்
பாலமுதை ஊட்டிவிட்டுப் பாசம் பெய்வேன்!
வீட்டுக்குள் வளையவந்து வண்ணம் சேர்ப்பாய்!
விளையாட்டில் குறும்போடு தட்டிப் பார்ப்பாய்!
வாட்டத்தி லிருந்தாலும் வருத்தம் தீர்ப்பாய்!
வளைந்தோடும் நதியாக வருடிச் செல்வாய்!

செவியோரம் மழலைமழை பொழிய வேண்டும்
தித்திப்பில் என்னிதயம் வழிய வேண்டும்!
கவிநிதமும் உனக்காய்நான் எழுத வேண்டும்
கவினழகாய் நீகேட்டுத் துயில வேண்டும்!
குவித்தவிதழ் கன்னத்தில் பதிய வேண்டும்
கொஞ்சியுனை நானள்ளி யணைக்க வேண்டும்!
புவிபோற்றப் பேரெடுத்து வாழ வேண்டும்
பொன்மணியே புதுயுகத்தை ஆள வேண்டும்!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Jul-19, 6:27 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 55

மேலே