வீரதமிழச்சி உடையாள்

எங்கோ தூரத்தில் ஒரு குயில் சோகமாக
கூவிக் கொண்டிருந்தது. அந்த கானகத்தில்
நகர்ந்து கொண்டிருந்தது சிறுபடை. அந்த சிறுபடையின் மையத்தில் சிறுபல்லாக்கு. பல்லாக்குக் குஞ்சங்கள் காற்றில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்க. வீரர்கள் கவலைத் தேய்ந்த முகத்துடன் சற்று விரைவாகவே நடந்தனர். பல்லக்கில் அமர்ந்திருந்த வேலுநாச்சி கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. பக்கத்தில் படுத்திருந்த தன் மகள் வெள்ளச்சியைப் பார்த்தாள். கணவன்
முத்துவடுகநாதன் காளையர்கோவிலில் வெள்ளையர்களால் சுடப்பட்டு இறந்து விட, அன்றைய நாளில் இருந்து வெள்ளையர்கள் துரத்திக் கொண்டே இருக்க, வேலுநாச்சி வெள்ளையர்கள் பிடிக்க முடியாதபடி தனது தளபதிகள் பெரிய மருது சின்ன மருது உதவியுடன் ஒவ்வொரு இடமாக தப்பிக் கொண்டே இருந்தாள்.

சற்று தூரத்தில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதும் வேலுநாச்சி தனது பல்லக்கின் திரையை விலக்கி வெளியே பார்த்தாள். ஆடு மேய்க்கும் உடையாள் தனது நீண்ட துறட்டிக் கம்போடு நின்று கொண்டிருந்தாள்.

உடையாளைப் பார்த்த வேலுநாச்சி கண்கள் இன்னும் கலங்கியது. வேலுநாச்சி வேட்டையாட காட்டுக்குப் போகும் போதெல்லாம் உடையாள் ஆடு மேய்த்துக் கொண்டு காட்டில் சுற்றிக் கொண்டிருப்பாள். அப்படி தான் ஒருநாள் வேட்டையாட காட்டுக்குச் சென்ற வேலுநாச்சி வழி தவறி விட, அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த உடையாள் வேலுநாச்சி வழி தவறியதைக் கண்டு, வேலுநாச்சிக்கு வழி கண்டுபிடிக்க உதவ, அன்றிலிருந்து வேலுநாச்சியும் உடையாளும் தோழிகள் ஆனார்கள். வேலுநாச்சி வேட்டையாட காட்டுக்குச் செல்லும் போதெல்லாம் உடையாளையும் உடன் சேர்த்துக் கொண்டு சுற்றுவாள்.
இருவரும் பல கதைகளை பேசிப் அளாவுவார்கள். வேலுநாச்சி உடையாளைத் தனது உயிர்த் தோழியாகவேக் கருதினாள். உடையாளுக்குத் திருமணம் நடந்த பொழுது தனது வைரமாலையைப் பரிசாகத் தந்தாள்.


வேலுநாச்சி பல்லக்குக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த பெரிய மருதுவைக் கூப்பிட்டாள்.

"பெரிய மருது.! கொஞ்சம் பல்லக்கை நிப்பாட்டேன். உடையாள் கிட்ட பேசிட்டு வந்துடுறேன்."

சுற்றுமுற்றும் பார்த்த பெரிய மருது ஒரு மரத்தடியில் உடையாள் நிற்பதைக் கண்டு பெருமூச்சு விட்டு,

"அம்மா வெள்ளையர்கள் நம்மைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் நாம் பயணத்தை நிறுத்துவது ஆபத்து. வேறு வழி இல்லை தாயே. நாம் தொடர்ந்து பயணித்துத் தான் ஆக வேண்டும்."

தன் நிலை என்ன என்பதை வேலுநாச்சி உணர்ந்தே இருந்தாள். எனவே பயணம் தொடர்ந்தது.

------////--------////---------////--------////-----

பல்லாக்கும் குதிரை வீரர்களும், சில காலாட்வீரர்களும் அடங்கிய அந்த படைத் தொடர்ந்து பயணித்தது. நான் கண்ணீருடன் அதை, பல்லக்கில் போகும் ராணி வேலுநாச்சியைப் பார்த்தேன்.

"எப்படி வாழ்ந்திட்டு இருந்த ராணியம்மா. இப்படி புருசனை கும்பினிக்காரன்கிட்ட பறிக் கொடுத்துட்டு நாட்டையும் இழந்துட்டு நாயா அலையுறாங்களே" என பாவி மனசு கிடந்து கதறியது.
"ராசா கும்பினிக்காரனுக்கு வரி கட்ட முடியாதுன்னு சொல்ல, நேர்மையா வந்தா தோத்துருவோமுன்னு, ராசா கோவில்ல சாமி கும்பிட்டு வெளிய வர்றப்போ மறைஞ்சுருந்து சுட்டுக்கொல செஞ்சுட்டானுங்களே. சேதி கேள்விப்பட்டு ஓடி வந்த ராணியம்மா வேலுநாச்சி ராசா உடம்ப கண்டு தலைல அடிச்சிட்டு அழுததும்,
கும்பினிக்காரன பழி வாங்கியே தீருவேன்னு சபதம் செஞ்சதும் கண்ணு முன்னாடி வர. அப்படியே கால்மடக்கி சரிந்து மாரில் அடித்துக் கொண்டு அழுதேன்.

தீடிரென குதிரைகள் வரும் சத்தம் கேட்க நான் நிமிர்ந்தேன். கும்பினிக் கொடியை ஏந்தியபடி சிப்பாய் ஒருவன் முன்னாள் வர பின்னால் நடுநாயகமாக கும்பினிக்காரான் தனது வீரர்களுடன் வந்து கொண்டிருந்தான்.

குதிரைகள் என்னைக் கண்டதும் தேங்கி நின்றது. ஒருவன் குதிரையில் இருந்து இறங்கி ராணியம்மா சென்ற பாதையில் குதிரைகள் சென்ற தடத்தினை ஆராய்ந்தான். பிறகு அவன் சென்று கும்பினிக்காரனிடம் ஏதோ பேச, பின் என்னை நோக்கிக் கைக் காட்டி ஏதோ சொன்னான். குதிரைகள் அனைத்தும் என்னை நோக்கி வந்தன. நான் துறட்டிக் கம்பை இறுகப் பற்றியபடி எழுந்தேன்.

முன்னால் குதிரையில் வந்த கும்பினிக்காரன்,

"ஏய் வேலுநாச்சி எங்க போனாள்." என உடைந்த தமிழில் கேட்டான்.

"எனக்கு தெரியாது ." என்றேன் தைரியமாய்.

"நீ உடையாளு தான." என சிப்பாய் ஒருவன் முன்னாள் வந்து,

"துரை இவள எனக்கு தெரியும். இவளும் அந்த வேலுநாச்சியும் ஒண்ணா தான் காட்டுல சுத்திட்டு இருப்பாங்க. இவளுக்கு கண்டிப்பா வேலுநாச்சி எங்க போயிருக்கான்னு தெரியும்." என்றான்

"என்ன சொல்றான் இவன்." என துரை தனது பக்கத்தில் இருந்த துபாசிடம் வினவ அவன் விளக்கினான்.

"ஏய் இந்தா பாரு உடையாள். வேலுநாச்சி எங்க போனாள்னு சொல். நான் உனக்கு தேவையான பொருள் தர்றேன். நீ உன் Family நல்லா வாழலாம். இல்லன்னா." துப்பாக்கியால் சுடுவது போல கைகளை வைத்து சுட்டுக் காட்டினான்.

"சொல்ல முடியாது." என்றேன்.

"துரை இவ கிட்ட இப்படி பேசுனா வேலைக்காவாது." என்றபடி ஒருவன் குதிரையில் இருந்து இறங்கி,

"ஏய் இப்போ சொல்றியா இல்லையா." என கோவத்துடன் வினவ.

"முடியாது." என்றேன் மறுபடியும்.

"சொல்லமாட்ட." என்றபடி அவன் தலைமுடியை கொத்தாக பிடித்துக் கொண்டு உலுப்பினான்.

"முடியாதுடா நாயே." என்றபடியே அவன் முகத்தில் துப்பினேன். அவன் ரப்பென என் கன்னத்தில் அறைய.

நான் அவன் மர்ம இடத்தில் ஓங்கி ஒரு ஏத்து எத்த, தடுமாறி அவன் பின்னால் போய் விழுந்தான். என் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டேன். தடுமாறி எழுந்த அவன் கழுத்தை நோக்கி துறட்டிக் கம்பை கொண்டு ஒரு இழு இழுக்க ரத்தம் பீச்சி என் மேல் அடித்தது. அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டே சரிந்து துடிதுடித்து அடங்கினான்.

"Kill Her." என்று கும்பினிக்காரன் குதிரையில் இருந்தபடி அலறினான். நான் அவனை நோக்கிப் பாய்ந்தேன்.
துறட்டிக் கம்பால் அவனை நோக்கி இழுக்க அவன் சட்டை காலர் துறட்டியில் மாட்டியது. வேகமாய் இழுக்க, கும்பினிக்காரன் குதிரையில் இருந்து கீழே விழுந்தான். நான் துறட்டியை மேலே தூக்கியபடி அவன் மீது பாய முற்பட. பக்கவாட்டில் இருந்த சிப்பாய் ஒருவன் என்னை உதைத்தான்.

நான் தடுமாறி கீழே விழுந்தேன். நான் சுதாரிப்பதற்குள் கும்பினிக்காரனின் வாள் என் கழுத்தில் பாய்ந்தது. நான் கீழே விழுந்தேன்.

"பொட்ட நாய்." என்னை மிதித்தபடி கும்பினிக்காரன் திட்டுவது காதில் விழுந்தது. எனக்கு சிரிப்பு வந்தது. நான் சிரித்தேன்.

கண்ணுக்குள் ராணியம்மா வேலுநாச்சியின் முகம் தெரிந்தது. மெல்ல என் உயிர் பிரிந்தது.....

......////.....////.....////.....////.....////.....////

நடந்த சம்பவங்களைக் கேள்விப்பட்டு ஊரே ஓடி வந்து பார்த்து கண்ணீர் சிந்தியது. உடையாளை நல்லடக்கம் செய்தது. வெள்ளையன் பொருளாசை காட்டியும் வேலுநாச்சியைக் காட்டிக் கொடுக்க மறுத்து வீரமரணம் அடைந்த உடையாளுக்குச் சிலை வைத்து கோவில் கட்டி, கோவிலுக்கு
"வெட்டுடையாள் காளி" எனப் பெயர் வைத்தது.

இது நடந்து ஆறுமாதங்களுக்கு பிறகு வெள்ளையர்களை ஓட ஓட விரட்டி மீண்டும் சிவகங்கையைக் கைப்பற்றிய வேலுநாச்சி. வெட்டுடையாள் காளி கோவிலுக்கு வந்து தனது வைரத்தாலியை கண்ணீர் மல்க உடையாள் சிலைக்கு அணிவித்தாள்.
இன்றும் வீரத்தின் சாட்சியாக அந்த கோவிலும் வைரத்தாலியும் சிவகங்கையில் இருக்கிறது..

எழுதியவர் : அருள்.ஜெ (23-Jul-19, 5:06 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 61

மேலே