பூரணத்துவம் மலரட்டும்
பூரணமான இருளில் பூரணமடைய புதிய பாதை தேடி பூரணமான ஒளியால் பூரணமாக படைக்கப்பட்டு தாயின் கருப்பையில் பூரணமாக வளர்ந்து கர்ப்பக்காலம் பூரணமடைவதில் பூரண கனவுகளால் நிறைந்து பூமியில் நானுதித்தேன் மழலை என்ற பூரணத்துவமாய்.
தொப்புள் கொடி அறுந்ததுமே தலைகீழாய் பிடிக்கப்பட்டேன், இனி வாழ்க்கையும் அப்படியே அமையப் போகிறது என்று அப்போது நானறியவில்லை.
வளர வளர தேய்ந்தது பூரணத்துவம்.
பூரணமான கனவுகள் எல்லாம் கலைய, எதிர்பார்ப்புகள் அதிகம் தாங்கி ஏக்கத்தோடு என் வாழ்வை ரணம் மெல்ல பூரணமாக விழுங்க வேதனையில் நான் வெதும்பி, நிற்க இயலாமல் துவண்டு விழுந்தேன் நம்பிக்கை இழந்து.
யார் மேல் குற்றம்?
என் பூரணத்துவம் இழக்க யார் காரணம்?
உறங்காமல் உதித்தன ஓராயிரம் கேள்விகள்.
மீறி உறங்கையில் கேசவன் சொன்னான் ரணங்களைத் தாண்டி பூத்தால் பூரணத்துவம் அடைவாய் என்றிட பிறந்தது ஞானம்.
அதுவே பித்தம் தெளிய வைக்கும் அருமருந்தாகிட என்னைப் பற்றிட உலகப் பயன் கருதி உண்மையை அறைந்தேன் இவ்விடம்.
இவ்வொளி எங்கும் பரவ மெல்ல மெல்ல ரணங்களைக் கடந்து பூரணத்துவம் மலரட்டும் பூமி எங்கும்.