அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தில் வாகனம் நிறுத்தும் இடமா- மதுரையில் பார்க்கிங் வசதிக்காக தோண்டியபோது தென்பட்ட பழங்கால மண்டபம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பழைய சென்ட்ரல் மார்க்கெட்டை அப்புறப்படுத்திவிட்டு பல அடுக்கு பார்க்கிங் வசதி கட்டப்படும் இடத்தைத் தோண்டியபோது பூமிக்கடியில் பழங்கால மண்டபமும் தூணும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் அருகில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் 2.03 ஏக்கரில் தரை தளத்திற்கு கீழ் இரண்டு தளங்களுடன் கூடிய மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூ.40.19 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாகன நிறுத்தம் 1-ல் முதலாவது கீழ்தளத்தில் 118 கார்கள், 416 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம். இரண்டாவது கீழ்தளத்தில் 1,185 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
அதேபோல் 2-வது வாகன நிறுத்தத்தின் முதல் கீழ்தளத்தில் 371 கார்கள், 2-வது கீழ்தளத்தில் 4,776 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
தரைதளம் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு அமைப்புகள் மற்றும் புராதன மேம்பாட்டு செயல்பாடுகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போதிய தீயணைப்பு வசதிகள், சூரிய சக்தியுடன் கூடிய அவசரகால மின் வழங்கல், தகவல் ஒளிபரப்பு சாதன வசதிகள் என பல்வேறு வசதிகள் இங்கு இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், இன்று இப்பகுதியில் பூமிக்கடியில் பழங்கால மண்டபம், தூண்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அருகிலேயே செங்கல் கட்டுமானமும் தெரிகிறது.
ராணி மங்கம்மாளின் அரண்மனையும் அவர் சிறை வைக்கப்பட்ட இடமும் இந்தப் பகுதி தான் என உறுதி செய்யப்படாத செவி வழிச் செய்தி இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தில் வாகன நிறுத்தும் இடம் கட்டக்கூடாது. அந்த இடத்தை அகழாய்வு செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளை அரசும் வரலாற்று ஆய்வாளர்களும் மேற்கொள்ள வேண்டும் என மதுரை வாசிகள் கூறுகின்றனர்.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
