கவிஞர் அபி – -----------------------இளங்கோ கிருஷ்ணன்

தமிழ் கவிஞர்களில் தனித்துவமானவர் அபி. வானம்பாடி கவிஞராய் படைப்புப் பயணத்தைத் தொடங்கினாலும் வானம்பாடிகளின் உரக்கப் பேசுதல், சந்தக் கவிதைகள், சமூக-அரசியல் கவிதைகள் ஆகிய பாணிகளைவிட்டு மிகத் தொடக்கத்திலேயே விலகி நடந்தவர்.



சூஃபி மரபின் தாக்கம் அபியின் படைப்புகளில் ஆழமாக உண்டு. மேலும் அபியின் கவியுலகம் படிமங்களால் ஆனது. படிமங்கள் எனும் கவிதை நுட்பத்தை அபியின் அளவுக்குப் பயன்படுத்திய தமிழ் நவீன கவிஞர்கள் யாருமே இல்லை. ஒருவகையில் அபியை நவீனத்துவ கவிஞர் என்றே சொல்ல வேண்டும். நவீனம் வேறு நவீனத்துவம் வேறு. மாடர்ன் என்பது ஒரு காலச் சூழல். மாடனிஸம் என்பது அக்காலச் சூழலின் சிந்தனை. அபியிடம் நவீனத்துவ சிந்தனை தாக்கங்கள் உண்டு. உதாரணம் டி.எஸ்.எலியட் முன்வைத்த நியோ கிளாசிஸத்தின் தாக்கங்கள்.



கவிதையாக்கத்தில் டி.எஸ்.எலியட் மற்றும் எஸ்ரா பவுண்ட் இருவரும் முன்வைத்த கவிதைக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு கவிதைகள் எழுதியவர் அபி. படிம உடல், சுண்டக் காய்ச்சிய சொற்கள், கட்டுப்பாடான உணர்வுதளம், சூட்சமமான உள்ளடக்கம், குறீயிட்டு தளம் கொண்ட கவித்துவம், சம்பவத்தை விவரிக்காமல் அனுபவத்தை நோக்கி நகரும் தொனி, மனதின் நுண்ணிய அனுபவங்களை நுட்பமாய் எழுதிக் காட்டுதல் ஆகியவை அபியின் பாணி.



இவற்றில் பெரும்பாலானற்றை டி.எஸ்.எலியட் தன்னுடைய நவீன கவிதைக்கான விதிகளில் குறிப்பிடுகிறார். எலியட் இதனை நவீன செவ்வியல் (Neoclassicism) என்று சொன்னார். நியோ கிளாசிஸம் ஒருவகையில் ரொமாண்டிசிஸத்துக்கு மாற்றாய் எழுந்தது. கவிதை செயல்பாட்டில் கட்டுப்பாடற்று உணர்ச்சிகளை கொண்டுவந்து குவிப்பதற்கு மாற்றாக, கவிதையில் பிரக்ஞையின் தலையீட்டை முன்வைத்தது. சரியாகச் சொன்னால் உட்கார்ந்து வம்படியாகக் கவிதை எழுதுவதை அல்ல எலியட் சொன்னது. கவிதை எழுதுதல் எனும் செயல்பாட்டை ஒரு தியானம் போல பிரக்ஞையோடு Esoteric பண்புகளோடு அணுகுவது அது. அபி போன்ற சூஃபியிஸத்தில் ஆர்வம் உடைய ஒருவர் இப்படியான கவிதையாக்கத்தில் ஈடுபட்டது மிக இயல்பானது. இந்த Esoteric பண்புகளே அபியைத் தனித்துவம் மிக்க கவிஞராகவும் உருவாக்கியிருக்கிறது.



கோவையில் எனக்கு தேவமகள் அறக்கட்டளை விருது கொடுக்கப்பட்டபோது மூத்த படைப்பாளிக்கான பிரிவில் அவருக்கும் விருது கொடுத்தார்கள். நான் மிகப் பெருமையாக உணர்ந்த தருணங்களில் ஒன்று அது. கிருஷ்ணன் என்றே என்னை அழைப்பார். நான் ’அது என் அப்பா பேர் சார் என் பேர் இளங்கோதான்’ என்பேன். ’அதனால் என்ன எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு’ என்று குழந்தை போல் சிரிப்பார். அபிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கியுள்ளது நிஜமாகவே மகிழ்ச்சியான செய்தி. இதை முன் வைத்தாவது அவர் கவிதைகளை புதிய வாசகர்கள் தேடிப் படித்தால் நல்லதுதான். வாழ்த்துகள் சார்…



இளங்கோ கிருஷ்ணன்

[முகநூலில் எழுதியது]

எழுதியவர் : இளங்கோ கிருஷ்ணன் (6-Aug-19, 2:52 am)
பார்வை : 61

மேலே