ஒருநாள்

நீ அப்படி செய்திருக்க கூடாது.

ஒரு கனவைப்போல் கலைந்திருக்கிறது.
கவனமற்று உடைந்து போனது.

யாருமற்ற வெளியில் நின்றிருந்தேன். அது தனிமைதான். எனினும் நான் நானாக இருந்தேன். என்னில் எதுவும் நிரம்பவும் இல்லை. நான் எதிலும் மூழ்கவும் இல்லை.

உன் காலங்கள் என்மீது பட்டு தெறிக்காத நேரத்திலும் நான் அப்படி ஒன்றும் சோதனையிலும் நெருக்கடிகளிலும் உழலவில்லை.

நீதி தன்னை உருவகம் செய்து கொள்ள
நேர்மைகள் தன்னை கற்பனைகளில் இருந்து மீட்டுக்கொள்ள போராடிக்கொண்டிருந்த பெரும் அல்லல் மிகுந்த நேரங்கள் அவை.

நாம் பயணத்தில் வேறுபட்டு இருந்தோம். பிழைப்பின் அவசியம் கருதி ஆசைகளில் ஒடுங்கிய மனதை அங்கேயே விட்டுவிட்டு நம்மை செலுத்திக்கொண்டு இருந்தோம்.

நாம் மௌனமாக இருந்தோம். ஒருவரிடம் மற்றவர் கண்ணீர் தெரியாதிருக்க பெரும் பிரயாசை செய்தோம். நம் பெருமூச்சில் இறந்த காலத்தின் வலி அப்படியே இருந்தது.

இனி வருவது குறித்த எந்த ஒன்றும் அத்தனை நிச்சயமாக தெளிவாக இல்லை. நம்மால் சில அடிகள் கூட நடக்க முடியவில்லை.

உன் தோளில் சாய்ந்து கொண்டு ஆண் என்பதை மறந்து அழுது முடித்த பின்தான் சாவு பற்றிய பயத்தை மறக்க முடிந்தது. அப்போதும் நீ எதுவும் பேசவில்லை.

உன் கைகளில் பலம் கூடிக்கொண்டே வந்தது. நான் நடுங்கியவாறு அந்த ஜன்னலை திறந்து பார்த்தேன். இரவு.

அதுவோ அவர்களோ அவைகளோ திரும்பி வரலாம். வராதும் செல்லலாம். அருகில் இருந்த மனிதர்களில் யார் உயிருடன் இருக்கலாம் யார் பசியுடன் இருக்கலாம் என்பதை அப்போது நாம் பேச நினைத்து இருப்போம்.

ஒளி இல்லாத அந்த அறை நம்மை உளவு பார்க்கும் என்று நீ சொல்லி இருந்தாய். பேசவில்லை நாம்.

பேசவேயில்லை நாம் எப்போதும். நமக்கு வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ள ஒன்றும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வெகு காலம் ஆகவில்லை.

சூரியன் மறைவதற்கு முன் எங்கிருந்தோ சிறிதளவு நீர் கொண்டு வருவாய். அது
நம் உயிர் மீது ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு மழையை போல் உட்செல்லும்.

ஒரு நாள் வெகுதொலைவில் யாரோ யாரையோ உரக்க அழைக்கும் குரல்.
மேகங்களுக்குள் அந்த குரல் நுழைந்து வந்திருக்கும். அத்தனை கம்பீரம். ஈரமும் கூட.

மனிதர்கள் இருக்கிறார்கள். எங்கோ அருகில் இருக்கிறார்கள். ஒரு குடும்பம் கூட இருக்கலாம். எனக்கு மயக்கம் தெளிந்தது போல இருந்தது.

காற்று மரங்கள் மெல்ல அசைந்தன. பறவைகள் பயமிழந்து பறந்தன. எறும்புகள் புற்றில் இருந்து வெளியேறி சூரிய வெயிலில் உலவின. அப்போது யாருக்கும் உணவு வேண்டி இருக்காது.
பூமியின் இருப்பை தானாய் உணர்ந்து கொண்டிருந்த நேரம். மண் மீது ஒரு வாசனை நெளிந்தது.

நாம் ஒருவருக்கு ஒருவர் புன்னகை செய்து கொண்டோம். அது செய்திகள் மீது பூக்களை தூவி வரவேற்பது போன்ற நிகழ்ச்சி.

வெகுநேரம் நாம் அப்படி இல்லை. எந்த அழுத்தமும் இன்றி கிள்ளிப்பிடுங்கிய ஒரு வேர்க்கிழங்கை போல் இதயத்தில் ஒரு வேதனை உண்டு.

அந்த வேதனை நாம் சந்தித்திராத ஒற்றையாய் இருந்த ஒரு காலத்தில் நமக்கு பரிசளிக்கப்பட்ட ஒன்று.

மனதில் வெட்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்தவர் நாம். துயரத்தின் கொடுக்கில் வழுக்கி விழுந்தபோது ஒருவரை யொருவர் பற்றிக்கொண்டோம். காப்பாற்றிக்கொண்டோம்.

மனிதர்கள் நாம் என்ற நம்பிக்கையை அடைந்த பின் இங்கு வந்து சேர்ந்தோம்.
நம் பயணங்கள் வெகு நாட்கள் ஆகி வெகு தொலைவை கடந்து வந்தது அல்ல.

இங்கிருந்து சற்று தள்ளி அங்கும் அதற்கு கொஞ்சம் அப்பால் என்றுதான் இருந்தது. அது போதுமானதாக இருந்தது.

நாம் நம்மை புரிந்து கொள்ளவும் நம்பவும் முயற்சி செய்யவில்லை. எனவே ஒருவரை ஒருவர் மன்னிக்க வேண்டிய அவசியம் இல்லாது போயிற்று.

நாம் ஒருவரை ஒருவர் தேடிக்கொண்டே இருக்கவில்லை. இதுதான் நம்மிடம் வர மரணம் அஞ்சியதோ என்று நினைத்து கொள்வேன்.

ஒருநாள் யாருக்கோ எதுவோ ஆகலாம். முடிந்து போகலாம். நாம் எதற்கோ பிரிக்கப்படுவோம். இதையும் ஓர் முறை கூட சிந்திக்கவில்லை. நம் எண்ணங்கள்
உறைந்து போய் விட்டது.

அதை அப்படியே விட்டு விலகி இருந்தோம். அதன் சுமையை நம்மால் தாங்க முடியவில்லை.
அதை எறிந்து வீசியபின் ஒரு மானுடத்தின் அறைகூவலாய் மட்டும் ஒருவர்க்கு ஒருவர் தெரிய நேர்ந்தது.

எதுவுமே இல்லாத யாரும் இருக்காத எங்கும் செல்ல முடியாத எப்போது என்னும் காலங்கள் முடிந்து போய் இருந்த ஏன் என்ற தேடலும் பரபரப்பும் அற்றுப்போன ஒரு வாழ்க்கை.

பாறையை விழுங்குவது போல் ஒரு தினத்தின் சுமையாய் வாழ்ந்து வந்திருந்த எல்லாமும் முடிந்தே போய் இருந்தது. இனி ஒன்றும் இல்லை என்பது பெரிய விடுதலையாக உணர்ந்தோம்.

இது வாழ்க்கை இல்லையா? இதில் ஓர் அழகை உணர முடியவில்லையா? இதில் உன்னை ஆராதிக்க தவறி விட்டாயா?

இப்போதும் நான் நம்பவில்லை. நீ அப்படி செய்திருப்பாய் என்பதனை.

எழுதியவர் : ஸ்பரிசன் (23-Aug-19, 11:08 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : orunaal
பார்வை : 243

மேலே