பறந்து திரியும் பரிதாபம் தொலைய நிலையாகி நிற்கும் கலை - அமைதி, தருமதீபிகை 409

நேரிசை வெண்பா

பறந்து திரியும் பரிதாபம் எல்லாம்
இறந்து தொலைய இருந்து - பிறந்த
நிலையை நினைந்து நிலையாகி நிற்கும்
கலையை உணர்க கனிந்து. 409

- அமைதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பேராசையால் ஓடி உழலும் பரிதாப நிலைகள் யாவும் ஒழிந்து இனிய அமைதியாய் இருந்து பிறவிப் பயனான உறுதி நலனை ஓர்ந்து உணர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதனுடைய வாழ்க்கை நிலைகளும் பதைபதைப்புகளும் அதி வியப்புகளாய் இருக்கின்றன. பசித் தீ வயிற்றில் இருத்தலால் மக்களை அது இயக்கி வருகின்றது. அந்த இயற்கைப் பிணியைத் தணிக்க மனிதன் முதலில் முயற்சியில் இறங்கினான். பின்பு படிப்படியே பலவகைத் தேவைகள் தொடர்ந்து பெருகின. அந்த அவலப் பெருக்கில் ஆழ்ந்து அல்லல் அடைய நேர்ந்தான்.

ஆசை என்னும் பெருங் காற்றூடு இலவம் பஞ்சு போல் மனிதன் நிலை குலைந்து அலையும் நிலைமை கருதி ‘பறந்து திரியும் பரிதாபம்’ என்றது. பரிதாபம் - வருத்தம், துன்பம். பரிவால் நேர்ந்தது பரிதாபம் ஆயது. மேலோர் இரங்கி வருந்தும்படி சாந்துணையும் மாந்தர் இழிந்து திரிகின்றனர்.

சிறந்த மனிதப் பிறப்பை அடைந்தும் அதன் பயனையடைய நினையாமல் கொடிய மடமையாய்க் குருட்டு வழியில் மருண்டு திரிவது இருண்ட துயரமாய்த் திரண்டு நின்றது.

கட்டளைக் கலித்துறை

பிறந்துமண் மீதில் பிணியே குடிகொண்டு பேரி’ன்’பத்தை
மறந்துசிற் றின்பத்தின் மேல்மய லாகிப்புன் மாதருக்காய்ப்
பறந்துழன் றேதடு மாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்(து)
இறந்திட வோபணித் தாயிறை வாகச்சி ஏக’ம்’பனே!

பிறவிப் பயனைப் பெற விழையாமல் வாழ்நாளை வீணே கழித்து விளிந்து படுவாரை நினைந்து பட்டினத்தார் இங்ஙனம் இரங்கி வருந்தியுள்ளார்.

வந்த வரவைச் சிந்தனை செய்யாமல் அந்தகராய் அலைந்து அந்தகனுக்கு இரை ஆகின்றனர் என உலக மக்களின் பரிதாப நிலைமையைக் குறித்து ஒரு பெரியவர் பரிந்து பேசியுள்ளார். அவல ஓட்டம் அழிவின் நீட்டமாயது.

’சருகு அரிக்க நேரமே அன்றிக் குளிர் காய நேரம் இல்லை’ என்பது பழமொழி. ஓயாமல் ஓடி அலைந்து பாடுபட்டு உழல்வதேயல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்து தெய்வ சிந்தனை செய்து இனிய சுகத்தை அனுபவிக்க முடியவில்லை என்பது இம்முதுமொழியில் முடிந்துள்ளது. வருந்தி உழைக்கின்றவர்கள் இருந்து இளைப்பாறுகின்றார்கள். களைப்பு நீங்க அமர்ந்திருப்பது மீண்டு உழைப்பதற்கு உறுதியாகின்றது.

பறந்தலைந்த வருத்தம் அமைதியாய் அமர்ந்திருந்த பொழுது நீங்கி விடுதலால் அமைதியின் சுவையை அறிந்து கொள்கின்றோம். உள் அமைதி தெள்ளமுதம் ஆகின்றது.

உறக்கத்தில் ஒரு சுகம் இருப்பதை அனைவரும்.அனுபவித்து வருகின்றனர். எதனால் அது சுகம் என வந்தது? தூக்கத்தில் மனம் யாதும் அலையாமல் அமைதியாய் இருத்தலால் ’தூங்கும் சுகமது பிரமச் சுகம்' என அது துதிக்க நேர்ந்தது.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நிரையில் தொடங்கினால் 12. எழுத்து!

2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

துயிலை இன்பெனச் சொல்லுதல் இந்தியத்(து)
இயலும் நெஞ்சம் இலாமையி னாலன்றோ?
பயிலும் நெஞ்சம் பரந்து திரிதரும்
செயலில் இல்லைச் சிறிதும் சுகமரோ. பிரபுலிங்க லீலை

மனம் புறத்தே அலைந்து திரியாமல் உள்ளே அடங்கியுள்ளமையினாலேதான் உறக்கம் இன்பம் என நேர்ந்தது. ஆகவே புலன்களின் வழியே வெளியே ஓடி அலைவதால் யாதொரு சுகமும் இல்லை என இது உணர்த்தியுள்ளது. உள்ளம் அகமுகமாகவே உயிர் சுக சொரூபமாகின்றது.

உயர்ந்த ஆன்ம சுகம் விளைவதால் சாந்தம் சிறந்த சீவ அமுதமாய் அமைந்து நிற்கின்றது. அந்த அனுபவத்தைப் பெற்ற அளவு மனிதன் புனிதன் ஆகின்றான். உயிர்க்குறுதி நாடுவதே உயர்ந்த உணர்வின் சிறந்த பயனாம்.

’நிலையை நினைந்து கலையை உணர்க’ என்றது. மனிதப் பிறவியை எய்தியுள்ள மகிமையை உணர்ந்து உரிமையைத் தெளிந்து உறுதி நலனை விரைந்து பெறுக என இது வரைந்து வேண்டியது. தன் நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பொழுது நிலையான இன்பம் எளிதாக வருகின்றது.

மன ஒருமையான அமைதியில் தேவபோகம் மேவியுள்ளமையால் மெய்ஞ்ஞானிகள் எவரும் எஞ்ஞான்றும் அதனை மேவி வருகின்றனர்.

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நிலையுறு நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
நிகழ்சாந்தமாம் புதல்வனும்
நெறிபெறும் உதாரகுண மென்னுநற் பொருளுமருள்
நீக்குமறிவாம் துணைவனும்

மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
மனமெனும் நல்லேவலும்
வருசகல கேவல மிலாத விடமும்பெற்று
வாழ்கின்ற வாழ்வருளுவாய்!

அலையிலாச் சிவஞான வாரியே ஆனந்த
அமுதமே குமுத மலர்வாய்
அணிகொள் பொற்கொடி பசுங்கொடி யிருபுறம்படர்ந்(து)
அழகுபெற வருபொன்மலையே!

தலைவர்புகழ் சென்னையிற் கந்தகோட்டத் துள்வளர்
தலமோங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே! 7 தெய்வமணி மாலை, முதல் திருமுறை, முதல் தொகுதி, அருட்பா

நிராசையாகிய மனைவியை மணந்து சாந்தம் என்னும் புதல்வனைப் பெற்றுச் சித்த சுத்தியோடு வாழும் உத்தம வாழ்வைக் தமக்குத் தந்தருளும்படி முருகக்கடவுளிடம் இராமலிங்க அடிகள் இதில் வேண்டியிருக்கிறார். உயிர்க்குறுதியாய் இருமையும் சாந்தம், இதம் புரியும் என்பது புதல்வன் என்னும் குறிப்பால் பெறப்பட்டன. இனிய குண நீர்மைகளை மருவி மேலோர் இன்பம் நுகர்கின்றனர்.

தன் மனம் அமைதியுறின் அந்த மனிதன் அதிசய நலங்களை அடைகின்றான். சாந்தம் ஆகிய சம்பத்து தன்னுள்ளேயே அமைந்திருக்கின்றது; அதனை இனிது பயன்படுத்தி மனிதன் உயர்நிலையை அடைய வேண்டும்.

Nothing can bring you peace but yourself. - Self-Reliance

'உன் உள்ளத்தைத் தவிர வேறொன்றும் உனக்குச் சாந்தியைக் கொடுக்காது' என்னும் இது அறியவுரியது.

புலன்களின் புலையாடல்கள் ஒழிந்து உள்ளம் அமைதியாய் அமையின் அங்கே நலன்கள் பல விளைகின்றன. அந்த இனிய விளைவுகள் இருமையும் இன்பம் புரிகின்றன.

’சாந்தமே நலனுறு தாரம்’ - 20 பழம்பொருந்து சருக்கம், இரண்டாம் பாகம், பாரதம் - என்று சகாதேவன் கண்ணனிடம் உரைத்திருத்தலால் அவனுடைய உள்ளப் பண்பையும், உண்மை நிலையையும் நாம் உணர்ந்து கொள்கின்றோம்.

சிற்றின்பத்திற்கு இனிய சாதனம் மனைவி ஆதல் போல், பேரின்பக்திற்கு உரிய துணை சாந்தமேயாதலால் அது நல்ல தாரம் என வந்தது. பொல்லாத தாரங்களும் உள்ளனவாதலால் அந்தக் கோரங்களை விலக்குதற்கு நலன் உறுதாரம் என நன்மையை நினைவுறுத்தினார். ஐம்புலன்களும் ஆர நுகரும் தேக போகத்தை எதிர் காட்டியது ஆன்மாவின் ஏக போகத்தை இனிது காண வந்தது.

பொறிகளால் நுகரும் உலக சுகங்களில் தலைமையானது மனைவியிடம் உள்ளது. அறிவால் நுகரும் ஆன்ம சுகங்களுள் உயர்வானது அமைதியில் அமைந்திருக்கின்றது.

துணையோடு தோய்ந்து நுகர்வது சிறிது சுகமாய்த் தோன்றினும் அது ஒரு வெறியாய் விரைந்து தொலைகின்றது. தனிமையில் நுகரும் இனிமை புனித நிலையில் பொங்கி என்றும் அழியாத பேரின்பமாய் ஒளி வீசியுள்ளது.

'இனிது இனிது ஏகாந்தம் இனிது' என்ற ஒளவையார் பாடலிலிருந்து தனிமையின் மகிமையை மேலோர் எவ்வாறு கருதியுள்ளனர் என்பது இனிது தெளிவாம்.

வெளியே புலன் நுகர்வில் களி மயக்கங்களே கலித்து வருகின்றன. உள்ளே உணர்வு நுகர்வில் உயர்வான பேரின்பமே பெருகி எழுகின்றது.

That inward eye which is the bliss of solitude. - Wordsworth

'தனியான உள்நோக்கம் ஏகாந்தத்தின் பேரின்பம் ஆகின்றது’ என வேட்ஸ்வொர்த் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ஙனம் பாடியிருக்கிறார். தனிமையில் புனித இனிமை மருவியுள்ளமையான் உயர்ந்தோர் எவரும் அதனைப் புகழ்ந்து வருகின்றனர்.

மோகாந்த காரம் முழுதும் ஒழியுமே
ஏகாந்தம் எய்தின் இவண்.

தனியான அமைதியில் அவலங்கள் ஒழிந்து ஆன்ம நலன்கள் வளர்ந்து வருகின்றன. அதனைப் பெறுவது பேரின்பமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Aug-19, 9:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 71

சிறந்த கட்டுரைகள்

மேலே