உலகுயிர் எல்லாம் ஒருபேர் இறைவன் இலகும் உடலாம் – கருணை, தருமதீபிகை 419

நேரிசை வெண்பா

உலகுயிர் எல்லாம் ஒருபேர் இறைவன்
இலகும் உடலாம் இயல்பால் – நிலவுயிர்க்(கு)
ஓர்துயரம் செய்யின் உடையான் உனக்குடனே
கூர்துயரம் செய்வன் குறித்து. 419

- கருணை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சீவ கோடிகள் யாவும் இறைவனுடைய திருமேனிகளாயுள்ளமையால் ஒரு சிறு பிராணிக்கு ஊறு செய்யினும் கடவுள் உடனே உனக்குக் கொடிய துயரம் செய்வர்; இவ்வுண்மையை உணர்ந்து புன்மை புகாமல் நன்மை யுறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சீவதயை மிகவும் உயர்ந்த குணம்; இருமையிலும் பெருமை தரும்: கதி நலங்களை அருளி வருகின்ற அதனை உரிமையாகப் பேணி வருபவன் உயர் பதவிகளை எளிதே பெறுகின்றான் என்பதை இதுவரை அறிந்து வந்தோம்; அத்தகைய இனிய அருளை மறந்து இடர் புரிய நேர்வது கொடிய மடமையாம் என இப்பாடல் உணர்த்துகின்றது.

தன்னால் எவ்வகையிலும் பிறவுயிர்களுக்கு இடர் நேராமல் ஓர்ந்து ஒழுகுதலும், நேர்ந்த துயரங்களை நீக்கி அருளுதலும் ஆகிய இருவகை நிலைகளில் கருணை இயங்கி வருகின்றது.

அல்லல்களை நீக்கியருளும் வல்லமை எல்லாம் வல்ல இறைவன் ஒருவனுக்கே இயையுமாதலால் இடர் தீர்க்க முடியாவழி உள்ளம் கரைந்து பரமனை நினைந்து கருணையாளர் உருகி நிற்க நேர்கின்றார்

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

ஆருயிர் யாதொன்(று) இடருறும் ஆங்கதற்(கு)
ஓருயிர் போல உருகிவுயக் கொள்ள
நேரின் அதுமுடி யாதெனின் நெஞ்சகத்(து)
ஈரம் உடைமை அருளின் இயல்பே. - சூளாமணி

அருளின் அமைதிக்கு இது பொருள் செய்துள்ளது

உயிர்கள் துயருறக் காணின் நெஞ்சம் இரங்கித் தஞ்சம் புரிவது உயர்ந்த மனிதத் தன்மையாம்; அங்ஙனம் புரியாது போகின்றவன் சிறியவன் ஆகின்றான்; அவ்வளவோடு .போகாமல் இடர் செய்ய நேரின் அவன் கொடிய கடையனாய் இழிவுறுகின்றான். மருளனாய் இழிந்து படாமல் அருளனாய் உயர்ந்து கொள்ள வேண்டும்.

‘உலகுயிர் எல்லாம் இறைவன் உடல்’ என்றது உண்மை நிலைகளை ஓர்ந்து கொள்ள வந்தது.

காணப்படுகின்றன யாவும் கடவுள் உடைமைகள்; எங்கும் அவன் நிறைந்திருத்தலால் எல்லாம் அவனுடைய திருமேனிகளாய் இசைந்து நிற்கின்றன.

எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
..இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
..ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
..பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
..நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. 1

கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
..காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
..புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
..சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி
..நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. 3

- 094 பொது, ஆறாம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

தரவு கொச்சகக் கலிப்பா

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே. 15 – 5 திருச்சதகம், திருவாசகம்

இறைவன் எங்கும் நிறைந்து எல்லாமாய் உள்ளபடியை அப்பரும், மாணிக்கவாசகரும் இவ்வாறு உருகிப் பாடியுள்ளனர். அருள் சுரந்த நெஞ்சினராதலால் பரம்பொருளின் உண்மை நிலையை உலகம் தெளிந்து உய்ய இங்ஙனம் வெளியாக்கி யருளினர். திவ்விய விழியினர் எவ்வழியும் அளி புரிகின்றனர்.

தாயுமானவர் சிவபூசை செய்ய விரும்பி ஒருநாள் காலையில் பூ எடுக்கப் போனார்; அழகாய் மலாந்துள்ள மலரைப் பார்த்தார். அதில் பரமன் இருப்பதாகக் கருதினார். அந்தப் பூவைப் பறிக்காமல் அளி மீதூர்ந்து வெளியே வந்தார். கருணைக் கண்ணரான அவர் கண்ட பொருள்களை எல்லாம் கடவுள் வடிவங்களாகவே எண்ணி இறைஞ்சியிருக்கிறார்.

பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே
பாவித் திறைஞ்சஆங்கே
பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்திஅப்
பனிமல ரெடுக்கமனமும்
நண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கஎனில்
நாணும்என் னுளம்நிற்றிநீ
நான்கும்பி டும்டோ தரைக்கும்பி டாதலால்
நான்பூசை செய்யல்முறையோ
விண்ணேவி ணாதியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந்தமே
மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தேஅ வித்தின் முளையே
கண்ணே கருத்தேஎன் எண்ணே எழுத்தே
கதிக்கான மோனவடிவே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 6 கருணாகரக் கடவுள், தாயுமானவர்

கடவுளைக் கருணாகரன் என்று கூவி அழைத்து வந்திருக்கும் இந்தப் பாசுரத்தில் தாயுமானவரது அருள் நிலைகளும் அனுபவ அமைதிகளும் வெளியாகியுள்ளன. உரைகளை உரிமையுடன் கருதி நோக்கி உள்ளப் பண்புகளையும் உணர்வு நலங்களையும் உறுதி நிலைகளையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

’பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்’ என்றதில் கருணைக் காட்சி கனிந்து நிற்கின்றது. கண்டன யாவும் கடவுள் உருவங்களாகவே கருதி ஒழுகிக் கருணை புரிந்து வந்துள்ள அந்த மகானுடைய ஞான சீலங்கள் மனித சமுதாயத்திற்கு அமுத தாரைகளாய் அமைந்து இனிமை சுரந்து வருகின்றன.

நெஞ்சில் அருள் கனிந்த பொழுது அந்த உயிர் வாழ்வு தெய்வத் தேசுடன் சிறந்து திகழ்கின்றது. மேலான சால்பின் பரிமளமாய்க் கருணை கமழ்ந்துள்ளது.

இந்த ஆன்ம மனம் குன்றின் எல்லா மேன்மைகளையும் இழந்து மனிதன் கீழ்மை நிலையை அடைகின்றான்.

உன் உடலுக்கு ஒருவன் ஊறு செய்தால் அவனை நீ சீறி இகழ்கின்றாய், கடவுளின் உடல்களாகிய சீவகோடிகளுள் யாருக்காவது ஏதேனும் இடர் செய்தால் இறைவன் உன்னைச் சினந்து நோக்குகின்றான்; அந்தத் தேவ கோபத்திற்கு ஆளாகாதே; எந்த உயிரையும் இறைவனாகவே சிந்தனை செய்து எங்கும் இதம் புரிந்து ஒழுக வேண்டும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

எப்பொருள் களும்தா னாகி
..இலங்கிடும் அறிவாம் ஈசன்
அப்படி விளங்கு கின்ற(து)
..அறிதலே அவன் தனக்கு
மெய்ப்படு பூசை; வேறோர்
..செயலினால் அன்று; மெய்யே
இப்படி ஞானம் தன்னால்
..இறைஞ்சிடப் படுவான் ஈசன். - பிரம கீதை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

அறிவுசம பாவனைசந் தோடமெனும் மலர்களால்
..அந்தத் தேவாம்
பிறிவரிய ஆன்மதத்து வத்தையருச் சிப்பதே
..பெரிய பூசை,
குறிவடிவில் பூசனைபூ சனையல்ல; அகண்டமெனக்
..கூறும் தெய்வம்
நெறிகொள்புறத் தொழில்களால் நேராதிங் கிதனாலே
..நிறையு மின்பம். - ஞான வாசிட்டம்

நேரிசை வெண்பா

எங்கும் சிவாலயமாம் எங்கும் சிவமாகும்
எங்கும் சிவனடிமை எங்குமாய்ப் - பங்கறவே
நிற்றல் சிவபூசை நின்றநிலை யாய்நிறைவில்
பற்றொழிதல் பூசா பலம். - சிவானந்த மாலை

இறைவன் எங்கும் பரவி யுள்ளான்; சீவர்கள் அவனுடைய உடைமைகள்; அவைகளுக்கு நன்மை செய்வதே அவனை உண்மையாகப் பூசிப்பதாம் என இவை உணர்த்தியுள்ளன. உயிர்களுக்கு இரங்கி அருள் புரிவதே கடவுளுக்குப் பெரும் பிரியம்; அந்தத் தெய்வப் பிரீதி உய்வைத் தருகின்றது.

கருணையாளர் கடவுள் உரிமையைக் கலந்து மகிழ்கின்றார்; அல்லாதவர் அவல நிலையில் இழிந்து கெடுகின்றார்; இவ் உண்மையை உணர்ந்து எவ்வழியும் தண்மை மருவி நன்மையுறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Aug-19, 9:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 106

சிறந்த கட்டுரைகள்

மேலே