முதியோர் இல்ல முகாரி ராகம்

முந்தானை பாயில்
தாலாட்டு பாடினேன்!
இன்று
முதியோர் இல்ல வாசலில்
வடிக்கிறேன்!
முகாரி ராகம்...

பனிக் குடத்தில்
உனைச் சுமந்தேன்!
தனிமைக் கடலில்
எனைத் தள்ளினாய்!

உதிரம் முறித்து
உணவாய் அளித்தேன்!
என்
உதிரம் சுண்ட
உதறிச் செல்கிறாய்!

விடுதி சேர்க்க
தகப்பன் உரைத்த போதும்,
இதயம் துடித்து உனை
இறுக்கத்தில் வைத்துக் கொண்டேன்!

பள்ளி உன்னை அனுப்பிவிட்டு,
படியோரம் காத்திருப்பேன்!

இன்று
எனை விட்டு நீ
செல்கிறாய்!
நானும் நிற்கிறேன்...
முதியோர் இல்ல
படியோரம்...
என்ன செய்ய!
பழக்கதோசம் !

பார்த்துப் போ! மகனே!
பார்த்துப் போ!
என் மகிழ்வையும்
மூட்டைக்கட்டி,
மகிழுந்தில் ஏற்றிச் செல்கிறாய்!
பார்த்துப் போ!
பக்கம் நானிருந்தால் வேகம்
நாற்பதில் செல்வாய்!
அருகில் இருப்பதாய்
எண்ணியே செல்!
அடுத்த முறையேனும்
அழைத்து வா!
என் பெயரன் பெயர்த்தியை...
என்னைத் தான்
இடம் பெயர்த்தினாய்!
உறவையேனும் கண்ணில் காட்டு!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (26-Aug-19, 7:20 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 929

மேலே