உறவுகள் உருவாகின்றன

உறவுகள் உருவாகின்றன.
ஒரு சிறு கம்பெனிக்கு முதலாளீயான ராமசாமி தன் எதிரில் நின்று கொண்டிருக்கும் பாஸ்கரிடம் “தம்பி” உனக்கு என் பொண்ணு கமலாவை கட்டிக்க விருப்பமா? நான் உன் விருப்பத்தை கேட்ட பின்னாடிதான் உங்க அப்பா, அம்மாவை போய் கேட்கனுமுன்னு நினைச்சிருக்கேன். என்றவரை சங்கடத்துடன் பார்த்தான் பாஸ்கர். சார் உங்க பொண்ணை எனக்கு கட்டித்தரணுமுன்னு நினைச்சிங்களே, அதுக்கே நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன். ஆனா இப்ப நம்ம கம்பெனியை இன்னும் முன்னுக்கு கொண்டுவர்றதுதான் எனக்கு முக்கியமான வேலை. அதனால இப்ப அதைப்பத்தி பேசவேண்டாமே. இப்படி பதில் சொன்னவனிடம் ஏதோ பேசுவதற்கு வாயை திறக்கப் போகும்போது ‘ஐயா’ என்ற குரல் அவர்கள் கவனத்தை கவர மேற்கொண்டு வந்திருந்தவர்க்கு பதில் சொல்ல இந்த பேச்சு இத்தோடு நின்று போயிற்று.
பாஸ்கர் மதுரையில் ‘டிப்ளமோ’ படித்து கோயமுத்தூர் புலியகுளத்திலுள்ள இந்த கம்பெனியில் சேர்ந்த பொழுது ராமசாமி இரண்டு “லேத் இயந்திரங்களையும்” “ஒரு ட்ரில்லிங்க் இயந்திரத்தையும்” வைத்து ஆர்டர் எடுத்து செய்து கொடிருந்தார். அப்பொழுது அவருக்கு தெரிந்தவர் பாஸ்கரை இவரிடம் கொண்டு வந்து வேலைக்கு வைத்துக்கொள், பையன் சூட்டிப்பானவன், சொல்லி ஒப்படைத்தார்.
அதன் பின் பாஸ்கரின் சுறு சுறுப்பும் பணிவும் அவரை மட்டுமல்ல அந்த கம்பெனியையும், நல்ல நிலைக்கு கொண்டு வந்தது. அவர்கள் ஆர்டர் எடுத்து செய்தது போக அங்குள்ள மில்களுக்கு சின்ன சின்ன ஸ்பேர்பார்ட்ஸ்களை சொந்தமாக செய்து கொடுக்கும் அளவுக்கு கம்பெனியை உயர்த்தினான். அவனுடைய சுபாவம் அவருக்கு பிடித்துப்போக தாயில்லாமல் வளர்த்த தன் ஒரே பெண்ணை அவனுக்கே கட்டிக்கொடுத்து தன்னுடனே வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார் அதைப்பற்றி அவனிடம் பேசினாலும் அவன் ஏதோ சாக்கு போக்கு சொல்லி தப்பித்துக் கொள்வதை பார்த்த அவர் மனம் சஞ்சலமானது. ஒரு வேளை இவனுக்கு வேறு ஏதேனும் பிரச்சினை இருக்குமோ? மூன்று மாதம் விட்டுப்பிடிப்போம் முடிவு செய்தார்.
மூன்று மாதங்கள் கழித்து ஒரு நாள் அவன் தனிமையில் கிடைத்தபொழுது தம்பி நான் சொன்ன ஏற்பாட்டை பத்தி யோசிச்சியா? முடியாதுன்னு சொன்னா கூட ஒண்ணும் வருத்தப்படமாட்டேன், தைரியமா சொல்லு, என்று கேட்டார். பாஸ்கர் நீங்க இவ்வளவு தூரம் கேக்கறதுனால நான் சொல்றேன் சார். எனக்கு அப்பா அம்மா கிடையாது. என்னோட சின்ன வயசுல அவங்க இறந்துட்டாங்க, சொந்தக்காரங்க என்னை ஒரு “அனாதை ஆஸ்ரமத்தில” கொண்டு போய் சேர்த்துட்டாங்க. அங்கிருந்து தான் நான் “டிப்ளமோ” வரைக்கும் படிச்சேன். அப்புறம் தெரிஞ்சவங்க மூலமா உங்க கிட்டே வந்து சேர்ந்தேன். இந்த மாதிரி சூழ்நிலையிலே இருக்கற நான் எப்படி உங்க பொண்ணை கட்டிக்க முடியும்? உங்க பொண்ணுக்கு அம்மா இல்லையே தவிர உங்களை சுத்தி அத்தை, மாமான்னு நிறைய பேரு இருக்கறாங்க. நான் தனியாளா இருக்கறது எனக்கு எப்படியோ இருக்கு சார்.
இவ்வளவுதானா? நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன். தம்பி உங்க அப்பா, அம்மா ஸ்தானத்துல இருந்து நான் இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன், என்றவர் கல்யாண வேலைகளுக்கான காரியங்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். கல்யாணம் முடிந்து அவர்களுக்கு “மலர்விழி” என்ற பெண் குழந்தை பிறந்து மூன்று வருடங்களுக்குள் ராமசாகி ஒரு விபத்தில் காலமாகிவிட்டார். ஏற்கனவே தாயில்லாமல் தவித்த கமலா தந்தையும் இறந்ததால் மிகுந்த வேதனைப்பட்டாள். பாஸ்கர் “நானும் மலரும்” உனக்கு இருக்கிறோம் என்று கூறி அவள் மனதை தேற்றினான்.
மலர் இப்பொழுது மூன்றாவது வகுப்பு வந்து விட்டாள். இவர்களுக்கு திருமணம் ஆகி விளையாட்டுப் போல ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன. பாஸ்கரன் வியாபார சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்வான். அப்படி போகும்போது அருகில் குடியிருக்கும் கமலாவின் அத்தை இவர்கள் வீட்டில் வந்து தங்கிக்கொள்வாள். இதனால் பாஸ்கர் நிம்மதியாக வெளியூர் சென்று வியாபார விசயங்களை பார்த்துக்கொள்ள முடிகிறது. ஒரு முறை வியாபார விஷயமாக பாஸ்கர் கிளம்பி சென்றவன் அங்கிருந்து வீட்டுக்கு வர “இரண்டு நாட்கள்” ஆகும் என்று போன் செய்தான். இவளுக்கும் குழந்தைக்கும் அவன் இல்லாமல் கஷ்டமாக இருந்தது. அப்பொழுது அவள் அத்தை நம்ம சொந்தக்காரங்க எல்லோரும் மதுரை, திருச்சி, ராமேஸ்வரம், கோயிலுக்கு கிளம்பி போறாங்க. நான் போலாமுன்னு இருக்கேன், நீயும் வர்றியா? என்று கேட்டாள். அவர் வெளியூருக்கு போயிருக்காறே, இழுக்க, அட போன்லதான் உங்க வீட்டுக்காரர்கிட்டே கேளேன், அத்தை சொல்ல இவளும் பாஸ்கருக்கு போன் செய்து விவரங்களை தெரிவித்தாள். அவனும் தாரளமாய் போய் வா, நானும் வர இரண்டு நாளாகும், அதுவரைக்கும் நீ அங்க என்ன பண்ணுவே? போய்ட்டு வா.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தரிசனம் முடிந்து கோயில் வீதியில் வண்டி திரும்பும்பொழுது உள்ளிருந்த கமலாவின் கண்களுக்கு பாதையில் நின்று கொண்டிருப்பவன் தன் கணவன் போல தோற்றமிளிப்பதாக தோன்ற நன்கு உற்று கவனித்தாள். ஆம் தன் கணவன் பாஸ்கரேதான். இவள் ஜன்னல் வழியாக அவனை கூப்பிட எத்தனித்தவள் அவன் அருமே ஒரு “பதினைந்து வயது” மதிக்கத்தகுந்த பெண் ஒன்று அவனை ஒட்டி உரசி பேசிக்கொண்டிருக்க அந்த பெண் அருகில் அவள் அம்மாவாயிருக்கவேண்டும், நடுத்தரவயதானவளாய் இருந்தாள், இவர்கள் அருகே ஒரு அறுபது வயது மூதாட்டியும் காணப்பட்டாள். யார் இவர்கள்? மனதில் கேள்வி தொக்கி நிற்க, அதன் பின் சென்ற இடமெல்லாம் இதைப்பற்றியே சிந்தனையாயிருந்தது. நல்ல வேளை அவளைத்தவிர வேறு யாரும் பாஸ்கரை பார்க்கவில்லை. அந்த பெண் தன் கணவனின் அருகில் வெகு உரிமையுடன் நிற்கிறாள் என்றால் கண்டிப்பாக அவனுக்கு நெருக்கமானவர்களாகத்தான் இருக்க வேண்டும். இந்த ஒன்பது வருட குடும்ப வாழ்க்கையில் இப்படி மதுரையில் தெரிந்தவர் குடும்பம் இருப்பதாக இதுவரை தன்னிடம் சொன்னதேயில்லை. யோசிக்க யோசிக்க அவளுக்கு மண்டையே வெடித்து விடும்போல் இருந்தது.
வீடு வந்து சேர்ந்த பொழுது பாஸ்கர் வீட்டில் இருந்தான். அவர்களை நன்கு வர்வேற்றான். அவனை பார்த்தவுடன் முதலில் அவளுக்கு கோபம் வர பின் யோசித்தாள் இத்தனை வருட வாழ்க்கையில் அவன் “தப்பானவன்” என்று ஒரு முறை கூட சொல்லும்படி அவன் செய்கைகள் இருந்ததில்லை. இப்படியிருக்க யாரோ “ஒருத்தியுடன்" இருந்தான் என்று அவனிடம் சண்டைக்கு போவது அநாவசியம் என்று அவள் அறிவுக்கு பட்டது. ஆகவே நேரம் வரும்போது கேட்போம் முடிவு செய்தாள்.
குழந்தை தூங்கிவிட்டாள். பாஸ்கர் கம்பெனி கணக்கு பதிவேட்டை பார்த்துக் கொண்டிருந்தான். இவள் மெல்ல அவனருகில் சென்று ‘ஆமா இந்த முறை’ எந்தெந்த ஊருக்கு போயிருந்தீங்க? இவன் ஆச்சர்யத்துடன் தன் கண்களை பதிவேட்டிலிருந்து விலக்கி அதிசயமாயிருக்கு நீ இப்படி கேக்கறது, என்றவன் திருச்சி, அப்புறம் மதுரை, தூத்துக்குடி போயிட்டு அப்படியே இங்கேவந்துட்டேன். ஆமா ஏன் கேக்கறே ? இவள் உங்களை மதுரையில பார்த்தேன் என்று இழுத்து அவன் கண்களை பார்க்க அவன் கண்களில் எந்த சலனமுமில்லாமல் கூப்பிட்டுருக்கலாமில்லை என்றான். இல்லை உங்களோட ஒரு சின்னப்பொண்ணும், அப்புறம் கொஞ்சம் வயசானவங்க இரண்டு பேரும் இருந்தாங்க, இழுத்து சொல்லிவிட்டு அவன் கண்களையே பார்த்தாள். அவன் கண்களில் மெல்லிய சலனத்தை காட்டினான்.
இருந்தாலும் அதே வார்த்தையை திரும்ப சொன்னான். அவங்க இருந்தா என்ன? என்னைய “கூப்பிட்டிருக்கலாம்ல”. பதில் சொல்லவும் கமலாவுக்கு மனசு திருப்தியாயிற்று. அவர்கள் தப்பானவர்கள் இல்லை. இவனும் தப்பானவனுமில்லை. இல்லை நீங்க அவங்களோட ரொம்ப அந்நியோன்யமா இருந்தீங்களா? உங்களை ஏன் தொந்தரவு பண்ணனும்னு கூப்பிடாம விட்டுட்டேன். இப்ப புரியுது இவன் “அநாதையின்னு” சொன்னானே, அப்புறம் எப்படி இவங்களோட இருக்காங்கன்னுதானே உனக்கு சந்தேகம்? இல்லை அவங்க யாருன்னு நானும் தெரிஞ்சுக்கலாமில்லை.
பாஸ்கர் பெருமூச்சுடன் அவங்க பேர் ராணி, அவங்களும் என்னை மாதிரி நான் வளர்ந்த அநாதை ஆஸ்ரமத்தில வளர்ந்தவங்கதான். நான் சின்ன வயசுல எனக்குன்னு யாருமில்லையே? அப்படீன்னு அழுதுகிட்டிருப்பேன். அப்ப அவங்கதான் எனக்கு ஆறுதலா இருப்பாங்க. நான் சின்னப்பையன்கறதால என்னை “என் தம்பி”, என் தம்பி” அப்படீன்னு எல்லார்கிட்டேயும் சொல்லுவாங்க. நான் மனசளவிலே அநாதையில்லை எனக்கு ஒரு அக்கா இருக்கா அப்படீன்னு மன்சை தேத்திக்குவேன். அதே மாதிரி அவங்க “எனக்கு ஒரு தம்பி” இருக்கான் அப்படீன்னு மனசை தேத்திக்குவாங்க.
அந்த அக்கா நல்லா படிப்பாங்க, அங்கேயே “எம்.பில்” வரைக்கும் படிச்சு ஒரு காலேஜுல வேலைக்கு சேர்ந்திட்டாங்க, அப்புறம் எங்க ஆஸ்ரமத்துல இருக்கற ஒருத்தர கல்யாணம் பண்ணி வச்சு அவங்களை “வெளி உலகத்துல” தனிக்குடித்தனமா வாழ வைச்சோம். ஆனா எங்க தலை விதி ராணி அக்காவோட வீட்டுக்காரர் “சுபா” பிறந்து நாலு வருசத்துலயே இறந்துட்டாரு. அக்கா மறுபடி தனியாளாயிட்டாங்க. என்ன? இப்ப அவங்க பொண்ணு அநாதையில்லை ஏன்னா அந்த குழந்தைக்குத்தான் “அம்மா” ராணி அக்கா இருக்காங்கில்லை. அவங்க மறுபடி ஆஸ்ரமம் வரலே, அதுக்கு பதிலா என்னைய கூப்பிட்டு துணைக்கு வச்சுகிட்டாங்க. அங்க அந்த குழந்தைக்கு நான் “தாய் மாமனா” இருந்தேன். அவங்கதான் என்னை “டிப்ளமோ” முடிக்க வச்சு தெரிஞ்சவங்க மூலமா கோயமுத்தூர்ல உங்கப்பாகிட்டே சேர்த்து விட்டாங்க. நான் கோமுத்தூர் வந்துட்ட்தாலே அக்காவுக்கு துணையா எங்களை மாதிரியே “ஆஸ்ரமத்துல” இருந்த ஒரு ‘ஆத்தாவ’ அக்காவுக்கு துணையா வரவழைச்சுகிட்டோம். அவங்களுக்கும் எங்க இரண்டு பேரையும் சின்ன வயசுல இருந்தே தெரியும்ங்கறதாலே அவங்க அக்கா கூடவே வந்து இருந்துட்டாங்க. இப்ப சுபாவுக்கு பாட்டியும் கிடைச்சாச்சு. நான் மட்டும் அப்ப அப்ப போய் பார்த்துட்டு வருவேன்.
இவங்களை ஏன் கல்யாணத்துக்கு கூட்டிகிட்டு வரலைன்னு சொன்னாக்கா எங்க குடும்பமுன்னு இவங்களை காண்பிச்சா மத்தவங்க எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்கன்னுதான் நினைச்சோம். அது மட்டுமில்லாம அக்கா “நான் கல்யாணத்துக்கு” வந்தா என்னைய மாதிரி உனக்கும் ஆயிடும்னு வரமாட்டேனுட்டாங்க.
நீங்க எல்லாம் “உங்க சொந்தம்” அப்படீனு சந்தோசமாயிருக்கும்போது நான் மனசுக்குள்ளே என்னுடைய அக்கா, சுபா, அப்புறம் அந்த ஆத்தா, அவங்களை நினைச்சு சந்தோசப்பட்டுக்குவேன்.
மறு நாள் பொழுது விடிந்தது. கண் விழித்த பாஸ்கரன் எதிரில் எங்கேயோ கிளம்புகிற மாதிரி அலங்காரத்துடன் கமலாவும், குழந்தை மலரும் நின்றுகொண்டிருந்தனர். பாஸ்கரன் வியப்புடன் இவர்களை பார்க்க மலர் “அப்பா சீக்கிரம் கிளம்பு நாம எல்லோரும் மதுரை போகணும், அங்கே எனக்கு “அத்தை, பாட்டி, அக்கா” எல்லாம் இருக்காங்க, அவங்களை பார்க்க போகணும் சீக்கிரம் சீக்க்கிரம் என்றாள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (31-Aug-19, 1:07 pm)
பார்வை : 270

மேலே