அந்தக் காலம் நோக்கி
பின்னோக்கி நடக்கிறேன்
மூதாதையர் வாழ்ந்த
காலத்தில் வாழ ஆசை
என்னை உந்தித் தள்ளுவதால்.
இடைக் காலத்தைக் கடந்து விட்டேன்
இருண்ட அக்காலத்தில் ஒன்றும்
புரியவில்லை.
இன்னும் வேகம் தேவையென
பயணிக்கிறேன்
இரண்டாயிரம் காலத்திற்கு
முன்பிருந்த உலகத்தில் நான்
சென்றடைந்த இடமோ
விமான நிலையம் ஒன்று.
மதுரை மாநகரின் மையத்தில்
பாண்டிய மன்னனின் அரண்மனை
முக்கிய சாலை முனைகளில்
இணையசேவை மையங்கள்.
இரவை பகலாக்கும்
கோபுர மின்விளக்குகள்
நூறு அடிக்கு ஒன்றாக
விண்ணைத் தொட்டு நிற்கிறது.
தாத்தா பாட்டிகளின்
கைகளுக்குள் அடங்காத
விலையுயர்ந்த செல்பேசிகள்.
மாநகரின் வெளியே
விண்கல மையம்.
நிலவில் மக்கள் தொகை
பெருகியதால்
செவ்வாய் கோளில்
குடியேறச் செல்வோர்
நாளொன்றுக்கு ஆயிரம்பேர்.
@@@@##
என்னடா மகனே விழித்துக்கொண்டே
உறங்குகிறாய்?
உடல் சிலிர்த்து கண்விழித்த போது
கையிலிருந்து நழுவி விழுந்தது
அன்றைய நாளிதழ்.
சில அரசியல் அறிவியல் அறிஞர்களின்
பேச்சுக்கள் அல்லவா என் கனவுக்கு காரணம்.