சண்டனார் சார்ந்தக்கால் என்ன பலனையெதிர் ஏந்தி நிற்பீர் - வாழ்நாள், தருமதீபிகை 438

நேரிசை வெண்பா

உண்டுடுத்தி நோக்கி உவந்து களிக்கின்றீர்
தண்டெடுத்துச் சண்டனார் சார்ந்தக்கால் – கண்டெடுத்(து)
என்ன பலனையெதிர் ஏந்திநிற்பீர் இப்பொழுதே
உன்னி உணர்மின் உளத்து. 438

- வாழ்நாள், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நல்ல உணவுகளை உண்டு உயர்ந்த உடைகளை அணிந்து உள்ளம் களித்துத் திரிகின்றீர்களே; எமன் வந்தால் அவன் எதிரே என்ன சொல்லுவீர்? அதனை முன்னதாக எண்ணி உணர்ந்து முடிவை ஓர்ந்து கொள்ளுங்கள் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், மனக் களிப்பு மதி கேடு என்கின்றது.

சுக போகங்களை விழைந்து சுகிப்பதும், தம்மை வியந்து கொள்வதும் சீவர்களுடைய சுபாவங்களாய் வளர்ந்திருக்கின்றன. மையல் மோகமும் மடமை நோக்கமும் வையக இயல்புகளாய் விரிந்து வெய்ய துயரங்களை விளைத்து நிற்கின்றன. அந்த நிலைகளைத் தெளிந்து ஒதுங்கி உய்வது உயர்ந்த ஞான நிலையாம்: தெளியாமல் களிமிகுந்தலைவது இழிந்த ஈனம் ஆகும்.

’உண்டு உடுத்தி’ என்றது உள்ளும் புறமும் கொண்டு களிக்கும் திறங்களைக் கூர்ந்து காண நேர்ந்தது. மனிதன் உள்ளே தொந்தி சரியத் தின்னுகின்றான்; மேலே பட்டு முதலிய ஆடைகளைப் புனைந்து கொண்டு வெளியே உல்லாச வினோதமாய் உலாவிச் சல்லாப சாகசங்கள் புரிந்து வருகின்றான். தனக்கு விரைந்து நேர்வதை அறிந்து கொள்ளாமையால் யாதும் கவலாமல் நிமிர்ந்து திரிகின்றான். நிலைமை தெரிந்தால் நெஞ்சம் கலங்குவான்.

அந்தகன் கையில் அகப்பட்டுள்ளோமே; அந்தம் அடையுமுன் வந்த பயனை அடைந்து கொள்ள வேண்டுமே என்ற சிந்தனை சிறிது தோன்றினும் உள்ளம் துடித்து உறுதி காண நேர்வான்; உண்மை உணர்வு குன்றிப் புன்மை மண்டியுள்ளமையால் தன்மை திரிந்து நன்மை இழந்து தருக்கி அலைகின்றான். உணர்ந்தவர் உள்ளம் துடித்து உறுதி காண விரைகின்றார், உணராதவர் கவலை யாதுமின்றிக் களித்து நிற்கின்றார்.

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
கெஞ்சத் தவலம் இலர். 1072 கயமை

வஞ்சப் புகழ்ச்சியாய் வந்துள்ள இந்த அருமைக் திருமொழி இங்கே சிந்திக்கத்தக்கது. இம்மை, மறுமைக்கு உரிய புகழ் புண்ணியங்களை மருவியிருந்தும் மேலும் மேலும் புனித நிலையை அடைய விரும்பி இரவும் பகலும் மேலோர் உருகி வருகின்றனர்; உயிருக்கு உரிமையாக யாதொரு நலனும் செய்யாது நின்றும் ஒரு சிறிதும் கவலாமல் பலர் களி மிகுத்துத் திரிகின்றாரே! என்னே இது என வியந்து நோக்கிய வள்ளுவர் உள்ளம் கொதித்தார்; அந்தக் கொதிப்பை அடக்கிக் கொண்டு நகைச்சுவை ததும்ப இந்தக் குறளை உரைத்தருளினார்.

தரும நலம் கருதி மறுமை நோக்கி நிற்கும் ஞான சீலர்களினும் ஈனமான கயவர்கள் பெரிய பாக்கியசாலிகள் என்றது எவ்வளவு நளினமான வசவு! எத்துணை விநயம்! உய்த்துணர வேண்டும். சுட்டியுள்ள திட்டில் சுவைகள் சொட்டுகின்றன.

கயமைக்கு அடையாளமாக இங்கே வள்ளுவர் குறித்திருக்கும் இந்தக் கருவியைக் கொண்டு சோதனை செய்து பார்த்தால் எவ்வளவு கயவர்கள் இவ்வுலகில் இப்பொழுது உளர் என யாரேனும் உளவு கண்டு அளவு கூற முடியுமா? வரம் புகாதவர் வரம்பு மீறியுள்ளனர். பயனுறாதவர் பழியுற நேர்ந்தனர்.

நன்றறிந்து நயனடைந்தவர் நயவராய் உயர்கின்றார். ஒன்றும் அறியாது உளங்களித்துள்ளவர் கயவராய் இழிகின்றார். உயர்ந்தவர் தேவ போகங்களை நுகர்ந்து மகிழ்கின்றார், இழிந்தவர் பாவம் பழிகளில் படிந்து படு துயர்கள் நுகர்கின்றார்.

முடிவில் தமக்கு நேர்கின்ற முடிவை உணராமையால் மூடக்களிப்பில் நீடியுள்ளனர். உணர்ந்தவர் உள்ளம் கரைந்து ஒரு முகமாய் விரைந்து உறுதி நாடுகின்றனர்.

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

இளமையில் பிணியற்(று) ஒருகுடை நிழற்கீழ்
..இருநில முழுவதும் புரக்கும்
வளமைபெற் றுடைய மகற்குமெப் பொழுது
..வருங்கொல்கூற்(று) எனும்பயத் தானும்
உளமிகப் பறைநின்(று) அறையுமேல் புவிமீ(து)
..உடையரோ மற்றையர் இன்பம்
களிமிகுத் திருப்பர் தெளிவிலா மையின்மேல்
..காரியம் கருதுறா நரரே. - வைராக்கிய தீபம்

பின் விளைவதை எண்ணியுணராத மடமையே மனக்களிப்புக்கு இடனாயுள்ளது எனக் குறித்து இது விளக்கியிருக்கும் கருத்துக்கள் கருதியுணரவுரியன. விவேக விசாரணை உடையவர் ஆன்ம நலனை அவாவி உருகுகின்றனர்; அல்லாதவர் உலக மோகிகளாய் அலமந்துழல்கின்றனர்.

’நோக்கி உவந்து களிக்கின்றீர்’ என்றது மையல் மீதூர்ந்து மக்கள் களித்து நிற்கும் நிலைகளைக் குறித்து வந்தது. உடலை மினுக்கித் திலகம் இட்டுத் தைலம் பூசித் தலை மயிரை வகுப்பெடுத்து வகைப்படுத்தி கண்ணாடியில் நெடும் பொழுது தன்னைப் பார்த்து மனிதன் மகிழ்ந்து கொள்கின்றான். அந்த மனக்களிப்பு அதி விசித்திரமாயுள்ளது. தொண்டு கிழவனும் தன்னைக் கண்ணாடியில் கண்டபோது உற்று நோக்கி உவந்து களிக்கின்றான். தான் என்ற உரிமையில் ஒரு பெரிய அபிமானம் பெருகியுளது. தேகத்தை மோகித்து மகிழ்கின்றான்; தேகியை மறந்து விடுகின்றான்; எதை நோக்க வேண்டுமோ அதை நோக்காமல் குருடுபட்டு மருளனாயுள்ளமையால் ஆன்ம நிலையில் இருளடைந்து நிற்கின்றான். மயிரைத் தடவித் தடவி இனிது பேணுகின்றான்; உயிரை ஒரு சிறிதும் நினையாது ஊனமாய்ப் போகின்றான்.

நேரிசை வெண்பா

மயிரைத் தடவி மனிதன் மகிழ
உயிரைத் தடவியமன் உள்ளான் - மயிரின்மேல்
வைத்திருக்கும் ஆசையினை மன்னுயிர்பால் ஓர்சிறி(து)
உய்த்தானேல் உய்ந்தான் உடன்.

மயிர்மேல் கொண்டுள்ள ஆசையில் நூறில் ஒரு பங்கு தன் உயிர்மேல் வைப்பானாயின் மனிதன் உய்தி அடைவான் என இஃது உணர்த்தியுள்ளது. இதனால் அவன் பராமுகமாய் நிற்கும். பரிதாப நிலை அறியலாகும். நரனும், நமனும் உள்ள நிலையை இங்கே ஒருங்கே காண்கின்றோம். மயிராயிழியாதே; உயிராய் உயர்க.

காலன் வருகின்ற வேகத்தைக் கருதி நோக்காமல் தன் கோலத்தை நோக்கிக் குதூகலித்து நிற்பது மனிதனுடைய ஞான சூனியத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.

நேரிசை வெண்பா

காலன் வருமுன்னே கண்பஞ்(சு) அடையுமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே - மேல்விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு. 12 திருக்குற்றாலம், பட்டினத்தார்

காலன் வருமுன்னே கால காலனைக் கருதிக் கொள்ளுக என இது உறுதி கூறியுள்ளது. நூலறிவின் பயனெல்லாம் வாலறிவனை அடைவதேயாதலால் அந்த மேலான நிலை அறிய வந்தது. கரணங்கள் கலங்கிய மரண வேளையில் யாதும் கருத முடியாது; சாவு எய்து முன்னதாகவே சீவ ஊதியம் செய்து கொள்ள வேண்டும்; இல்லையேல் யாண்டும் தொல்லையே.

சண்டனார் எதிர் என்ன பலனை ஏந்தி நிற்பீர்! இந்த வினாவுக்குப் பதில் கூற நேர்ந்தால் நிலைமை தெரிய நேரும். இம்மை, மறுமை என வாழ்வு இருவகையாய் மருவியுளது. உடல் ஒன்றியது, ஒருவியது என அவை கருத நின்றன. உயிர்க்குச் சேமம் செய்து கொள்பவன் மறுமையில் மகிமை அடைகின்றான். 'ஆண்டவன் ஈண்டு உன்னை நல்ல மனித உருவில் அனுப்பியருளினானே; அவன் உவந்தருளும்படி நீ என்ன நன்மை செய்தாய்' என்று எமன் கேட்டால் அதற்குச் சரியாகப் பதில் சொல்ல வேண்டுமே!

மனைவியை மணந்தேன், மக்களைப் பெற்றேன், வீடு கட்டினேன், மாடு வாங்கினேன், நிலங்களை உழுதேன், வாணிகங்கள் செய்தேன், கடல் கடந்து மலையேறி உடல் வருந்தி உயர் பொருள் தேடினேன், அதிகாரங்கள் புரிந்தேன், செல்வம் திரட்டிச் சீமானாயிருந்தேன்' என இன்னவாறு ஏதேனும் சொன்னால் அவன் இகழ்ந்து சிரித்து எள்ளித் தள்ளுவான்.

இவை யாவும் உலக நிலையில் உடலோடு ஒழிவன. அங்கே பயன்படா. கருணை கனிந்து தரும சீலங்கள் மருவி எவ்வுயிர்க்கும் இதம் புரிந்து பாலில் வெண்ணெய் திரட்டியது போல் வாழ்வில் ஏதேனும் புண்ணியம் செய்திருந்தால் அது ஆன்ம அமுதமாய் அதிசய மகிமையை அருளும். அந்தப் புண்ணிய சீலனைக் கண்ணியமாகப் போற்றி எமதருமன் கதிநலம் காட்டியருள்கின்றான். உண்மை தெளிந்து உய்தி காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Sep-19, 8:10 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 85

மேலே