அன்பென்ற வேதம்
( புதியதாக தொடங்கப்பட்டிருக்கும் கற்பனையில் உருவான கதை. இக்கதையில் வரும் பெயர்கள், நிகழ்வுகள் முற்றிலும் கற்பனையே. இந்த தொடர்கதையும் கரு, " அன்பே வேதம். ". ஆதலால் இத்தொடர்கதைக்கு, " அன்பென்ற வேதம் ",என்ற தலைப்பில் எழுதப்படுகிறது.)
மலைவளமிக்கப் பகுதி, கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. அங்கு எழில் கொஞ்சும் கிராமம். அங்கு பிறந்து பட்டணம் சென்று படித்தவர் தான் அவர்.
அவர் பெயர் நல்லதம்பி.
பெயருக்கு மட்டும் நல்லதம்பி இல்லை. அவர் செயலிலும் நல்லதம்பி தான்.
பட்டணத்தில் தன் கல்வியைப் படித்து முடித்தவர் ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்தார். மாணவர்களுக்கு கல்வி பாடத்தோடு நற்பண்புகளைப் போதித்தார்.
அவருடைய வயது முப்பதைக் கடந்திருந்தது. அவருக்கு திருமணம் ஆகவில்லை.
ஆள் பார்க்க அழகாகத் தானிருப்பார். அவருக்கு பிடித்த பெண்ணை இன்னும் பார்க்கவில்லை என்பதே உண்மை.
இப்படியாக அவரது பேராசியர் பணியைச் சிறப்பாகச் செய்து வந்தார்.
சென்னை பல்கலைகழகத்திடம் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் பேரில் சென்னை பல்கலைக்கழகத்தைச் சென்றடைந்தார். அங்கு பேராசியர் பணியில் சேர்ந்தார்.
வேலையில் சேர்ந்த முதல் தினம் அவருக்குரிய இடத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது சக பேராசிரியர்கள் அவரிடம் அறிமுகம் செய்து கொண்டார்கள்.
அவர் பாடம் எடுக்க வேண்டிய வகுப்பிற்குச் சென்றார்.
மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை தந்தார்கள். முதல் பாடவேளை என்பதால் நேராகப் பாடம் எடுக்காமல் மாணவர்களின் பெயர் மற்றும் விவரங்களைக் கேட்டறிந்தார். அதன் பிறகு தன்னைப் பற்றிக் கூறினார். மாணவர்கள் மிக கலகலப்புடன் இருந்தார்கள்.
அன்றைய பாடவேளை முடிவுற்றது.
நேராக தனது கேபினுக்குள் சென்று அமர்ந்தவர் புத்தகங்களில் மூழ்கியிருந்தார். அப்போது அவரைக் காண ஒரு பெண்மணி வந்திருந்தார். புத்தகங்களில் மூழ்கி இருந்த பேராசிரியருக்கு தன்னை யாரோ பார்வையாலேயே தொடுதல் போன்ற உணர்வு ஏற்பட்டது.
சற்று நிமிர்ந்து பார்த்தார். எங்கேயோ பார்த்த முகம் அவர் முன் நின்றிருந்தது கையில் பூங்கொத்துடன்.
அவர் பார்த்ததும் பூங்கொத்தை நீட்டி வாழ்த்துக்கள் என்று கூறி சிரித்தார் அந்த பெண்மணி. "நன்றி ", என்று பதில் மொழிந்த பேராசிரியர், " தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? ".என்று கேட்டார்.
அதற்கு அந்த பெண்மணி, " நான் இந்த பல்கலைகழகத்தில் ஆங்கிலப் பேராசிரியையாக பணியாற்றுகிறேன். என் பெயர் அன்பரசி. ",என்றார். அதற்கு, "அன்பரசி மிக நல்ல பெயர். என் பெயர் நல்லதம்பி. நான் இதற்கு முன் ஒரு பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினேன். இன்று தான் இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பொறுப்பேற்றேன். ", என்று கூறினார். " ஓ! அதான் தெரியுமே! ",என்று சிரித்துவிட்டுச் சென்றார். நலலதம்பிக்கு பேராசிரியை அன்பரசியை மிகப் பிடித்திருந்தது. இருப்பினும் அவர் தன் கடமையைச் செய்யத் தயாரானார். மீண்டும் புத்தகங்களில் மூழ்கிப் போனார்.
நாளுக்கு நாள் மாணவர்கள் மத்தியில் நல்லதம்பி பேராசிரியருக்கு நல்ல மதிப்பு அதிகரித்தது. நல்லதம்பி பேராசிரியர் எதையும் அன்பாகச் செல்லும் பழக்கமுடையவர். நல்லதம்பி பேராசிரியர் சொன்னால் சரியாகத் தானிருக்கும் என்ற நம்பிக்கை மாணவர்களிடம் உருவாகியது.
மாணவர்களை நோக்கி, " எழுச்சிமிகு என் இளைய சகோதர, சகோதரிகளே! நாளைய சமுதாயத்தின் தூண்களே! இருப்பதெல்லாம் தனக்கென்றால் கடைசிவரை பிறருக்கென எதையும் மிஞ்ச விடோம். இன்பமோ, துன்பமோ இருப்பதை அனைவரும் பகிர்வோம். பலனை எதிர்பார்த்து கடமை செய்தால் ஏமாற்றமே மிஞ்சும். பலனை எதிர்பார்க்காமல் கடமை செய்தால் வெற்றி நிச்சயம் உனதாகும். மகிழ்ச்சி, சந்தோஷம், ஆனந்தமென பெருவாழ்வு உங்களுடையதாக உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். ",என்று ஊக்கமளிக்கும் வரிகளை கூறி ஊக்கமூட்டுவார். மாணவர்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினை தந்தார்.
மாணவ, மாணவியர்களிடம் மனதளவில் ஆண், பெண் வித்தியாசம் பாராது பழக வைத்தார்.
மாணவர்களை ஒற்றுமையாகப் பழகச் செய்து, அவர்களின் ஒற்றுமையைப் பயன்படுத்தி பல நற்காரியங்களை செய்து முடித்தார்.
மற்ற பேராசிரியர்களிடம் பேச்சுத்திறமை இருந்தும் செயலாளுமை இல்லை. ஆனால் நல்லதம்பி பேச்சானாலும் சரி, செயலானாலும் சரி மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பார். அவரிடம் ஏதோ சக்தி இருப்பதாக அனைவரும் நம்பினார்கள். ஆனால், அவரோ தானொரு எளிய மனிதன் என்றார்.
இந்நிலையில் தான் பேராசியை அன்பரசி நல்லதம்பியின் மீது காதல்வயப்பட்டார்.
நல்ல தம்பிக்கும் அன்பரசியின் மீது காதல் வந்தது. இருப்பினும் இருவரும் ஒருவரோடு ஒருவர் தங்கள் காதலைப் பகிர்வதில் தயக்கம் காட்டினர்.
ஒருநாள் அன்பரசியும் நல்லதம்பியும் ஏதேச்சையாக ஒரு சாப்பிங் மாலில் சந்தித்துக் கொண்டனர். அப்போது அவர்களின் உரையாடல்கள் பொதுவாக நலம் விசாரிப்பு மற்றும் குடும்பம் பற்றியதாக இருந்தது.
நல்லதம்பி அன்பரசியிடம் தன் காதலை சொல்லலாமா? வேண்டாமா? என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அன்பரசியிடமும் அதே நிலை தான். தயங்கி தயங்கி அன்பரசி நல்லதம்பியிடம், "உங்கள் மொபைல் நம்பர் என்ன? ",என்று கேட்டார். உடனே நல்லதம்பி தனது மொபைல் நம்பரைக் கூறினார். குறித்து வைத்துக் கொண்ட அன்பரசி நல்லதம்பியுடன் காப்பி சாப்பிற்குச் சென்றார். அங்கு காப்பி அருந்திவிட்டு, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு அங்கிருந்து விடைப்பெற்றுச் சென்றனர். வீட்டிற்குச் சென்று வீட்டுவேலைகளை செய்வதில் தனது அம்மாவிற்கு உதவியாக இருந்தார். இரவு உணவு சாப்பிட்டப் பிறகு அன்பரசி தூங்க தனது படுக்கைக்கு வந்தார். அப்போது தனது மொபைலை எடுத்தவள் நல்ல தம்பிக்குக் குறுஞ்சேதி அனுப்பலாமா? என்று சிந்தித்தாள்.
(தொடரும்...)