நல்லிசை
இசை
ஆகாசமிடை ஆதியில் தோன்றி
ஓங்காரமாய் ஒளியும்!
வளிமண்டலத்தைக் கோதியபடி
தூங்காது நெளியும்!
மேகங்களின் அசைவில் புவியில் இடியாய் வந்து இறங்கும்!
மரம்,செடி ,கொடிகளுக்கிடையே
தென்றலாய் ,புயலாய் உறங்கும்!
வண்டு துளைத்த மூங்கிலில்
குடைந்து சென்று குலவும்!
நீலக்கடலின் கரையோரம்
அலையுடன் ஒன்றி உலவும்!
குயிலின் இனிய குரலுடன்
கலந்து கரைந்து குழையும்!
நீரின் தடங்களில் தன்தடத்தை
சரிக்கு சரியாய் விழையும்!
விதவிதமான இசைக்கருவிகளுள்
பதவிசாகத் துயிலும்!
இத்தனை இடங்களில் இருந்தும்
இத்தனைத் தடங்கள் பதித்தும்
புதிதாய் கற்க,பணிவாய் குழந்தை
நாவில் சென்று பயிலும்!
இதமான அந்த இசையால்
குளிர்பனியாகும் கத்தரி வெயிலும்..