கஜல் கவிதைகள் -3

வெயில் சுட்டெரித்தது!
குடை இல்லை!
என்னவளோ
பேரன்புக் காரிகை!
வெயிலை மடித்து
ஒளித்து விட்டாள்!
சாலை எங்கும்
பேரன்பின் நிழல்!

உன்னைப் பற்றி ஒரு ஹைக்கூ எழுதினேன்; அது காவியமானது!
காவியம் எழுதினேன்; அது ஹைக்கூ ஆனது!

உன் புன்னகைப் பிறை பாராமல்
நான் எப்படிப் பெருநாள் கொண்டாடுவேன்?!

என் பார்வைகளோடு பாதங்களையும் பாதைகளையும்
தள்ளாடச் செய்த மதுமதி நீ!
இருண்டு அகன்ற என் நெஞ்சாகாயத்தில்
நட்சத்திர காயங்களுக்கு
நடுவே தேய்கிறாய்! வளர்கிறாய்!

உன் ஞாபகம் இருக்க எனக்கென்ன கவலை?
உன் பார்வையால் பறவை ஆனவன் நான்!
இன்று நீ இல்லாமல் வானம் சிறையானது!
இருந்தாலும் உன் ஞாபகம் இருக்க எனக்கென்ன கவலை?

அது சரி, விடைகள் வினாக்களிடம் கேள்வி கேட்பதில்லையே!
நீ ஏன் என்னிடம் 'ஏன் அழுகிறாய்?'
என்று கேட்கிறாய்?

என்னிடம் கேள் சொல்கிறேன்.
நீ என்னைத் தான் விரும்பினாய் என்று!

முதிர்கன்னியின் கூதிர் கால
இரவை ஒத்தது, உன்னால் என் மனம் படும் அவஸ்தை.

நீ பிரிந்த பின் என்னிடமிருந்து பிரிந்த புன்னகைகள் எல்லாம்
அழுகின்றன.
உன் நினைவுகளின் அகதி முகாமில்!


சூரியனால் நிரம்பிய நிலா நட்சத்திரங்களில் ஒழுகுகிறதா ?இல்லை,
உன்னால் நிரம்பிய நான் நீ தந்த காயங்களில் ஒழுகுகிறேனோ!?

என் சொல்லாசனங்களில் அமர்ந்து அர்த்தமாய் கர்ஜிப்பவள் நீ!

எழுதியவர் : பாபு கனி மகன் (11-Oct-19, 7:37 pm)
சேர்த்தது : Babu Ganison
பார்வை : 277

மேலே