இறைவி

சப்தங்களால் காயப்படாத
அதிகாலை அறிமுகம்-உன்
தேநீர்கோப்பையில் தொடங்கும்
இன்னொரு குவளை
தேநீர் நேரத்தில்
மாலையாய் பொழுது முடங்கும்
இப்படி
நேரம் முழுதும் நிரப்பிய நீ
ஓரமாய் உக்கார்ந்து விட்டால்
பாதை எது ?
பயணம் ஏது?

காற்று இல்லாத வெளி
குளிர் இல்லாத பனி
வெப்பம் இல்லாத சுடர்
கண்ணீர் இல்லாத துயர்
நீ இல்லாத நான்

நான் எனப்படுவது யாதெனில்
நீ என்பதன் நீள் வெட்டுத்தோற்றம்தானே

இதயத்திலிருந்து ஏவுகணை ஏவும்
கனத்த இதயம் எனக்கு-உன்
ஞாபக உளி தான் -இந்த
மலையை அசைத்துப் பார்க்கிறது

பீரங்கி முன்னால் பீங்கான் ஜாடியாய்-உன்
கல்லறை முன்னால் நான்

என்னைச் செதுக்கி விட்டு
பொழிந்ததற்கு கூலி கேட்காத
மேகமாய் கலைந்துவிட்டாய்

செடி கொடிகளில்
சிக்கிடும்
அதிகாலை பனித்துளியாய் -என்
இமைகளுக்கு அடியில்
இன்னமும் இருக்கிறது
உனக்கான ஈரம்

இன்றும் உன் சுவாசம் தான் -என்
நுரைஈரலை நிரப்புகிறது

எழுதியவர் : (17-Oct-19, 5:39 pm)
சேர்த்தது : RAJMOHAN
பார்வை : 51

மேலே