ஏமாற்றக் கவிதை - 7
ஏமாற்றக் கவிதை 7
====================
இரட்டை வால் குருவியின்
இரட்டை வால் போல் வாழ்வோம்
என்றே அந்நாளில் சொல்லி வைத்தாய்
தெரிந்தே ஏன் தள்ளி வைத்தாய்?
கரிச்சான் குருவி வழிவகையோ
சிற்றிதயம் தான் உன் அம்சமோ..
எரிக்கும் பார்வை எனைப் பார்த்தேன்
தெறிக்கும் வார்த்தை எனில் சேர்த்தாய்?
காகம் போல ஒற்றுமையை
நாம் கொண்டிருந்தோம் என நினைத்திருக்க..
தேகம் வலிக்கச் செய்ய வில்லைநீ
இதயம் வலிக்கும் சொல் தொடுத்தாய்?
குயில் பாட்டாய் பேசிடுவாய்
என் உயிர் மூச்சாய் தானிருந்தாய்..
வயற் காட்டு களை தனைப்போல்
எனைப் பிடுங்கி தூக்கிப் போட்டாய்?
வாத்துக் கூட்டம் வரும்வழியில்
காத்துக் கிடந்து பார்த்துக் கடந்தோம்..
நேத்து முதலேன் வர வில்லை
பார்த்துக் கிடக்கேன் காட்சி கொடு
மரங் கொத்தியாய் இருந்திடடி
மனங் கொத்தியாய் ஏன் ஆனாய்?
கொத்தி கொத்தி இதயம் தின்று
கெட்ட பெயர்க்கேன் ஆள் ஆனாய்?
மயிலைப் போல இருந்திருந்தாய்
அத்தனை மென்மை நீ கொண்டிருந்தாய்..
உண்மைக்குப் புறம்பாய் இன்று ஆனாய்
கண்மையை என் முகமேன் அப்பிவிட்டாய்?
கிளியின் பேச்சு வித்தைக்காரி
கிரங்கிப் பேசும் என் காதல்காரி..
இரக்கம் என்னும் ஒரு குணத்தை
எனக்கு காட்டேன் அடி மாயக்காரி
அ.வேளாங்கண்ணி