தமிழ் - இந்தியாவின் அடையாளம்

(தென் கொரியா தமிழ் சங்கத்தின் கலை மற்றும் இலக்கிய சந்திப்பு 2019-ல் நடைபெற்ற கவியரங்கத்தின் தலையங்கம், "தமிழ் – இந்தியாவின் அடையாளம்" என்பதினைச் சார்ந்து படைக்கப்பட்டு முதல் பரிசு பெற்ற எனது படைப்பு)

பார் போற்றும் தேசம் பன்முகம் கொண்ட என் பாரததேசம்
ஏனோ?
சிலருக்கு மட்டும் ஒருமுகம் கொண்ட "இந்தி"ய தேசமாம்!
ஒருமைப்பட்ட தேசம் ஒன்றுபட மையமொழி வேண்டுமாம்...
அதுவே "இந்தி"யாவின் அடையாளமாம்...?
பிதற்றுகிறது ஒரு கூட்டம் - அதற்கு
பல்லாக்குத்தூக்குகிறது தாயை இழந்த இன்னொரு கூட்டம்!

இலக்கணச் செறிவுமில்லை!
இலக்கியச் செழுமையுமில்லை!
சொல்வளமும் இல்லை!
இத்தேசத்தின் மொழியும் இல்லை!
பின் எதற்கு? காரணம் கேட்டால்..
பரவலாய் பேசும் மொழியாம் - அதுவும்
மொழிகளின் தாயிடமே...!
விந்தையல்லவா..!
பரவலாக காகம்தான் இருக்க - ஏன்
அழகு மயிலுக்கு தேசிய அடையாளம்?
அன்றே முழங்கினார் அறிஞர் அண்ணா..!

ஈன்றவளை மறந்து வீண் பெருமை பேசி...
மாற்றான் தாய்க்கு மகுடம் சூட நினைக்கும் சகோதரா...
உன்னிலத்துக்குரியவள் உரிமையானவள்!
உந்தன் அடையாளமானவள்!
யாரென்று சொல்கிறேன் சற்றே கேள்!

ஈரடியில் உலகப்பொதுமறை மொழிந்த வள்ளுவனின் குறளானவள்!
ஒளவை வளர்த்த அமுதமொழியானவள்!
அகத்தியனின் அற்புத மருந்தானவள்!
கட்டுத்தறிக்கும் கவிபாடும் திறந்தந்த கம்பனின் கவிதையானவள்!
இளங்கோவன் சுவைத்த இனிமைத் தேனானவள்!
பாரதி கண்ட இன்பமானவள்!
பாரதிதாசனின் கொடுவாளாய் மின்னியவள்!
நாடற்று நாடோடியாய் மற்றவர் அலைய...
மூவேந்தர் பேரரசுக் கட்டி
முச்சங்கம் அமைத்து மொழிவளர்த்த
தமிழ் கோ மாந்தரின் சபைதனிலே!
இலக்கணமாய்...
இலக்கியமாய்...
காவியமாய்...
அரியணையை அலங்கரித்தவள்!
உலகின் முதல் இலக்கணமாம்
தொல்காப்பியம் கண்டு கர்வம் கொண்டவள்!

கீழடித் தொடங்கி சிந்துதொட்டு நைல்வரை
தோண்ட தோண்ட தினமும் புதுமை தருபவள்!
இந்தியதேசத்தின் கல்வெட்டுகளில்
நீக்கமற நிறைந்திருப்பவள்!
இரகசியங்கள் பொதிந்தவள்!
வியக்கவைக்கும் விஞ்ஞானத்தின் புதையலவள்!
கல்தோன்றும் முன்தோன்றிய முதுமொழியவள்!
கடல் கடந்தும் வாழ்பவள்!
காலத்தை வென்றவள்!
என்றுமே கன்னியவள்!

பிறைவடமாய் சிரசில் சூடாமணியும்...
காதோடு குண்டலகேசியும்...
கழுத்தில் சிந்தாமணியும் அழகைக் கூட்ட!
இடையோடு மணிமேகலை மிளிர...
பேரழகியாய் அவள் ஒளிர!
வளையாபதி கொஞ்சும் வளையலாய் சிணுங்க...
சிலப்பதிகாரம் காற்சிலம்பாய் கர்ஜிக்க...
எட்டுத்தொகை எட்டநின்று தோரணம் கட்ட...
பத்துப்பாட்டு விண்முட்டி முரசுகொட்ட...
பதினெண்மேற்கணக்கு மணங்கமிழும் மலர்தனைத் தூவ...
பதினெண்கீழ்கணக்கு தங்கச்சரிகை கொண்டு வரவேற்க...
பதிற்றுப்பத்து பாதம்தனை நனைக்க...
பரிபாடல் வாழ்த்துப்பண்தான் இசைக்க...
மெல்ல இனிசாகுமென காத்திருந்தக் கயவர்தம் விழி பிதுங்க...
என்றும் இளமைமாறா புன்னகையோடு
வீறுநடை போட்டு அவள் வருவதைப் பாரீர்..!
ஆம் - அவளே எம் தமிழன்னை..!

என் இந்திய தேசமே...
பெருமைகொள்...
செம்மொழிகளில் அகரமானவள்!
மொழிகளின் சிகரமானவள்!
நீ கருவாகும் முன்பே...
குமரிமுதல் இமயம்வரை முடிசூடியவள்
நிலத்தில் பிறந்தவள் நீயென்று..!

கணிதவியல்...
இயற்பியல்...
இசையியல்...
வானவியல்...
உலக அரங்கில் வல்லரசாய்
நீ மகுடம் சூட!
அதில் வைரமாய் ஜொலிப்பவள்!
உன் பன்முகத்தன்மை பரிதவிக்கும் போதெல்லாம்...
ஓங்கி அடிப்பவள்!
தாயாய் உனை காப்பவள்!
இவளல்லவா உன் அடையாளம்..!

தமிழா மார்தட்டிச்சொல்...
தமிழ்தான் உந்தன் தாய்மொழி என்று..!
முழங்கிடு!
தமிழன்னை
இந்திய தேசத்தின் அடையாளம் மட்டுமல்ல...
இத் தரணிக்கே அவள்தான் அடையாளம் என்று...!
அன்புடன் தமிழன்னை மைந்தன்,
- சகாய டர்சியூஸ் பீ

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (21-Oct-19, 6:11 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 1343

மேலே