கிறிஸ்தவ ஐக்கியம்

“ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலை கொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை. தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக் கினபடியால்….”. (1யோ.2:9-11)

ஆம் நாம் கிறிஸ்தவர்கள்தான், ஆனால் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்கிறோமா என்பதை நம்மை நாமே கேட்டுப்பார்ப்போமாக.

மாம்ச கண்களுக்குத் தெரியாத தேவனை நான் நேசிக்கிறேன் என்று சொல்லுவது எளிதா? அல்லது எனக்கு அருகிலிருக்கும் அடுத்தவனை நான் நேசிப்பதை வாழ்ந்துகாட்டுவது எளிதா?. எது எளிது? எது கடினம்? விடை உங்களுக்கே தெரியும். ஆம், நான் தேவனை நேசிப்பது உண்மையா பொய்யா என்பது, அடுத்தவனோடு எனக்குள்ள உறவுதான் நிரூபிக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது.

“அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்” (1யோ.1:7).

இன்று நமது வாழ்வில் இருளின் கிரியைகள் அதிகரிப்பதற்கு ஒரே காரணம் ஐக்கியமின்மை. ஐக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதபடிக்கு தந்திரமாக பிசாசானவன் வீசுகின்ற வஞ்சக வலைக்குள் நாம் சிக்கியிருக்கிறோம்.

கடவுள் மனிதனை தன்னுடைய சாயலில் படைத்தார். கர்த்தர் இன்றும் அன்பாகவே இருக்கிறார் ஆனால் மனிதனோ கடவுளோடும் சகமனிதரோடும் சுபவ அன்பற்றவனாக இருக்கிறான்.

அப்படியென்றால் கிறிஸ்தவ ஐக்கியத்தில் வெற்றிபெற நாம் என்ன செய்ய வேண்டும்?

கிறிஸ்தவ ஐக்கியத்தில் வெற்றிபெற வேண்டுமானால் மூன்றில் செயல்படுங்கள்.
1.ஆவியில் செயல்படுங்கள் 2.அன்பில் செயல்படுங்கள் 3.தாழ்மையில் செயல்படுங்கள்

கிறிஸ்தவ ஐக்கியத்தில் வெற்றிபெற மூன்றை விட்டுவிடுங்கள்
1. சுயநலம் 2. பெருமை 3. கோபம் என்ற மூன்றை விட்டுவிடுங்கள்

ஆவியில் செயல்படுங்கள்

நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள (கலா 5:15); என்று பவுல் எச்சரிக்கிறார்.

அப்படியானல் மோதல்களை எதிர்கொள்ளும்போது மாம்சத்தின் கிரியைகளை வெளிக்காட்டாதிருங்கள். ஆவியின் கனியையே வெளிக்காட்டுங்கள். ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை (கலா 5:22,23).

நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது என்று யாக்கோபு சொல்லுகிறார்.

அன்பில் செயல்படுங்கள்

“அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (தீத்து 2:14).

ஆம் தேவன் நம்மை இரட்சித்ததின் நோக்கம் நம் பாவத்தை மன்னிக்கிறதற்காக மட்டுமல்ல, நம்மை அவருடைய குமாரனைப்போல மாற்றுவதற்காகத்தான்.

நாம் ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிறோம் என்பது தேவனுடைய அன்பு நமக்குள் இருக்கிறது என்பது மட்டுமல்ல, அது நாளுக்கு நாள் நமக்குள்ளே பெருகி, வளர்ந்து, பூரணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாயிருக்கிறது.

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்குப் பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் (1கொரி 13:4 – 7).

ஒருவருக்கொருவர் அன்பில் தொடர்ச்சியாய் கடன்பட்டிருங்கள்" என்றே பவுல் புத்தி சொல்கிறார்.

தாழ்மையில் செயல்படுங்கள்

ஏன் பிறரை நம்மால் மேன்மையாக எண்ணமுடியவில்லை? ஏன் அவர்கள் செய்யும் நல்ல காரியங்களை மேன்மையாக சொல்லமுடியவில்லை. நம் இருதயத்தில் இன்னும் மாயமாலமான தாழ்மை காணப்படுவது தான், அது நம்மை வெளிப்புறமாக தாழ்மையானவர்களாக நடிக்கும் படியாக செய்கிறது. சூழ்நிலைகள் மாறும் போது மாயமாலமான தாழ்மை பொறாமையாக மாறி தன்னை வெளிப்படுத்துகிறது.

பேதுரு இப்படியாக சொல்கிறார் இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது (1பேதுரு 3:4).

இஸ்ரவேலரின் முதல் அரசனாகிய சவுல் தன் பெருமையினால் இளம் இராணுவத் தலைவனின் வெற்றிகளைக் கண்டு பொறாமைக் கொண்டு தாவீதைக் கொலை செய்ய வகை தேடினான். தன்னிடம் உள்ள இளம் தலைவனின் திறமையை எண்ணி பெருமையோ சந்தோஷமோ அவனிடம் இல்லை. ஆனால் மிகுந்த மனத்தாழ்மையுள்ளவர்களாக இருங்கள் என்று வேதம் சொல்கிறது.

இன்று அநேகர் ஆவிக்குரிய வளர்ச்சி குன்றியும், ஒருவருக்கொருவர் கொண்ட அன்பில் தாழ்ச்சியும், மற்றவர்களோடு ஐக்கியம் கொள்ளாதிருப்பதற்கும் ஓர் முக்கிய காரணம் என்னவெனில், அவரவர் தாங்கள் செய்வதே சரி என்றும், தாங்கள் மாத்திரமே தேவனுக்கு பிரியமானதை செய்கிறோம் என்றும் எண்ணிக்கொள்கிறார்கள்.

மோசே வாலிபனாயிருந்த காலத்தில் பலமும் பராக்கிரமும் ஆணவமும் மிகுந்தவராயிருந்தார். ஆனால், மீதியானிய வனாந்தரத்தில் ஒரு மலையில் தேவனைச் சந்தித்தபின் அவருடைய இருதயம் பழைய நிலையிலில்லை. பூமியில் மிகவும் மனத்தாழ்மையுள்ள மனிதராக மாறினார். மோசே மீதியானிய வனாந்தரத்திலிருந்து வெளியே வந்தபோது, தாழ்மையாகிய பள்ளியில் பட்டம் பெற்றிருந்தார்.

வேதம் மோசேயேய் இப்படி சொல்லுகிறது மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான் (எண்.12:3).

மூன்றை விட்டுவிடுங்கள்

சுயநலம்

மனிதன் எப்பொழுதெல்லாம் சுயநலத்தால் ஆட்கொள்ளப்படுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனுக்குப் பரலோகக் கதவு அடைக்கப்படுகிறது.
எனவேதான் வனாந்திரத்தில் கிறிஸ்துவின் சுயநலம் முதலாவது சோதிக்கப்பட்டது என்பதை அறிவீர்களா? அவர் அந்தக் கற்களை அப்பங்கற்ளாக்கி புசித்திருந்திருப்பாரானால், அதாவது தாம் பெற்ற வல்லமையை தன் சொந்தநலத்துக்குப் பயன்படுத்தியிருப்பாரானால் இன்று நமக்கு ஒரு நம்பிக்கையும் இல்லாது போயிருந்திருக்கும். சுயத்தின் சுவடுகூட இல்லாத உலகின் முதல் மனிதன் இயேசு கிறிஸ்து. எனவேதான் அவர் வாயினின்று உலகம் கண்டிராத ஞானமும், வரலாற்றைப் புரட்டிப்போடும் ஆவிக்குரிய புரட்சிகளும் உண்டாயின. என்று நமது சுயத்தின் வேரருகே கோடரி வைக்கப்படுகிறதோ அன்று பரத்தின் கதவுகளும் பலகணிகளும் நமக்காகத் திறக்கப்பட்டு நாம் அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்கள் நமக்கு அறிவிக்கப்படுகிறது.

பெருமை

பெருமை நமது இருதயங்களில் சுபாவத்திலேயே குடிகொண்டிருக்கிறது. நாம் பெருமையிலேயே பிறந்தவர்கள். நம்மைக் குறித்தே நமக்கு சுயதிருப்தி! நமக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணம்! அறிவுரைகளுக்கு செவிகளை அடைத்துக் கொள்ளுதல்! அவனவன் தன்தன் வழியிலே செல்ல விரும்புதல்! இவைகள் பெருமையின் அவதாரங்கள்.

“ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக் கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய பிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை” (1கொரி 8:2) என்று வேதாகமம் எவ்வளவு தெளிவாக எடுத்துரைக்கிறது.

“இந்த உலகத்திலே இரண்டு காரியங்களைக் காண்பது மிகவும் அரிதானது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று, தாழ்மையுள்ள இளைஞன், இரண்டாவது திருப்தியுள்ள முதியவன்”

அறியாமையும், அனுபவமில்லாமையும்தான் பெருமைக்கு அஸ்திபாரமாக இருக்கிறது.

உலகத்திலே பாவமும், வருத்தமும், மரணமும் பிரவேசிக்க பெருமை காரணமாயிற்று.

“எவனாகிலும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்" (ரோம 12:3) இருக்கும்படியாக வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது.

கோபம்

ஆம்! ஆதிமுதல் மனிதனைஆண்டு அடிமைப்படுத்துகிற குணம். தேவன் ஆபேலின் பலியைஅங்கிகரித்தவுடன் காயினுக்குக் கோபம் வந்து விட்டது. தன் சொந்த சகோதரனைக் கொலை செய்தான். கோபம் மனிதனை மிருகமாக்கி விடுகிறது. கோபம் கண்ணை மறைத்துக் குருடாக்குகிறது. ஒரு விசுவாசி தொடர்ந்து இந்த பாவத்திற்கு அடிமையாயிருக்கக்கூடாது.

நாகமான் சுகம்பெறும்படியாக நீண்ட பிரயாணம் செய்து இஸ்ரவேல் தேசத்திற்கு வருகிறான். அவனுக்கு வேண்டியது சுகம். ஆனால் தீர்க்கத்தரிசி அவன் எதிர் பார்த்தவிதமாக வந்து அவனைத்தடவி சொஸ்தமாக்கவில்லை என்று அறிந்தவுடன் கடுங்கோபங்கொண்டான்.

கோபம் ஒரு மனிதனை, தன் சுயக்கட்டுப்பாட்டை இழக்கச்செய்கிறது. தான் பேசுவதில், செய்வதில், கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறான். ஒருவேளை நாகமான் அந்த கோபத்தோடே திரும்பிப் போயிருப்பானானால் அவன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இழப்பை அடைந்திருப்பான். நல்ல வேளை அவனுடைய ஊழியக்காரர் அவனைப்போல் கோபமடையாமல் அமைதலாய் அவனுக்கு எடுத்துரைத்தார்கள். அவன் கோபத்தோடே திரும்பி போயிருந்தால் வாழ்நாள் முழுவதும் குஷ்டரோகியாயிருந்திருப்பான்.

ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள். மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.

கோபத்தை சரியாக கையாளுங்கள். சாத்தானுக்கு கைப்பிடியைக் கொடுத்து விடாதிருங்கள்.

சில சமயங்களில் உங்களோடு ஒத்துப்போகாதவர்களை அன்புகூர்ந்திட நீங்கள் கஷ்டப்படுகிறீர்களா? ஆனால், இயேசுவோ தன்னைக் காட்டி கொடுக்கப்போகும் யூதாஸை கூட முடிவு பரியந்தமும் அன்பு கூர்ந்தாரே!

பிறரின் கோபத்தை எதிர்க்கும் நீங்கள் உங்களின் கோபத்தைத் தவிருங்கள்.

கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான் நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.

JamesG.Malaichamy M.Sc(Psy).,MSW

எழுதியவர் : (23-Oct-19, 11:07 pm)
சேர்த்தது : JamesGMalaichamy
பார்வை : 603

மேலே