உரிமைப் போராட்டம் - சிறுகதை

உரிமைப் போராட்டம் - சிறுகதை











எங்கும் ஒரே பரபரப்பு... ஆம். இன்றுதான்
தீர்ப்பு. கடந்த ஐந்தாறு நாட்களாக நவராத்திரி விடுமுறையாகிவிட்டபடியால் திங்கட் கிழமை எப்பொழுது விடியும். தீர்ப்பு என்னவாகுமோ என்று அனைவரும் பரபரப்பாக நீதிபதியின் வருகைக்காக அங்கும் இங்கும் அலைமோதிக்கொண்டு காத்திருந்தனர்.

அதிகாலையிலேயே மலர்க்கொடியும் குளித்துப் பூசி மெழுகி இறைவழிபாடு செய்துவிட்டுத் தன் இளம் மகன் முத்துக்குமரனையும் எழுப்பி அவனையும் ஒருவழியாகப் புறப்பட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

அரைகுறைத் தூக்கத்துடன் அம்மா! இன்று ஏன் என்னை இத்தனை சீக்கிரமாக எழுப்பிவிட்டீர்கள் என்று மழலை மாறாமல் கேட்டதும், கண்ணே உன்னையும் என்னையும் தவிக்கவிட்டு நாம் எவ்வாறு காலம் தள்ளுகிறோம் என்பதைக் கூட உணராமல் உன் தந்தையார் கூறும் ஒரே பதிலுக்காகத்தான் இத்தனை சீக்கிரம் கிளம்புகிறோம். இப்பொழுதே கிளம்பினால் தான் இன்னும் மூன்று மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தைச் சென்றடைய இயலும் என்று கூறினால் அக்குழந்தைக்குப் புரியவா போகிறது என்று எண்ணினாள் மௌனியாக..

அம்மா! என்னம்மா.... ஒன்றும் சொல்லமாட்டேங்கற? நாம எங்க போறோம்? நான் இன்னைக்குப் பள்ளிக்கூடத்துக்குப் போக்வேண்டாமா என்ற அக்குழந்தையின் கேள்விகளுக்கு சிறு புன்னகையை மட்டும் பதிலாக அளித்துவிட்டு, அவனையும் அழைத்துக்கொண்டு வாசல் கதவைத் தாழிட்டுவிட்டு வேக வேகமாகப் புறப்பட்டாள் பேருந்து நிலையத்தை நோக்கி.

விரைவுப் பேருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு அதிவேகமாகப் பறந்து சென்றுகொண்டிருந்தது. சன்னலோரமாக அமர்ந்திருந்த மலர்க்கொடியின் தலைமுடிகள் தென்னங்கீற்றுக்களாக காற்றை ஈடு செய்ய முடியாமல் அலைபாய்ந்துகொண்டிருந்தது. குழந்தை முத்து அவள் மடியில் எவ்விதச் சலனமும் இன்றி அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான். பேருந்தின் வேகத்தைப் போன்றே அதிவேகமாகப் பறந்தது அவள் மனமும் எட்டு ஆண்டுகளை முன்னோக்கி....

வாரணம் ஆயிரம் வலம் வரத் தோழி நான் கனாக் கண்டேன் என்ற ஆண்டால் நாச்சியாரின் பாடலுக்கு ஏற்ப அவளுடைய திருமணமும் வெகு விமர்சையாகக் காண்போர் கண்டு வியக்கும் வண்ணம், வண்ண விளக்குகள் அலங்கரிக்க, அத்தனை ஒளிவெள்ளமாகக் காட்சியளிக்கும் அந்தத் திருமண மண்டபத்தில் வெகு ஒய்யாரமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் தோரணங்கள் கண்சிமிட்ட, மத்தள மேளம் முரசொல்லிக்க. இன்னிசை நாதம் எங்கும் இசையொலெழுப்ப..... வருவோர் போவோர் அறுசுவை உணவு உண்டு சுவை மணம் மாறாமல், அச்சுவைப்பற்றி விமர்சித்துக்கொண்டிருக்க... அடடா! இதுவல்லவா திருமணம் என்று மூக்கின் மேல் விரல் நுனிவைத்து ஆச்சரியப்படத்தான் செய்தார்கள்.

இத்தனை விமர்சையாக அவர்கள் திருமணம் நடந்தேறியது. நாட்களும் ஓடின. செக்கச் செவேலென்று ஒளிபொருந்திய கண்களுடன் அவரவரவர் ஈன்றெடுத்தக் குழந்தையை விடுத்து இவனையே கொஞ்ச எண்ணும் தோற்றத்துடன், இவன் மாலவனா? அன்றி வேலவனா? யாரிவன்? அந்த மன்மதனா? என்று வியக்கும் வண்ணம் தங்கப் பிழம்பாய் ஜொலிஜொலிக்கும் பேரழகுடன் மலர்க்கொடியின் மகன் முத்துக்குமரன் காட்சியளித்தான்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுகாகக் கழிந்த அவர்களின் வாழ்க்கையில் சிறிது விரிசல் ஏற்பட்டு. விவாகரத்து ஆகும் அளவிற்குப் பெரிதாகத் தலையெடுத்து வெடித்தது.

தன் மனையாள் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு எவ்வாறு காலம் தள்ளுவாள்? அவளின் நிலை என்னவாகும்? என்றெல்லாம் சிறிதும் எண்ணிப்பார்க்கும் நிலையில் சக்திவேல் இல்லை. தாயின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தன்னை நாடி வந்திருக்கும் வாழ்க்கைத் துணையின் வாழ்வை சீரழித்துவிட்டான். நித்தம் ஒரு குற்றம்... நித்தம் ஒரு புகார் என்ற நிலையில் அவள் சீர்வரிசையாகக் கொண்டுவந்திருந்த பணம், நகைகள் அனைத்தும் ஈடு செய்ய இயலாத அளவிற்கு நாளுக்கு நாள் அழிந்துவந்தன. கையில் ஒன்றுமின்றி செல்லாக் காசாகிவிட்ட நிலையில் அவள் வீட்டை விட்டே விரட்டியடிக்கப்பட்டாள். விவாகரத்தும் ஆகிவிட்டது.

அவள் பெரிய அளவில் படிக்கவில்லையாயினும், பேரழகியாக இல்லையெனினும் பண்பாடுள்ள அவள் பணிக்குச் செல்ல ஆரம்பித்தாள். தன் குழந்தையைப் பேண அவள் வருமானம் போதுமானதாக இல்லாத நிலையில் வேறு வழியின்றி. தன் கணவன் மீதும் மாமியார் மீதும் வழக்குத் தொடர்ந்தாள். வாழ்வாதாரத்திற்கு பணம் வேண்டி, வக்கீலுக்குத் தரும் அளவிற்குக் கூட வசதியற்றவளாய் விளங்கினாள் அவள். இவள் மீது அனுதாபப் பட்டு கீழ்க்கோர்ட்டில் வழக்கும் தொடங்கியது.

. எதிர் தரப்பில் வாதித்த கணவனோ அவள் திருமணத்தின் போதே 75 சவரம் அளிக்கக் கூட அளவிற்கு வசதியுடன் இருந்தாள் என்பதையும், மேலும் அவளுக்கு பூர்வீகச் சொத்து வருவதற்கு வாய்ப்பு இருப்பதனையும் சுட்டிக் காட்டினான். இதனை செவியுற்ற நீதிபதி அவள் வழக்கை நிராகரித்துத் தீர்ப்பு வழங்கினார்.

மனம் சளைத்தாளில்லை மாது அவள். மேல் முறையீட்டிற்காகச் சென்றாள். பல நாட்கள் கால் கடுக்க நீதிமன்ற வாயிற்படியை மிதித்து ஓய்ந்த நிலையில் அன்றுதான் தீர்ப்பு ஒரு முடிவிற்கு வர இருந்தது. இதனால் தான் அவள் அத்தனை பரபரப்புடன் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தாள்.

முறைப்படி அந்த வழக்கினை கையாண்ட நீதிபதி ஏற்கனவே மலர்க்கொடி அவள் பாட்டியின் பூர்வீக சொத்து பெறுதல் பொருட்டு அளவற்ற தொகையைச் செலவிட்டிருப்பதனை அறிந்தார். மேலும் பிச்சையெடுத்தல், திருடுதல், கடன்வாங்குதல் போன்ற எவ்வித தீய பழக்கங்களிலும் ஈடுபடாமல், கண்ணியமாய் தனக்கு வாழ்வாதாரம் வேண்டும் என்று உரிமைப் போராட்டம் நடத்திய மலர்க்கொடியின் செம்மைப் பண்பு நீதிபதியை வெகுவாகக் கவர்ந்தது.

“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத செயல்.”
என்ற பொன்மொணிக்கிணங்க. மாது அவளின் மனம் குளிர தீர்ப்பளித்தார் நீதிபதி. உயரிய எண்ணத்தில். வாழ்வாதாரத்திற்காக சொத்துக்களை முழுமையாக இழத்தல் என்ற நிலை ஒருவருக்கு எப்பொழுதும் வரக்கூடாது. அதோடு நீதிமன்ற பணமாக மாற்றத் தகாத ஒரு சொத்தை கணக்கில் கருதக்கூடாது என்பதையும் அவர் அறிந்திருந்தமையால் மலர்க்கொடியின் கணவன் அவள் ஆயுள் உள்ளவரை அவளுக்கு வாழ்வாதாரத்திற்கென ஒரு தொகையினைக் கட்டாயம் தரவேண்டும் என்பதே அத்தீர்ப்பின் முடிவு.

மலர்க்கொடியின் உண்மைத் தன்மையும், அயறாத நம்பிக்கையும் அவளையும் அவள் குழந்தையையும் வாழவைத்தது. கணவன் கைவிட்டு விட்டான்.... எனக்கு இனி வாழ்வே இல்லை என்று தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் பெண்களுக்கு மத்தியில் உரிமைப் போராட்டம் நடத்தி, மலர்க்கொடி ஒரு ஒளிவிளக்காய் அவர்களின் அறியாமையை விரட்டும் அறிவுச் சுடராய் விளங்குகின்றாள்.
-------------------------------

எழுதியவர் : ஸ்ரீ.விஜயலஷ்மி (24-Oct-19, 4:09 pm)
பார்வை : 174

மேலே