ஏமாற்றக் கவிதை ‍- 11

ஏமாற்றக் கவிதை ‍- 11
====================

மத்தாப்பு வெளிச்சத்தில் உனைக்காண‌
கெத்தான அழகியாய் தான் இருந்தாய்..
பத்தோடு பதினொன்று என்று என்னை
ஏலத்தில் விட்டாயோ சரியாய் சொல்லு

சங்கு சக்கரமென சுற்றிவந்தேன்
எங்கும் உன்னை வாழ்த்திப் பாடிவந்தேன்..
அங்கும் இங்குமெனை சுற்ற வைத்து
மங்கும் படிக்கேன் பற்ற வைத்தாய்?

ஆயிரம் வாலாவை வெடித்துவிட்டாய்
கையாலில்லை மனதினால் அடித்து விட்டாய்...
மையினால் என் காதல் எழுதிவிட்டு
பொய்யினால் அதை நிரப்பி உலவவிட்டாய்!

சாட்டை பிடித்த உனைப்பிடிக்கும்
சாட்டையால் அடித்திடல் தான் சரியோ..
வேட்டை என் வாழ்வினில் நடத்த‌
கோட்டை தாண்டியோ வந்து விட்டாய்!

பாம்பு மாத்திரையாய் கொளுத்திநீயே
வீம்புக்கு கைத்தட்டி சிரித்து நின்றாய் ..
நாமென்ற சொல்லை ஏன் எழுதவில்லை
நானென்று எழுதியது ஏன்டி முல்லை!

சீனிவெடிக் கணக்காய் தூக்கிப்போட்டாய்
தேனி போல என்னை கடித்துவிட்டாய்..
நானிருக்கும் ஊரில் வெளிச்சம் இல்லை
சூரியனை ஏன்டி ஒளிய வைத்தாய்?

துப்பாக்கி எடுத்தென்னை சுட்டதென்ன‌
தப்பான முடிவெடுத்து கை விட்டதென்ன‌
அப்போலே போவென்று எனை விரட்டி
முப்பாலும் சிதைத்தாயே தேன் திரட்டி!

புஸ்வாணமாச்சே என் காதலிப்போ
அஸ்தமனம் ஆனாலும் உதிக்கும் எப்போ..
எனக்கான கதையினில் நீயேன் இல்லை
பிணக்கான என்னவளே இணக்கம் ஆவேன்?

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (25-Oct-19, 6:23 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 615

மேலே