காதலிக்கப்பட்டவள்

நெஞ்சில் பாய்ந்த எண்ணற்ற அம்புகள் ரணத்தை ஏற்படுத்தும் முன்னமே
நினைவரண்கள் அவற்றை தடுத்திருக்கின்றன. ரணமேற்படுத்தி வடுகாய்ந்த பிறகும்…. இன்றுவரை இரத்தம் கொப்பளிக்கும் வகையில் அம்பு எய்தவள் நீதான்.

என் மூளையிலுள்ள ஞாபகச் சத்திரம் இடியும்வரைக்கும் உன் நினைவுப் போர் அதில் நடந்துக்கொண்டுதான் இருக்கும்.

ஏகப்பட்டப் பாலைவனங்களை நான் நடந்தே கடக்கும்போதும்…….வாழ்க்கையின் சொல்லெண்ணா வெப்பத்தில் தணலாய் நான் அணற்றலுறும்போதும்… பகற்பொழுதில் அரைகுறையாய் உறங்கிவிட்டு இரவு முழுதும் ஆகாயத்தை வெறித்தபடி விண்மீண்களாய் நினைவுகளை சிதறவிடும்போதும்….

ஒருநாள் முற்பாதியும் பிறிதொரு நாள் பிற்பாதியுமாய் வரும் நிலவினைப் போல்
என்னை அரை வெளிச்சத்திலும் கால் வெளிச்சத்திலும் மாறி மாறி தள்ளாடவைக்கிறது உன் நினைவு முகம்.

உன்னைக் கடந்து நான் வர, வர நினைவுகள் முதுகுக்குப் பின்னே ஒரு முள்வேலியை போட்டுக்கொண்டே வந்தன.

சில நாட்களில்… என் சிந்தனை அடுப்புக்குள் விரகத்தீயால் உன் ஞாபக விறகுகள் எரியும்போது, நினைவுகள் போட்ட வேலியும் பற்றியெரிய ஆரம்பிக்கிறது. சாம்பலான முள்வேலிக்குப் பின், மங்கலான உன் முகம் களங்கலாய் கலங்கலாய் தெரிகிறது.

காலவரையறையில்லாமலும் அணற்பிராவகத்தால் வற்றிப்போகாமலும் எரிந்துக்கொண்டே ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு நதி.

நெருப்பால் இழைக்கப்பட்ட இரும்புத் தண்டின் முனை கருகும் முன்னமே.. செஞ்சூட்டம்புகளால் உன் பார்வைக் கணைகள் பாய்ந்தபோது, உன்னால் உருவாக்கப்பட்ட நந்தவனம் கொழுந்துவிட்டு எறிந்தது.

நாம் கண்களால் மட்டுமே பேசிக்கொண்டோம்.

அந்தப் பார்வைப் பேச்சிலிருந்த அனுபவத்தை நான் வேறெதிலும் சந்தோஷித்ததில்லை.

ஒர் கசங்கிய காகிதத்தில் அவசரமாய் ஆனாலும் அழகம்சமாய் ஒர் கோட்டோவியம் வரைந்துவிட்டுப் போனது போல் போய்விட்டாய்.

தெளிவான வானமாக இருந்த உன் மனதில் குழப்பம் என்ற காதல் மேகங்களை சஞ்சரித்தவன் நான்தான்..பின்னாட்களில் அந்த வெண்மேகங்களை கருமேகங்களாக்கி கண்ணீர்மழையை என் கண்களிலிருந்து சுரக்கவிட்டாய்.

மின்னல் வெட்டியது உன் கண்ணில். இடி இறங்கியது என் நெஞ்சில்.

அந்நாட்களின் கற்பனைகள் இன்னும் என்னை வதை செய்கின்றன.

உன் இதழ்களை நோக்கிய என்னுதடுகளின் நீண்ட யாசகத்தின் அலைபாய்வுகளினூடே ஓசையற்று வெளியேறும் உன் பேச்சுகள் தழுவிய காற்றால் நிசப்தமாய் இளைப்பாறும் கானல் முத்தங்கள் உன் சூட்சும புன்னகையால் நாணப்படவேண்டும்

உன் வலது முட்டிக்கு மேல் இடப்பக்கவாட்டிலுள்ள அந்த சின்னஞ்சிறு மச்சத்தில் என் முழுப்பெயரை எப்படியும் எழுதிவிடவேண்டும்.

ஒரு பௌர்ணமியில் கடற்கரையோர கட்டுமரத்தில் இருவரும் நேரெதிரே அமர்ந்து முகங்களுக்கு பக்கவாட்டில் நிலவு ஒளிக்கும்படி ஒருவரையொருவர் உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும்போதே நம் ஆவி பிரிந்துவிடவேண்டும்.

அந்நாட்களின் கற்பனைகள் இன்னும் என்னை வதை செய்கின்றன.

நீ என்னோடு பேசாத காதல் வார்த்தைகளை பேசுவதுபோல் என் நினைவுகளால்… எண்ணங்களால் பகிர்ந்துகொள்ளும் பிரம்மையார்ந்த உணர்வு எனக்கொரு அற்ப சந்தோஷந்தான்.

எத்தனைக் காதல்கள் இதுமாதிரி சலனங்களுக்குள் தடுமாறியிருக்கும்!

கரையை நோக்கிவந்து கால்களை கூசவைத்து… ஒரு புல்லரிப்பை உண்டாக்கிவிட்டு கரையில் தங்காமல் திரும்பிவிடுகின்றன் அலைகள். என் காதலுக்கான பணிவான உவமை.

ஊறிய நினைவுகளை…. உலரவைத்த தானியமென மன அரவையில் போட்டு அரைக்க முற்பட்டால், அது தூளாகி தூரே பறக்காமல் மாவாகி என் மனதை பிசைந்துகொண்டே இருக்கிறது.

அந்த உறங்கவைக்கா நினைவுகளை இறங்கவைக்கத்தான் துடிக்கிறேன்.

அடைய முயன்ற ஒன்று அகப்படாததன் ஆதங்க ஆத்திரத்தில் கரிந்துக் கொட்டி வசைபாடும் ஆணாதிக்க மனோபாவத்தை எண்ணி வெட்கப்பட்டவாறே இதை பதிவு செய்கிறேன்

அவ்வாறான பக்குவத்தை நல்கிய காலத்துக்கும் நேர்ந்த அனுபவங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்……

என் மேனிக்குள் இரத்தம் உறைந்து போவதற்குள்….
கனத்த என் உடல் பாடை ஏறும் முன்…..
உன்னை சந்தித்து விடவேண்டும்…. சந்தித்துவிடக் கூடாது
என்ற நிலையற்ற அர்த்தமற்ற எண்ணங்களுக்கு ஊடாகத்தான்
என் வாழ்க்கை அர்த்தமயமாய் நிலைப்பெற்றிருக்கிறது.

*************************************

எழுதியவர் : யேசுராஜ் (26-Oct-19, 12:23 pm)
சேர்த்தது : யேசுராஜ்
பார்வை : 465

மேலே