திரும்பத்திரும்ப
==================
நேற்று என்னை
திரும்பித் திரும்பிப் பார்த்தவர்
இன்றும் என்னை
திரும்பித் திரும்பிப் பார்ப்பாரென்று
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்.
திரும்பித் திரும்பித் பார்ப்பவரைத்
திரும்பத் திரும்பப் பார்க்கக் கூடாதென்றபடி
திரும்பாமலேயே சென்றுவிட்ட அவரை
திரும்பவும் பார்க்கக் கூடாதென
திரும்பிவிட்ட எனக்குள்
திரும்பவும் அவர் என்னைத்
திரும்பித் திரும்பிப் பார்த்திருப்பாரோ
என்ற எண்ணம் திரும்பத் திரும்ப
வந்துகொண்டே இருக்கிறது.
*
திரும்பத் திரும்ப
திரும்பும் திசையெங்கும் வருகின்ற
எண்ணங்களை திசை தெரியா இடத்திற்கு
அனுப்பிவைத்துத் திரும்பிப் பாராமல்
வந்துவிடவேண்டும் என்று தீர்மானித்துத்
திரும்பிப் பார்க்கிறேன் ..
அந்த எண்ணங்கள் தேர்தல் காலத்துப்
பதாகை ஏந்திய மதில்களாய் என்னைத்
திரும்பிப் பார்த்தபடியே இருக்கின்றன,,
**
**மெய்யன் நடராஜ்