நிலவே நீயே சொல்
நிலவே ! நீயே சொல்!
உயரே நிற்கும் நிலவே!
உன்னை ஒன்று கேட்கின்றேன்.
உலகில் தானே நீ பிறந்தாய் ? – இந்த
உலகைவிட்டு ஏன் பிரிந்தாய் ?
பெண்ணாய் நீயும் பிறந்தாயோ?
பிறந்த வீட்டையும் துறந்தாயோ?
உலகில் பிறந்து விலகிப்போனாய்.
உலகின் மீது உனக்கும் வெறுப்போ?
இல்லை -
உலகை நினைத்து ஒவ்வொரு நாளும்
உடலும் இளைத்துப் போகின்றாய். !
ஒளியைக் கொடுக்கத் தானே நீயும்
மீண்டும் மீண்டும் வளர்கின்றாய் !
ஆண்டுகள் கோடி நீயறிவாய்.
அன்னை பூமியைத் தானறிவாய்.
உலகில் தோன்றிய முதல் பிறவி.
உன்னதமான தனிப்பிறவி.
உலகில் உயிர்கள் பலகோடி.
பிறந்து பிறந்து தினம் மடியும்.
உலகில் பிறந்து மறையாதிருக்கும்
ஒன்றே அதுவும் நீதானே !
உனக்கும் முன்னே உலகம் இரவில்
இருளில் தானே இருந்திருக்கும் !
உனக்குப் பின்னே உலகில் இருளும்
விலகித்தானே போயிருக்கும்.
உலகைச் சுற்ற ஒவ்வொரு நாளும்
உன்னை நீயே சுற்றுகிறாய்.
உன்னால் உலகிற்(கு) துயரமில்லை! -இந்த
உலகால் உனக்கு துயர் வருமோ?
உலகம் அழியத் தொடங்கியதால்
உன்னை அறிய விழைகின்றோம்!
ஒருவழி இன்னும் புரியவில்லை.
உலகைவிட்டு விலகிச் சென்றும் - இந்த
உலகை நீயும் மறக்கவில்லை.
உலகில் உள்ள மனிதர்களோ
உலகை இன்றும் நினைக்கவில்லை.