இயற்கை வளம் 2

மரங்கள் தறிக்கும் மடமை விடுப்பின்
வரமாய் கிடைக்கும் வனம்.11
*
வனங்களில் நின்று வழிகின்ற செல்வம்
புனலெனும் தேனாம் புரி.12
*
புரியா மனிதம் புவனத்தின் மீது
மரியாதை கொள்ளவே மாற்று.13
*
மாற்றுக் கருத்துள மாந்தர் மனத்துக்குள்
ஆற்றைக் கடவுளாய் ஆக்கு .14
*
ஆக்கும் முயற்சிக்கு ஆற்றல் பலகொண்டத்
தேக்கு மனிதரைத் தேக்கு.15
*
தேக்கு மரம்போன்று தேயா உறுதியுடன்
பாக்கு மரங்களும் நாட்டு.16
*
நாட்டும் மரங்களால் நாளையுன் பேர்வாழக்
காட்டுக் கருணையைக் காட்டு.17,
*
காட்டும் கருணையில் காட்டை உயிர்ப்பித்து
நாட்டு வளம்நிலை நாட்டு.18
*
நாட்டு மனிதர்கள் நல்வாழ்வு வாழ்ந்திடாக்
.கேட்டைத் தடுத்திடும் காடு19
*
காடெனும் தாய்கண்ணில் கண்ணீர் சுரந்தாலே
வீட்டினில் தண்ணீர் நமக்கு.20
*
தொடரும்.....
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Dec-19, 2:25 am)
பார்வை : 126

மேலே