எண்ணம் சரிதானே

காற்றடைத்த பையால் உருவானேன்
காற்றடைத்து நான்..
எனக்கென்று விதித்த வரையறையில்..

காயம்பட்டு
கசிய ஆரம்பித்தால்
கருகிவிடும் என் வாழ்க்கை..

ஓட்டையற்று இருக்கும் வரை
ஓட்டை உள்ள மனிதர்கள்
விரும்புகிறார்கள் என்னை...

உயிர்க்காற்றை நிறைத்து
உதைக்கிறார்கள் என்னை
உருண்டோடுகின்றேன் நான்..

இங்குமங்குமாய்
அலைக்கழிக்கிறார்கள்
சில நேரம் மெதுவாக
சிலநேரம் ஆக்ரோசமாக...

மாறிமாறி உதைத்தாலும்
வலி தாங்கும் இடிதாங்கியாக
பழகிவிட்டது என் வாழ்க்கை...

வழிமறித்து நிற்பவரின்
உட்புகுந்து செல்ல
உதைக்கிறார்கள்...

நிற்பவரின் கைகளில்
தஞ்சம் புகுந்தால்
மார்போடு அணைக்கிறார்
ஆறுதலாய் என்னை...

அவரைத் தாண்டி
உள்ளே புகுந்தால்
விண்ணைப் பிளக்கிறது
கரகோஷம்..

எனக்கான வேஷம்
தஞ்சம் புகுவதா?
கரகோஷம் பெறுவதா?
புரியாமல் உருள்கிறேன்
எனக்கான ஆசை ஏதுமின்றி?

முழு பந்தாய் உருவாக்கி
கால் பந்து என பெயரிட்டு
காலால் உதைப்பவர்களே...

எனக்குள்ளே எண்ணுகிறேன்
ஒருமுறை என்னுள்ளே
நான்பெற்ற சுவாசத்துக்காக
இவ்வளவு உதைபடுகிறேனே
ஒவ்வொரு நொடியும்
காற்றை சுவாசித்து வாழ்கிற
காற்றடைத்த பையாகிய நீங்கள்
௭வ்வளவு உதைபடுவீர்கள் கடவுளிடம்..
எண்ணம் சரிதானே?

எழுதியவர் : அலாவுதீன் (15-Dec-19, 5:07 pm)
Tanglish : ennm sarithaane
பார்வை : 294

மேலே