சரியாக எழுத வேண்டும் – கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை என்பது கலித்துறையின் வகைகளுள் ஒன்று. கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள். துறை என்பது பா இனத்தின் ஒரு வகைக்குரிய பெயர்.

எழுத்தெண்ணிப் பாடுகிற பொழுது ஒற்றெழுத்துகள் (புள்ளி வைத்த எழுத்துகள்) அனைத்தையும் விட்டுவிட்டு, உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துகளை மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம்.

ஒரு (செய்யுள்) அடி நேரசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர்.

இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்.

ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர்கள் இருக்கும். அவை செப்பலோசை கொண்டதாக இருக்கும். செப்பலோசை என்பது வெண்டளை கொண்ட சீர்ப்பிணைப்புகள். ஐந்து சீர்களில் இறுதியில் உள்ள சீர் 'விளங்காய்' வாய்பாடு கொண்டிருக்கும்.

ஏனைய நான்கில் 'விளங்காய்' வாய்பாட்டுச் சீர் வராது. மா, விளம், காய் வாய்பாட்டில் முடியும் சீர்கள் மட்டுமே வரும். பாடல் பொதுவாக ஈற்றடி ஈற்றுச்சீர் 'ஏகாரத்தில்' முடிவது வழக்கம்.

என் நண்பர் ஒருவர் பணியிலிருந்த பொழுது எழுதிய விடுமுறை விண்ணப்பத்தில் give me leave என்றெழுதியிருந்தார். ஆனால் 6 ஆம் வகுப்பில் நான் படிக்கும் காலத்தில் விடுமுறை விண்ணப்பம் எழுதப் பயிற்சியளிக்கும் பொழுதே grant me leave என்றுதான் எழுதச் சொல்லித் தருவார்கள்.

கட்டளைக் கலித்துறை

ஆங்கிலம் தங்கிலீ ஷாய்வரு மேதமிற் பள்ளிகளில்
ஈங்கு விடுப்பு பெறநா மெழுதுவோம் கிவ்மிலீவ்தான்
ஆங்கிலப் பள்ளியில் ஆங்கில மாங்கில மாகவரும்
ஈங்கு விடுப்பைப் பெறவே யெழுது கிராண்ட்மிலீவே.

குறிப்பு:

மேலேயுள்ள பாட்டில் முதல் நான்கு சீர்களில் மா, விளச்சீர்களே வருகின்றன. எல்லா அடிகளிலும் ஈற்றுச்சீரில் விளங்காய் வாய்பாடு வருகிறது. ஈற்றடி ஈற்றுச்சீர் ஏகாரத்துடன் முடிகிறது. நான்கு அடிகளும் நேரசையில் ஆரம்பித்து ஒற்றெழுத்துகள் நீங்கலாக 16 எழுத்துகளே வருகின்றன. இப்பாடல் கட்டளைக் கலித்துறையாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Dec-19, 7:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 127

மேலே