ஜோசஃபைனுக்குச் சொல்லி அனுப்ப வேண்டும்

நகைச் சுவைச் சிறுகதை.

ஜோசஃபைனுக்குச் சொல்லி அனுப்ப வேண்டும் !!

முருகேசனுக்குக் கொஞ்ச காலமாக அதிகக் கோபம், எதற்கெடுத்தாலும் பதற்றம், தேவையில்லாத சீற்றம் எல்லாம் அடிக்கடி வந்து தொல்லை தருகின்றன. வேறு யாராவது இருக்கும் போது கூட மனைவியிடமும் மகளிடமும் கடுகடுப்பாகப் பேசுகிறான். மற்றவரகளிடம் முகம் கொடுத்துப் பேசுவதற்குக் கூட எரிச்சலாக உணர்கிறான். யாருக்கும் அடக்கமாக நடப்பதில்லை. அவனுடைய உடைகளையும் ஏதோ ஒரு போர் வீரனின் உடைகளைப் போல மாற்றிக் கொண்டிருக்கிறான். அடிக்கடி தன்னை நெப்போலியனாக நினைத்துக் கொண்டு வீட்டில் உத்தரவு மேல் உத்தரவாகப் போட்டுக்கொண்டு ஒரே ரகளை!!

தன் மனைவி ஜானகியை "ஜோசஃபைன்" (நெப்போலியனின் மனைவி) என்றும், தன் அப்பாவை "கார்லூ போனபார்ட்டே" (நெப்போலியனின் தந்தை) என்றும், மகனை "ஜெரோம் போனபார்ட்டே" (நெப்போலியனின் மகன்) என்றும் கூப்பிடத் தொடங்கி விட்டான்!

அவன் அப்பா, பெரும்பாடு பட்டுத் தனக்கு நன்கு அறிமுகமான ஒரு மனநல மருத்துவரிடம் அவனை இழுத்துச் சென்று பக்குவமாக வைத்தியத்திற்குச் சம்மதிக்க வைக்கிறார்.

மருத்துவர் வெங்கடாசலபதி, எப்போதுமே இம்மாதிரி ஆட்களுக்கு மிகவும் அநுசரணையாக வைத்தியம் செய்பவர்.ம்ருந்து மாத்திரைகள், அதிர்ச்சி வைத்தியம், எலக்ட்ரோ இதல்லாம் செய்து செலவு வைக்க மாட்டார்.

அமைதியாகப் பேசி, அவனுடைய போக்கிலேயே அவரும் நடந்து கொண்டு, படிப்படியாக முருகேசனை அவர் தயார்ப்படுத்தி மருத்துவம் செய்கிறார். "இதோ பார் முருகேஷ்! உனக்கு நோயெல்லாம் ஒன்றுமே கிடையாது பயப் படவோ வருத்தப் படவோ தேவையே இல்லை! நான் சொல்வதை மட்டும் அப்படியே கடைப் பிடி. விரைவில் உனது மனக் குறை, கோபம், பதற்றம் எல்லாம் மறைந்து விடும்!" என்று உறுதி கூறி அவனுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். முருகேசன், "அப்படியா டாக்டர்? மிக்க மகிழ்ச்சி! உடனே இதை ஜோசஃபினிடம் சொல்லுங்கள்!" என்கிறான்!.

ஆறேழு மாதங்களாக அவனுக்கு அவருடைய ஆலோசனைகளின்ப்டி, குறைந்த மருந்துகள் மற்றும் மனவலிமை தரும் பயிற்சிகள் வழியாக மருத்துவம் நடந்தது. அதுவரை எல்லாரும் கிரேக்கர்களாக அவனிடம் காட்டிக் கொண்டு சமாளிக்கிறார்கள்!.
முருகேசனும் இப்போதெல்லாம் சாந்தமாக நடந்து கொண்டு தனது சிடு சிடுப்பை வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக்கிறான்.

இன்று அவனுக்குக் கடைசிப் பயிற்சி. அதற்காக யாரையும் துணைக்கு அழைக்காமல் அவனாகவே மருத்துவருடைய வீட்டிற்குச் செல்கிறான்.
சில இறுதிக் கட்டப் பரிசோதனைகளைச் செய்தபின் டாக்டர் வேங்கடாசலபதி அவனிடம், "முருகேஷ்! எதிர் பார்த்ததற்கு முன்னதாகவே உனது மனக் குறைகள், சீக்கிரமாக வேகமாக நீங்கி வருகின்றன! இனிப் படிபடியாக மருந்துகளையும் பயிற்சிகளையும் குறைத்து, விரைவில் முழுதாக நிறுத்தி விடலாம் அப்பா! மகிழ்ச்சிதானே? இனிமேல் உனக்கு முன்பு மாதிரி அந்த "நெப்போலியன், ஜோசஃபைன், கார்லூ போனபார்ட்டே, ஜெரோம் போனபார்ட்டே பிரமை எல்லாம்" நிச்சயமாக வராது!" என்று சொல்கிறார்.

அதற்கு முருகேசன் சொல்கிறான், "அப்படியா, டாக்டர் பேரி ஓமேயரா! (நெப்போலியனின் அந்தரங்க மருத்துவர்), எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!! இப்போதே இந்த நல்ல செய்தியை ஜோசஃபைனுக்கும், ஜெரோமுக்கும், என் அப்பா கார்லூ போனபார்ட்டேவுக்கும் சொல்லி அனுப்புகிறேன்! ருஸ்தமைக் கூப்பிடுங்கள்! நான் போர்முனைக்குப் போவதற்கு முன் அவர்களிடம் விவரமாகப் பேச வேண்டும்!"

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (26-Dec-19, 5:18 am)
பார்வை : 117

மேலே