பதவி அமையின் பணிவுடையன் ஆகி உதவி புரியின் உயர்வு - பதவி, தருமதீபிகை 574

நேரிசை வெண்பா

பதவி அமையின் பணிவுடையன் ஆகி
உதவி புரியின் உயர்வாம் - உதவிநலம்
செய்யா(து) அகம்செருக்கின் தேசம் அவனைமேல்
வையா(து) இகழும் வலிந்து. 574

- பதவி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தனக்கு ஒரு பதவி அமையின் பணிவுடையனாகி மக்களுக்கு ஒரு உதவி புரியின் அது அவனுக்கு மிகவும் உயர்வாகும்; உதவி நலம் செய்யாமல் உள்ளம் செருக்கி நின்றால் அவனை உலகம் எள்ளி இகழ்ந்து கீழே தள்ளும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், பதவியின் உதவியை உணர்த்துகின்றது.

பதவி என்னும் சொல்லுக்கு உயர்ந்த இடம் என்பது பொருள். சிறந்த பொறுப்புள்ள இடத்தில் அமர்ந்திருந்து காரியங்களைப் பதமாய்ச் செய்து வருதலால் அந்த நிலை பதவி என வந்தது.

’பதவிமோகம்’ என்னும் பழமொழியால் அந்த அதிகார நிலையில் மனிதர் கொண்டிருக்கும் மதிப்பும் பேராவலும் அறியலாகும். உலக நிலையில் பல பேர்க்குக் தலைவராய் நிலவி வருதலால் அதிகாரிகள் உயர்ந்த மதிப்புடையராய்ச் சிறந்து நிற்க நேர்ந்தனர். சிறப்புரிமைகள் களிப்பு வகைகளாய்க் கலித்து வந்தன.

கல்வி, செல்வங்களால் அமைகின்ற மதிப்பை விட, அதிகாரத்தால் அமைந்து வருவது யாரும் வியந்து காணும்படி விரைந்து வேலை செய்கிறது. காரியங்களைக் தலைமையாய் நின்று நடத்துவது அதிகாரம் என வந்திருத்தலால் அதன் நிலைமையும் நீர்மையும் நேரே தெரியலாகும்.

பொருள் வருவாயோடு பலரும் மதித்துப் போற்றும் மாட்சி மருவியுள்ளமையான் பதவி அதிசய நிலையில் துதி செய்ய நின்றது. அதனை அடைய மனிதன் படாதபாடு படுகின்றான். அதற்கு உரிய தகுதி தன்னிடம் இல்லையாயினும் அதன்மேல் பிரியம் மீதூர்ந்து பேராசையுறுகிறான். எப்படியாவது அதனை அடைந்து கொள்ள அவாவி உழலுகிறான்.

பொருளை உயிரினும் இனியதாகக் கருதி இறுகப் பிடித்திருக்கும் கொடிய உலோபிகளும், பதவியைப் பெறும் பொருட்டுப் பெரும்பொருளை வாரி வீசி விடுகின்றார். அதிகார ஆசையில் மதி மாண்டு போய் அந்த மனிதர் படுகிற பாடுகள் அதிசய விந்தைகளாய் விரிந்து நிற்கின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

வந்தவருக் கரைக்காசு மனமார வழங்காத
..வளமை வாய்ந்த
அந்தநிலை யுடையவரும் ஆயிரமா யிரமாக
..அள்ளி வீசி
இந்தவொரு தேறுதலில் எனைத்தேற்ற வேண்டுமென
..ஏங்கி நிற்பார்;
எந்தவிதம் இவர்நிலையை இங்கெண்ணித் தேறிநான்
..இசைப்பேன் அம்மா! – கவிராஜ பண்டிதர்

இந்தப் பாட்டு இந்தக் கால நிலையைக் காட்டி வந்துள்ளது. தேறுதல் - தக்கவன் என்று பலரால் தெரிந்து எடுக்கப்படுதல்.

’தேறுதலில் தேற்ற வேண்டும்’ என்றதிலுள்ள நயத்தைத் தேர்ந்து தெரியின் நகைச் சுவைகள் நேர்ந்து வரும்.

சட்டசபையில் ஒருவன் ஒரு தானத்தை அடையவேண்டின் பொது சனங்களிடமிருந்து பல வாக்குரிமைகளை அவன் பெற வேண்டும் என்று புதிதாய் ஒரு சட்டம் விதிமுறையில் விளைந்து வந்தது. அதன்படி அந்தப் பதவியை அடைய இந்த நாட்டில் நடந்த நாடகங்கள் பல. அந்த நாடகக் காட்சிகளுள் தலைமையான ஒன்றை மேலே வந்துள்ள பாடல் படம் பிடித்திருக்கிறது. M.L.A. என்ற வெறும் இந்த மூன்று எழுத்துப் பட்டத்தைப் பெறச் செல்வர் சிலர் வறியராக நேர்ந்துள்ளனர் என்றால், பதவி எவ்வளவு பெரிய மோகமுடையது என்பது எளிது தெளிவாம்.

இத்தகைய பதவியை அடைந்து கொண்டவன் எத்தகைய நிலையிலும் தன்னை உத்தமனாகப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். அங்ஙனம் கொள்ளானாயின் எல்லாராலும் எள்ளப்பட்டு இழிந்து படுவான். உரிய இயல்பு திரியின் அரிய உயர்வு அயலாகின்றது. செயல் உயரச் சீர்த்தி உயர்கின்றது.

பதவி அமையின் பணிவுடையன் ஆகி’ என்றது அதிகாரம் கிடைத்தால் மனிதன் அமைந்து ஒழுக வேண்டிய அமைதியை உணர்த்தி நின்றது. அகங்காரம், செருக்கு, மமதைகள் பதவியில் விளையுமாதலால் அந்த இழி விளைவுகள் தழையாதபடி மனத்தை விழுமிய நிலையில் பழக்கிக் கொள்வது நல்லது. நயனுடைமை பயனுடைமை ஆகிறது.

உள்ளம் நல்ல நீர்மையில் பழகிப் பண்பட்ட பொழுதுதான் மனிதன் எல்லாவகையிலும் இனியனாய் விளங்குகிறான். பணிவும் பண்பும் அவனுக்கு அணிகளாய் அழகு செய்கின்றன. நல்ல தன்மையில் எல்லா நன்மைகளும் குடி கொண்டுள்ளன.

ஒருவன் உயர்ந்த மனிதனாக வேண்டுமானால் அவனிடம் சிறந்த குணங்கள் பல அமைந்திருக்க வேண்டும். இனிய நீர்மைகள் மனிதனைத் தனி நிலையில் உயர்த்துகின்றன. இனிமை குறைந்த அளவு அவன் இன்னாதவனாய் இழிந்து போகிறான். இழிவும் உயர்வும் இயல்பின் வழியே விழி தெரிய வருகின்றன.

சிறந்த அதிகாரப் பதவியில் உள்ளவன் தன் கடமையைச் சரியாகக் கருதிச் செய்யின் அவன் நல்ல கரும வீரனாய்ப் பெருமை பெறுகிறான். உரிமையை உணராமல் உள்ளம் செருக்கின் சிறுமை அடைந்து சீரழிகின்றான்.

நாட்டு மக்களுக்கு இதத்தை நாடி நல்ல காரியங்களைக் கண்ணுான்றிச் செய்ய வல்லவனே ஆட்சிக் குழுவில் இருக்க உரியவன். அவ்வன்மையும் தன்மையும் இல்லாதவன் தனக்கும் பிறர்க்கும் நன்மை செய்ய இயலாதாதலால் அவனது இருப்பு பலர்க்கும் வெறுப்பாகின்றது.

’மேல் வையாது இகழும்’ என்றது கருமங்களைக் கருதிச் செய்யாதவன் கடையாய் இழிவான் என்பதைக் காட்டி நின்றது. அதிகார நிலையில் மேலாயிருந்தாலும் விதி முறை தெரிந்து மதியூகமாய் நடந்து கொள்ளானாயின் அவனை உலகம் உயர்வாக மதியாது; கீழாகவே எள்ளி இகழ்ந்து தள்ளிவிடும். தாழ்வு நேராமல் தன் பதவியை இதமாகப் பாதுகாத்துக் கொள்ளுகின்றவன் அதிசதுரனாகின்றான். மதியூகம் எவ்வழியும் மாண்பு தருகின்றது.

தன்னுடைய உயிர் வாழ்வுக்கு உயர்மதிப்பாய் அமைந்த அதிகாரப் பதவியை விதிமுறையே பேணி ஒழுகாமல் வீணே செருக்கு மிகுந்து நின்றால் அவன் விரைந்து இழிந்து படுவானாதலால் அந்த உள்ளத் தருக்கின் ஊனமும் ஈனமும் உணரலாகும். தன் நிலைமையை உணர்ந்து கருமங்களை உரிமையோடு செய்து பணிவும் பண்பும் தோய்ந்துவரின் அவன் தருமவானாய் உயர்ந்து திகழ்கிறான்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

பதவிமேல் உயர்ந்தான் தன்னுயர் நிலையின்
..பான்மையை முன்னுற அறிந்து
மதம்,ஒழிந்(து) எவர்க்கும் எளியனாய் இனிய
..வாய்மொழி உடையனாய் என்றும்
இதமுடன் ஒழுகின் இருமையும் பெருமை;
..இன்பமும் புகழுமென் மேலாய்
நிதமும்வந் தெய்தும்; நித்தனும் அவனை
..நித்தனாய்ச் செய்குவன் நினைந்தே. - வீர பாண்டியம்

இதனை இங்கே உய்த்துணர வேண்டும்; என்றும் தலைமை அதிபதியான இறைவன் எதிரே நின்று கருமம் புரிவதாக உரிமையோடு பயந்து அதிகாரி தொழில் புரிந்துவரின் விழுமிய பலன்களை அவன் எளிதே அடைந்து கொள்ளுகிறான். தெய்வ பயம் திவ்விய மகிமையாகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Dec-19, 5:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 73

மேலே