புத்தாண்டு பவித்ரா

இரவான இரவில் அமைதியின்
நீள் தொடர்ச்சி இடையிடையே
சிறு சிறு கேவல்களும்
விம்மல்களுமாய் நிசப்தமான
பேச்சின் ஒலிகள் எங்கிருந்தோ

இவை அனைத்தையும்
கட்டுப்படுத்துவதுபோல்
பேரமைதி குடிகொண்டிருக்கும்
சுற்றுப்புற சூழலை மெல்லிசையாய்
பனியுடன் நனைத்து கொண்டிருந்தார்
இளையராசா தன் இசைக்கோர்வைகளால்

மென்மேலும் தூக்கத்தை கடத்திச்செல்ல
வான் நிலவும் முயற்சித்துக்கொண்டே
இருக்க தனிமை என்று ஏதுமில்லை
என்பதை உணர்ந்து கொண்ட மனது

சில்வண்டின் ரீங்காரமாய்
தன்னை வெளிப்படுத்திக்கொண்டது
அவள் அல்லியாய் மலர்ந்திருக்கும்
இவ்வேளையில் நினைவில் எழுதி முடித்த

கவிதை கண்முன்னே
நடைபோடும் அதிசயமாய்

படித்து முடித்த பின்பும்
வெட்கம் கூடிக்கொண்டே இருக்கும்
தீபத்தின் பிரகாசமான அவளை
காதலால் எச்சில் படுத்திய இரவுகளை
எண்ணிக்கொண்டிருக்கையில்

பத்து ஒன்பது எட்டு ஏழு
என குறைந்து கொண்டே வந்த
நொடிகள் சுழியத்திலிருந்து
பிறந்த புத்தாண்டு தொடக்கத்தில்
மீண்டும் ஓன்று இரண்டு மூன்று என

அவளுக்கு நானும் பரிமாறிக்கொண்ட
முத்தங்களின் எண்ணிக்கையாய்
முன்னேறிக்கொண்டிருந்தது காலம்
உணரமுடியாது விரிவடைந்துகொண்டே
செல்லும் பிரபஞ்சத்தைப்போல....

எழுதியவர் : மேகலை (31-Dec-19, 5:10 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 267

மேலே