அரூபக்காதலி

ஒரு கனவு
நீ தன்னந்தனியே மெல்லிய இருளுக்குள் உனை
ஒளித்துக்கொண்டு
எதற்காகவோ ரகசியமாய்
அழைக்கிறாய்.
உன் குரலின் ஓசை அந்த
இருளான அறையின்
மூலைமுடுக்குகளெங்கும் நிரம்பி
இறுதியாய் எனை அடையும்போது
பேரிரைச்சலாய் நிறைகிறது..
சிறிது பயத்துடன் உன்னை
பார்க்கும் என்னை
பெயர்சொல்லி மீண்டும் அழைக்கிறாய்
இப்போது அந்த அழைப்பு
என் காதுகளை எட்டாதவகையில்
மிக மெலிதான நீலநிற
கற்றையாய்
காற்றோடு கலப்பதை
பார்க்கிறேன்..
எதற்காகவோ சிரிக்கிறாய்
இப்போது நினைவிற்கு வருகிறது
முன்பு ஒரு காலத்தில்
எனை காதலித்தவள் நீ
உயிர் நீ உலகம் நீ
என
பித்தமேறி அலைந்தவள் நீ
உன் செய்கைகள் ஒவ்வொன்றையும்
எனக்கானதாய்
மாற்றிக்கொண்டவள் நீ..
நிராகரித்தேன் என்பதற்காக
சபிக்காமல்
இன்னும் உன்னை அதிகமாய்
காதலிப்பேன்
என சபதமிட்டவள் நீ
பிறகு உன்னை நான் பார்க்கவே இல்லை
என் கண்களுக்கு அகப்படாமல் எங்கோ ஒளிந்துகொண்டாய்..
ஒரு தேடல் என்னுள் உருவானது
உண்மைதான்..இருப்பினும்
தேடலை தவிர்த்துவிட்டேன்
உனைப்பற்றிய சிந்தனையையும்
உதறிவிட்டேன்..
மறந்துவிட்ட என்னை இன்றுநீ
மீண்டும் இம்சிக்கத்துவங்கி இருக்கிறாய்
அதி தீவிரமாய்
உன் அந்த சிரிப்பு
எனக்குள் ஊடுருவி உனைத்தேடச்சொல்கிறது..
எதற்காகவோ அழைத்தாய்.
என்ன நேர்ந்தது உனக்கு??
அதற்குப்பின் ஏன் உன்னை
மறைத்துக்கொண்டாய்?
இன்னும் என்னை காதலிக்கிறாயா?
இத்தனை கேள்விகளை உனை
எங்குதேடிப்பிடித்து நான் கேட்பேன்..
அரூபமாய் உலவும் நீ
இறந்திருக்கக்கூடாது என
இந்த நொடியில்
பிரார்த்திக்கிறேன்..

Rafiq

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (4-Jan-20, 11:43 am)
சேர்த்தது : Rafiq
பார்வை : 129

மேலே