என் முகம் பார்க்க எப்ப வருவாய்
பரந்த காற்றுவெளியில்
கட்டற்ற காடுபோல
உன் அடர்ந்த கருங்கூந்தல்
காற்றிலே தவழ்கிறது ....
மலையின் முகட்டிலிருந்து
கசிந்துவரும் நீர்ச்சுவைபோல
உன் உதட்டின் இதழிலிருந்து
கசிந்துவரும் தமிழோ!
என்னை தலைகீழா
சுற்றவைக்கிறது .....
முழுமதியை தேடிச்செல்லும்
முகில்போல - உன்முகம் தேடி
பின்தொடர்ந்து வருகிறேன்
பரந்த காட்டுவெளியில்......
நீயோ !
வானம் வரைந்த
மேகஓவியமாய்
காற்றுவெளியிலும் -காட்டுவெளியிலும்
ஒழிந்து ஒழிந்து
மறைந்து செல்கிறாய்-----
பறை இசையின் ஒலிபோல
பாறையிலிருந்து - நீ பாடும்
புல்லாங்குழல் இசையோ !
பனியில் துளிர்த்த
பண்ணிசையாய்
என் இதயம் வந்து சேர்கிறது ----
காற்றுவெளியிலும்
காட்டுவெளியிலும்
பூலோகத்திலும்
மறைந்திருந்து
என்னை ஏங்கவைப்பவளே!
பனி மறைத்த - பச்சை
மூங்கிலும் பகலவனால்
என்னைப்பார்த்து சிரிப்பது போல் ----
என் முகம் பார்க்க
எப்ப வருவாய் ?
யாரும் உன்னை
தீண்டக்கூடாது
என்பதற்க்காக
ரோஜாவை சுமக்கும்
முள்போல
என் இதயக்கூட்டில்
உன் கற்பனை
முகத்தை பாதுகாத்து
வைத்திருக்கிறேன்...
என் முகம் பார்க்க
எப்ப வருவாய் ?
பனிக்குடம் உடைந்து
வெள்ளிக்குடமாய்
வெளிவரும் மழலையை
முத்தமிடும் தாய்போல
உன்னை முத்தமிட காத்திருக்கிறேன் .......
உன் காதலை
காற்றிலே சொன்னவளே
என்னை நேர் நோக்க
நீ எப்ப வருவாய்யென
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
இந்த பரந்த பூலோகத்தில் .