சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்-

சுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்
---------------------------------------------------------------------
சுனில் அண்ணாவின் முதல் நாவல்* வாசித்தேன் ஆசான். சித்தத்தில் பல முறை நிகழ்ந்தபின் சொற்களில் நிகழ்ந்திருப்பதால் முதல் நாவலுக்குரிய எந்த தடுமாற்றமும் காணவில்லை நிச்சியமாக இது சுனில் அண்ணாவின் முதல் நாவல் என்று கூற இயலாது. இங்கு என்னுடைய வாசிப்பு அனுபவத்தை பகிர்கிறேன்.

நீலகண்டம் நாவல் ஒரு குறிப்பிட்ட அரங்கிற்குள் நிகழும் கூத்தை மேலேயிருந்து பார்க்கும் தோற்றத்தை வாசகனுக்கு தருகிறது.அரங்கிற்கு மேலேயிருந்து காணும் பொழுது கூத்தில் கதாநாயகர்கள்,கதாநாயகிகள் கிடையாது யாவரும் நாயகர்கள், நாயகிகள் தான் அதே போல நாவல் வர்ஷினியை சுற்றி நிகழ்ந்தாலும் செந்தில்,ரம்யா,ஹரி என அவர்களின் பார்வையை கொண்டு நோக்கும் போது அவர்களுக்கே உரிய தனி வாழ்வு எழுகிறது இது நாவலுக்கு பன் முகத்தன்மையை அளிக்கிறது.எடுத்து வளர்த்த குழந்தையின் ஆட்டிச குறைபாட்டை ஒரு குடும்பம் எதிர் கொள்வதையே நாவலின் பெரும்பாலான பக்கங்களில் நிகழ்ந்தாலும் நாவலின் கச்சிதத்தன்மையிலிருந்து நிகழ்வுகளை நெகிழ வைக்கிறது இந்த பன்முகத்தன்மை. இது நாவலுக்கு இலக்கியத்தன்மையை அளிக்கிறது.

நேர் பார்வையில் ஒழுங்கான செயல்கள் கூட மேலேயிருந்து நோக்கும் போது ஒழுங்கு கொண்டு நேர் கோட்டில் நிகழ்வதல்ல எனவே நிகழ்வுகளை பின் தொடர்ந்த செல்லும் வாசகனை எதிர்பாரத இடத்திற்கு கொண்டு சென்று அகத்திற்கு அதிர்ச்சியை அளிக்கிறது.அதிர்ச்சியின் வழியே மற்றொரு ஒழுங்கை சித்தம் சமைக்கிறது.

நாவலை வாசிக்கும்பொழுது நான்கு முறைக்கு மேல் இத்துடன் நிறுத்திவிடுவோம் எனத் தோன்றியது ஏனெனில் அக ஆழத்தின் நுட்பமான சில இடங்களை தொட்டு உள அதிர்வை அளித்தது ஆனால் அது சுட்டுவது உண்மை, தவிர்க்க இயலாதது. திடீரென உண்மை முன்னால் தோன்றும் போது நடுக்கத்தை அளிக்கிறது. அந்த உண்மைகளை சொற்களால் நேரடியாக சுட்ட இயலாது நிகழ்வுகளால் அவற்றின் திசை நோக்கி குறிக்க இயலும் ;அது போதும் நான் யாரென அறிவதற்கு. ஒரு கணம் நானும் செந்திலும் , அண்ணாமலையும், நந்தகோபாலும் ஒன்றென்று உண்மையை உணரும்போது அதிர்ந்தேன் நானல்ல என்று கூறினேன் பிறகு உணர்ந்தேன் நீலகண்டன் தொண்டையில் உள்ள ஆலகால விஷம் என்னுள்ளும் உள்ளது என்று அதை சுட்டையில் உணர்ந்தேன் நானும் விஷமென்று.

நாவலில் இடையிடையே வரும் விக்ரமன், வேதாளம் கதை நாவலுக்கு கதை சொல்லும் தன்மையை அளிக்கிறது. கதைத்தன்மை சித்தத்தை வெளியே விடுவதில்லை மேலும் மேலுமென கதைக்கு ஏங்கச் செய்கிறது. நாவலின் இந்த வடிவமைப்பே அந்த உள அதிர்வுக்கு இடையிலும் நாவலை விடாமல் வாசிக்கச் செய்தது இது இந்த நாவல் அமைப்பின் சிறப்பு எனக் கருதுகிறேன்

தொன்மம், நாட்டார் கதை, ஆன்மீகம், தத்துவம் ஆகியவற்றை கொண்டு நவீன உலகின் சிக்கலை எதிர்கொண்டு மாறாத எப்போதுமுள்ள சிக்கலை கண்டறிய முயலுகிறது இந்த நாவல் இது தனிப்பட்ட முறையில் என்னோட ரசனைக்கு மிகவும் அணுக்கமானது அந்த வகையில் இது எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்.

தி.ஜினுராஜ்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நஞ்சைப் பகிர்ந்தளித்தல், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்- ஸ்ரீனிவாசன்
-------------------------------------------------------------------------------------------------------------------
உடல்/உளக்குறை கொண்ட குழந்தையை வளர்ப்பதில் உள்ள சிக்கலை யதார்த்தமாகச் சொல்லி நம் கண்ணீரை வரவழைக்கப் போகும் கதை என்பதே படிக்கத் துவங்கியதும் ஏற்படும் மனப்பதிவு. சரி, முதலிலும் இடையிலும் இந்த வேதாளம் விக்ரமன் விவகாரம் எதற்கு? யோசிக்காமல் படிப்போம்… பேக்மேன், கடலாமை கதை? இருக்கட்டும்… திடீரென மெடியா, சுடலை நாடகம்? ஓ, ஆசிரியர் உத்திகளை கைக்கொண்டு தான் சொல்ல வரும் கதையை ஒரு ‘நாவலா’க்க முயற்சிக்கிறார் போல. சரளமான எழுத்து என்பதால் வேகமாக படித்துச் சென்றுகொண்டிருக்கும்போதே இதெல்லாம் தோன்றிவிடுகிறது. (யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’, ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ இதையெல்லாம் நாமும் படித்திருக்கிறோம் என்ற ஆணவம் ஒன்று இருக்கிறதே!)

ஆனால் படித்து முடித்து இரவுறங்கி அதிகாலை விழித்த போது அமைதி இழக்கச் செய்தது. நம் குடும்பத்திலேயே, நண்பர் வட்டத்திலேயே இந்தக் கதையை நாம் பார்த்துக்கொண்டிருக்கக்கூடும். வானதி-வல்லபியையாவது அறிந்திருப்போம். ஆனால், நாமறிந்த, அனுபவித்த ஒன்றோடு தொடர்புபடுத்திக் கொள்வதால் மட்டும் வரும் நிலைகுலைவு அல்ல நாவல் ஏற்படுத்துவது. மனிதன் குடும்பமென, சமூகமென தொகையாக வாழத்தொடங்கிய காலந்தொட்டே நம்மை துரத்திவரும் நஞ்சை சுவைப்பதால் வருவது.

மையக்கதையின் நிகழ்வுகள், மொழிநடை எல்லாம் வாசகனின் இரக்கத்தையும் கருணையையும் கோரி நிற்பதுபோல் பிரமை எழுகிறது. (இன்றைய இலக்கிய மதிப்பீடுகளைக் கொண்டு இதை ஒரு குறையாகக் கூறலாம்). இதற்கு நேர்மாறாக தொன்மங்களும் குழந்தைக் கதைகளும் மெய்மையை இரக்கமின்றி முன்வைக்கின்றன. இதன் மூலம் கதையாடலில் ஒரு பெரும் சமநிலை உருவாகிறது.

கலையில் கைத்திறன் என்பதற்கு சற்று தாழ்வான இடமே தரப்படுகிறது. ஆனால் இங்கு கைத்திறன் கலை நிகழ உதவியிருப்பதாக உணரமுடிகிறது. கதையின் மையப்பிரச்சனை நிகழ்காலத்தையது மட்டுமல்ல என்பதை தொன்மங்கள் மூலம் உணர்கையில் எல்லா கதைமாந்தருமே முக்கியமானவர்களாக மாறிவிடுகிறார்கள். குறிப்பாக ஆலகாலம் பற்றிய தொன்மம் மிகச்சிறப்பாக மீளாக்கம் செய்யப்பட்டுள்ளது.

எல்லா உறவாடல்களிலும் திரண்டு வரும் நஞ்சில் ஒரு ‘மிண்ட்’ அளவு எடுத்து ’இந்தா, அதக்கிக் கொள்’ என்று ‘நீலகண்டத்தை’ கொடுத்திருக்கும் சுனில் கிருஷ்ணனுக்கு நன்றியும் வாழ்த்துகளும்!

ஸ்ரீனிவாசன்

எழுதியவர் : தி.ஜினுராஜ்.--------------------&--------------ஸ (26-Jan-20, 1:55 am)
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே