இயற்கை வளம் 10

=====================
இயற்கையைக் காக்க வியன்றள வேனும்
முயற்சி யெடுக்க முயல்.91
*
முயலொடு ஆமை முயன்று செயித்தப்
பழங்கதைக் கேட்டுப் படி.92
*
படித்தக் கதைபோல் படிப்படி யாகப்
பிடித்த விதையெடுத்துப் போடு.93.
*
போடும் விதையிப் புவிமேல் மரமாகி
நாடும் நிழல்கொடுக்கும் நம்பு.94
*
நம்பு மியற்கை நலமொடு வாழ்ந்திடத்
தெம்பூட்டுந் தேனமுதத் தாய்.95
*
தாய்மார்பில் பிள்ளை தனித்தருந்தும் பாலென
நோய்தீர்க்கும் பச்சிலை நூறு.96
*
நூறு வருசத்து நோயற்ற வாழ்வுனக்கு
ஆறெனப் பாயச்செய் ஆறு. 97.
*
ஆறு பலநூறு ஆடியோ டிவந்தாலே
சோறுண் டெவர்க்குமெனச் சொல்லு 98
*
.சொல்லைச் செயலாக்கிச் சுந்தர பூமியில்
எல்லை யிலாவின்ப மெய்.99
*
மெய்யின்ப வாழ்வது மேலும் வளமாக்கக்
கைகூப்பு வாயியற்கை கா.100.
**முற்றும்**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (27-Jan-20, 1:28 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 420

மேலே