ஒரு தாயின் காதலிது
எனை ஆள என்னுள் உருவான
தேவதை நீ
என் இதயத்துடிப்பினை வெகுஅருகில்
கேட்டவள் நீ
பரிசுத்த அன்பினை உனக்கு பரிசளித்துக்கொண்டே இருப்பதில் அவ்வளவு ஆனந்தமடி..
நீ எப்படிப்பட்டவளென்றால்
என் பொறுமையின் எல்லையினை
விரிவுபடுத்தியவள்
குறும்புகளாலும் தவறுகளாலும்
உருவாகி குழைபவள்
கண்டிக்கும்பொழுதில்கூட அள்ளி அணைத்திடும் பேரன்னை..
வெள்ளிநிலவில் பூத்த
தங்கமலர்
உயிரினில் விளைந்த
உணர்வு
நீ பிறந்த நொடியில் மாறியதடி
என் வாழ்க்கை
கையில் ஏந்திய பிரபஞ்ச அதிசயம்
எவ்வாறடி தேர்ந்தெடுத்தாய்
எனை உன் அன்னையென?!
நீ பூத்த தருணத்தில்
நான் உணரவில்லை
நீ தான் என் உலகமென்று..
உன் சிரிப்பினில்
குறும்பினில்
கோபத்தினில்
அழுகையினில்
அள்ளி அணைத்திட எப்போதும்
உனக்காக காத்திருக்கிறேன்..
உவமை ஏதுமில்லாப்பெருங்காதலடி
உன்மேல்
வானத்தை அளக்கும் பட்டாம்பூச்சியாய் வாழ்க நீ
மேகத்தில் துளிர்த்த பன்னீர்த்துளியாய்
வாழ்க நீ
காலத்தை கரைத்த காதலென
வாழ்க நீ
உன் வருங்காலம் மென்மேலும் பொன்னாய் மிளிர
புன்னகையும் கனவுகளும் எந்நாளும் வளர
ஆழ்மனதின் தூய அன்போடு வாழ்த்துகிறேன்
வாழ்கவாழ்க வாழ்கவென்று..