மும்மூர்த்திகள்

'மும்மூர்த்திகளாகிய சிவன், விட்டுணு, பிரமன் ஆகியவர்களின் பெயர்கள் அமைந்திருக்க வேண்டும். அவர்கள் தின்னும் கறி, உண்ணும் உணவு, ஏந்தும் ஆயுதம், பூணும் அணிகள், ஏறும் ஊர்திகள் வசிக்கும் இடங்கள் இவை எல்லாம் வரவேண்டும். ஒரு வெண்பாவை இத்தகைய முறையிலே உம்மாற் பாட முடியுமோ? என்றனர் புலவர் ஒருவர்.

நேரிசை வெண்பா

சிறுவ னளைபயறு செந்நெற் கடுபூ
மறிதிகிரி தண்டு மணிநூல் - பொறியவரம்
வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி. 36

என்று காளமேகம் அதற்கு இசையப் பாடினார். புலவர் அயர்ந்து போனார்.

பிரமன் சிவன் திருமால் ஆகிய மும்மூர்த்திகளுக்கு பிள்ளையும் வெண்ணெயுமே கறிகளாம்; செந்நெல் விஷம் பூமி மூன்றுமே உணவுகளாம்; தண்டம் மான்மறி சக்கரம் இவையே ஆயுதங்களாம்; முப்புரிநூல், புள்ளிகளையுடைய பாம்பு, கெளத்துவமணி இவையே அணிகளாம்; அன்னம், வெள்ளை ஆன் ஏறு, கருடப்புள் ஆகியவையே வாகனங்களாம்; தாமரை மலரும், கைலைமலையும் பாற்கடலும் ஆகிய மூன்றுமே வாழும் இடங்களாம் என்கிறார் கவி காளமேகம்.

இவ்வாறு சொற்களைக் கூட்டிப் பொருள் உரைக்கவும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Feb-20, 3:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 107

மேலே